செவ்வாய், 20 ஜூன், 2017

TANA அமெரிக்காவில் தெலுங்கு மொழியில் திருக்குறள் + பறை முழங்க அதிர்ந்தது செயின்ட் லூயிஸ் மாநிலம்


பறை இசை செயிண்ட் லூயிஸ்(யு.எஸ்). வட அமெரிக்க தெலுங்கு அசோசியேஷனின் மாநாட்டில் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் (த்ரிவர்கமு) பாடல்களுடன், பரத நாட்டியம் நடனமும் பறையிசையும் அதிர வைத்தது.
டானா (TANA) என்றழைக்கப்படும் வட அமெரிக்க தெலுங்கு அசோசியேஷனின் ஆண்டு விழா மிகவும் பிரசித்து பெற்றதாகும். இந்த ஆண்டு விழா செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது. அமெரிக்கா முழுவதிலிருந்தும் 5000 பேர் பங்கேற்றனர்.
ஆந்திரா மாநில துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அமைச்சர் கம்மிநெனி ஸ்ரீனிவாஸ், தெலுங்கானா மாநில தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ராமாராவ், பாராளுமன்ற உறுப்பினர் முரளி மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் சிறப்பு நிகழ்ச்சியாக அமெரிக்க நிகழ்கலைக் கழகத்தின் பறையிசை இடம் பெற்றது. பறையிசையுடன், த்ரிவர்கமு பாடல்களுக்கு சிறப்பு இசை அமைத்து நடனத்துடன் அரங்கேற்றினர். தொடர்ந்து பறை இசைக்கு ஏற்ப நடனப் பெண்கள் பரதநாட்டியம் ஆடினார்கள்.





த்ரிவர்கமு

த்ரிவர்கமு

திருக்குறளை 15 பேர் தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார்கள். அதில், தலபட்டு ஸ்ரீராமுலு ரெட்டியின் த்ரிவர்கமு (முப்பால்) நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டது.
மூன்று பாலிலும் உள்ள குறட்பாக்களின் தெலுங்கு மொழிபெயர்ப்பை, திருபுவனம் ஆத்மனாதன் இசையமைத்து பாடி பதிவு செய்து அனுப்பியுள்ளார்.





பறைக்குப் பாராட்டு

பறைக்குப் பாராட்டு

செயிண்ட் லூயிஸ் நாட்டிய பதாஞ்சலி குழுவினர் நடனமாடினர்.
திருக்குறளை (த்ரிவர்கமு) நடன வடிவில் அரங்கேற்றியது இதுவே முதல் நிகழ்ச்சியாகும்..
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, முடிந்தவுடன் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அமெரிக்கத் தமிழர்களின் பறையிசை மாநாட்டின் சிறப்பு அம்சம் என்றுவிழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்தார்கள்.






ஐடி காரர்களின் ஜாலம்

த்ரிவர்கமு குறட்பாக்களைக் கொண்டு பாடலை உருவாக்கியவர் திருபுவனம் ஆத்மனாதன். நடனத்தை நாட்டிய பதாஞ்சலி குழுவின் ஆசிரியர் பிரதிபா சுதிர் அமைத்திருந்தார். மேலாண்மையை அசோக்கும், பறை இயக்கத்தை பாலாவும், பயிற்சியாளராக செந்தில் நாயகிவும் பொறுப்பேற்றிருந்தனர்.
தாள இயக்கம் நந்தா, பின்னணி யசோதா, ரம்யா, கவிதா, ஒருங்கிணைப்பு ரமேஷ் செருபலா, கலை வடிவாக்கம் இரா பொற்செழியன் என பத்திற்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சி அமைப்பை ஏற்பாடு செய்திருந்தனர். உடன் 40 கலைஞர்கள் பங்கேற்று கொண்டு நிகழ்ச்சியை வழங்கினார்கள். இவர்கள் அத்தனை பேரும் கணிணித் துறையில் மென்பொருள் வல்லுனர்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

முதல் முதலாக கைகோர்த்த திருக்குறளும் பறையும்

பறையிசையை தமிழர்கள் நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், அமெரிக்க நிகழ்ச்சிகளிலும் ஏற்கனவே நடத்தியுள்ளார்கள். தற்போது முதன் முதலாக மற்றொரு தென்னிந்திய மொழியில், அதுவும் திருக்குறள் மொழி பெயர்ப்புடன் கூடிய நிகழ்ச்சியை வழங்கி பறையிசைக்கு சிறப்பு சேர்த்துள்ளார்கள்.
அடுத்து கன்னடம், மலையாளம், இந்தி உட்பட ஏனைய இந்திய மொழிகளிலும் பறையிசையுடன் திருக்குறள் நடனமும் அமெரிக்காவில் தொடரும் என நம்பலாம்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் பறையிசையை அறிந்திராத அமெரிக்காவில், தற்போது எட்டுத் திக்கும் ஒலிக்கச் செய்ததில் அமெரிக்க நிகர்கலைக் கழகத்தின் பறையிசைக் குழுவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
-இர தினகர்  tamiloneindia

கருத்துகள் இல்லை: