வெள்ளி, 23 ஜூன், 2017

மீராகுமார் ஆதரவு . நிதீஷ்குமாரை லாலு வலுயுறுத்தல்... பீகார் ஆட்சி நீடிக்குமா?

பாட்னா: ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு, பீஹாரில் ஆளும் கட்சியாக உள்ள, ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி, காங்., வேட்பா ளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், பீஹாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபகாலமாக, நிதிஷ் குமாருக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கும், கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது.தன் மகன்கள் மீதான ஊழல் புகார்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால், லாலு, மிகவும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், ஜனாதிபதி தேர்த லில், பா.ஜ.,தலைமையிலான தே.ஜ., கூட்டணி, பீஹார் கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்தை, வேட்பாளராக அறிவித்துள்ளது.

தலித் சமூகத்தைச் சேர்ந்த கோவிந்தை ஆதரிக்கப் போவதாக, ஐக்கிய ஜனதா தளம் அறிவித் துள்ளது; இது, லாலு தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் சார் பில் நிறுத்தப்பட்டுள்ள மீரா குமாரை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, நிதிஷ் - லாலு இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வரும்
நிலையில்,ஐக்கிய ஜனதாதளத்தின் இந்த முடிவால், பீஹாரில் கூட்டணி உடையுமா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், ஐக்கியஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் கூறியதாவது:

பாதிப்பு இல்லை

பீஹாரில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகத் தான் மாபெரும் கூட்டணி அமைத்தோம். ஜனாதிபதி தேர்தலை, இதனுடன் ஒப்பிடக் கூடாது. தலித் சமூகத்தை மேம்படுத்த வேண்டும் என்பது, ஐக்கிய ஜனதா தளத்தின் லட்சியம். இதற்காக, பீஹார் அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பீஹார் கவர்னராக, ராம்நாத் கோவிந்த் சிறப்பாக செயல்பட்டார்; தலித் சமூகத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதனால் தான், ஜனாதிபதி தேர்தலில், அவரை ஆதரிக்க, ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்தது. இதனால், பீஹாரில், கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது. எங்கள் முடிவு, கூட்டணி தர்மத்தை மீறிய செயலும் இல்லை. இவ்வாறு சரத் யாதவ் கூறினார்.

'பா.ஜ.,வில் மீண்டும் சேருவதா?'

''பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் மீண்டும் சேருவது என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, ஐக்கிய ஜனதாதள செய்தி தொடர்பாளர், தியாகி கூறினார்.

டில்லியில் அவர் கூறியதாவது:

பீஹார் கவர்னராக, ராம்நாத் கோவிந்த், எந்தவித பாரபட்சமும் இன்றி, நேர்மையாக செயல்பட்டார். அதனால் தான், ஜனாதிபதி தேர்தலில், அவரை < ஆதரிக்க, நிதிஷ் குமார்முடிவு செய்தார். ஜனாதிபதி தேர்தலுக்காக எடுக்கப்பட்ட முடிவு தான் இது. இதனால்,தே.ஜ., கூட்டணியில், நாங்கள் மீண்டும் சேருவோம் என்ற பேச்சுக்கே இட மில்லை. அப்படி ஒரு ஆசை, பா.ஜ.,வுக்கு இருந்தால், அது நிறைவேறாது.

ஏனெனில், மோடி அரசின் செயல்பாடுகளை, நாங்கள் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறோம்.மோடி அரசின் மூன்றாண்டு கால ஆட்சியில், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு தியாகி கூறினார்.

நிதிஷை கேள்வி கேட்பேன்லாலு பிரசாத் ஆவேசம்

பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான, லாலு பிரசாத் கூறியதாவது:ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளரை ஆதரிப்பது என, ஐக்கிய ஜனதா தளம் எடுத்த முடிவு, துரதிர்ஷ்டவசமானது. விரைவில் நிதிஷ் குமாரை சந்தித்து, ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள் என, நேருக்கு நேர் கேட்பேன்; அவரது மனதை மாற்ற முயற்சிப்பேன்.

கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்ட இந்த கருத்து வேறுபாடு காரணமாக, பீஹாரில், ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. வழக்கம் போல், நிதிஷ் குமார் தலைமையிலான அரசு, மக்கள் பணியாற்றும். இவ்வாறு அவர் கூறினார். தினமலர்

கருத்துகள் இல்லை: