சனி, 27 பிப்ரவரி, 2016

கூனி குறுகி கும்பிடு போட்டால் குபேரன் ஆகலாம்...தியாக தீபங்கள்

முதல்வர் ஜெயலலிதாவின் கண்ணில் பட்டு, 'சீட்' கிடைத்துவிடாதா என ஏங்கும், அ.தி.மு.க., நிர்வாகிகளும், தொண்டர்களும், அவர் செல்லும் வழிநெடுக காத்து கிடக்கின்றனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள அ.தி.மு.க.,வினர், ஜெயலலிதா செல்லும் பாதையில் நின்று, அவரை கும்பிடுவது வழக்கமான ஒன்று. ஆனால், தற்போது, பிற மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும், ஜெயலலிதாவை கும்பிட, நாள் கணக்காக சென்னையில் காத்திருக்கின்றனர்.மேற்கு மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், வாரத்தில், நான்கு நாட்கள் சென்னையில் தங்குகின்றனர். இவர்கள் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.  கூலிப்படை வைத்துதான் பணம் செய்யவேண்டும் என்று அவசியம் இல்லை, குனியும் படை என்று ஒன்றை திரட்டி வைத்து கூட பணம் சம்பாதிக்கலாம் போல இருக்கே..


தகவல் சேகரிப்பு :
முதல்வர் செல்லும் நிகழ்ச்சி, பாதை பற்றிய தகவலை, போக்குவரத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு போலீசாரிடமிருந்து பெறுகின்றனர். பாதை பற்றி அறிவது மட்டும் முக்கியமல்ல, எத்தனை மணிக்கு போயஸ் தோட்டத்திலிருந்து முதல்வர் வெளியே வருவார் என்றும், நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு எத்தனை மணிக்கு வீடு திரும்புவார் என்ற தகவலும், இவர்களுக்கு முக்கியம்.
சரியான தகவல் மற்றும் பாதையை அறிவதற்கு,'கவனிப்பு'களும் நடக்கிறது. இதோடு மட்டும், போலீசாரின் உதவி நின்று விடுவதில்லை. முதல்வர் அமர்ந்திருக்கும் கார் கண்ணாடி பகுதி பார்த்து நிற்கவும், எந்த இடத்தில் நின்றால், அவரது பார்வை,தங்கள் மீது படும் என்பதும் மிக அவசியம்.

இதற்காக, உரிய இடத்தை, சாலையோரம் தேர்வு செய்து, அங்கு நிற்க வேண்டும்.இந்த இடத்தேர்வுக்கும் போலீஸ், 'தயவு' அவசியம். முதல்வரின், 'வாகன கான்வாய்' செல்லும் பகுதியில், சாலையோரம் நிற்க, பொதுவாக யாரையும், போலீசார் அனுமதிப்பதில்லை. எனவே, அப்படி நிற்க போலீசாரின் தயவு தேவை. இதையும், அ.தி.மு.க.,வினர், 'பெற்று' விடுகின்றனர்.

குறிப்பாக, போயஸ் தோட்டத்திலிருந்து, ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்பும் இடம், ராணிமேரி கல்லுாரி சந்திப்பு, நேப்பியர் பாலம், போர் நினைவு சின்னம் போன்ற பகுதிகளில், முதல்வரின், 'கான்வாய்' மெதுவாகச் செல்லும். எனவே, இந்த இடங்களில் நின்றால், முதல்வரின் பார்வை தங்கள் மீது படும் என்பதால், இப்பகுதிகளில் நிற்க போட்டா போட்டி.லாட்ஜில் ரூம் போட்டு தங்கியிருக்கும் வெளி மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள், தொடர்ந்து முதல்வர் பார்வையில் படுவதற்காக,அவர் போயஸ் தோட்டத்திலிருந்து வெளியே வரும்போதும், மீண்டும் வீட்டுக்கு திரும்பும்போதும், நின்று கொண்டே இருப்பர்.

எட்டாக வளைத்து...:
முதல்வர் கார் செல்லும்போது, உடலை எட்டாக வளைத்து, பெரும் கும்பிடு ஒன்றை போடுவார்கள். வளைந்து, குனிந்து கும்பிடு போடும்போது, ஜெயலலிதா தன்னை பார்த்தாரா என்பது, கும்பிடுவோருக்கு தெரியாது. எனவே, முதல்வர் தன்னை பார்த்தாரா என பார்த்து சொல்ல, கூடவே ஒரு, 'உதவி'யை வைத்திருப்பர்.அவர்கள், 'அம்மா எப்படி பார்த்தார்' என்பதை விரிவாக, கும்பிடு போட்டவருக்கு விளக்கி சொல்வார்.

அவர், கும்பிடு போடுபவரின் தீவிர விசுவாசியாக இருப்பார். இவருக்கும், லாட்ஜில், 'டாஸ்மாக்' சரக்கு, சிக்கன் போன்ற சிறப்பு 'கவனிப்பு'கள் உண்டு.முதல்வர் வீடு திரும்பி விட்டால், பிரமுகர்களும் லாட்ஜுக்கு திரும்பி விடுவர். மீண்டும் ஜெயலலிதா எப்போது நிகழ்ச்சிக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்போடு, போக்குவரத்து போலீசாரிடம் விசாரணையைத் துவங்கி விடுவர்.இதுபோல் கும்பிடு போட்டு, பலர் எம்.பி., - எம்.எல்.ஏ., மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில், பதவிக்கு வந்துள்ளனர் என்ற பேச்சு, அ.தி.மு.க., வட்டாரத்தில் பலமாக உள்ளது. எனவே, இந்த வழியை தொடர்ந்து பலரும் பின்பற்றுகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: