செவ்வாய், 20 ஜூன், 2017

No more Departure Card - வெளிநாடு செல்பவர்கள் குடியுரிமை பத்திரம் பூர்த்திசெய்ய வேண்டியதில்லை

குடியுரிமை படிவத்தைப் பூர்த்தி செய்ய தேவையில்லை!
மின்னம்பலம் : பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் குடியுரிமை படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் குடியுரிமைத்துறை படிவத்தைப் பூர்த்திசெய்வது கட்டாயமாக இருந்தது. இந்தப் படிவத்தில் பயணியின் பெயர், பாஸ்போர்ட் எண், பிறந்த தேதி மற்றும் பயணத்துக்கான காரணம் ஆகிய விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்தச் செயல்பாட்டினால் பயணிகள் விமானத்துக்குச் செல்வதற்குக் காலதாமதம் ஏற்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஜூன் 14ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை 1ஆம் தேதி முதல், வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள், குடியுரிமை படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள், விசா மற்றும் டிக்கெட் பெற, தங்களது விவரங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், குடியுரிமைத்துறை சோதனையில், சம்பந்தப்பட்ட நபரின் விவரங்கள் சோதனை செய்து பதிவு செய்யப்படுகிறது. மேற்கூறிய காரணங்களே போதுமென்ற அடிப்படையில், குடியுரிமை படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய சலுகை விமானப் பயணிகளுக்கு மட்டும் பொருந்தும். மற்றபடி, கப்பல் மூலமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்குப் பொருந்தாது. ஏற்கெனவே, 2014ஆம் ஆண்டு பயணிகள், குடியுரிமை படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: