சனி, 27 பிப்ரவரி, 2016

இளங்கோவன் எச்சரிக்கை: விவசாயத்துக்கு வருமான வரி விதித்தால் பெரும் புரட்சி வெடிக்கும்

இந்தியாவிலுள்ள விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கிற வகையில் மத்திய பாஜக அரசு விவசாயிகளின் வருமானத்திற்கு வரி விதிக்க முனையுமேயானால், அதை முறியடிக்கிற வகையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''நேற்று வெளியிடப்பட்ட பாஜகவின் பொருளாதார ஆய்வறிக்கையில் விவசாய வருமானத்திற்கு வரி விதிக்க வேண்டும் என்கிற கொடூரமான பரிந்துரை வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பாஜக ஆட்சியில் பலமுனைகளில் பல்வேறுவிதமான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் விவசாயத்திற்கு வருமான வரி என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாகும்.
விவசாயிகள் வருமானம் என்பது நிலையற்ற ஒன்றாகும். விவசாயிகள் உப்பு விற்கச் சென்றால் மழை பெய்வதும், மாவு விற்கச் சென்றால் காற்று அடிப்பதும் காலம் காலமாக இருந்து வருகிற நடைமுறையாகும்.
ஏற்கனவே மத்திய காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட விவசாயிகளின் நில உரிமையை காக்கிற நில கையகப்படுத்துதல் சட்டத்திற்கு மாற்றாக மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் அவசர சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சி செய்தது. இந்தியாவிலுள்ள விவசாயிகள் கடும் கொந்தளிப்பான எதிர்ப்பு நிலை எடுத்ததோடு, ராகுல்காந்தி களத்தில் இறங்கி போர்க்குரல் எழுப்பியதால் பாஜக ஆட்சியாளர்கள் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோல, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை முடக்குகிற வகையிலும், உணவு பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற மறுக்கிற நிலையிலும் மத்திய பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விவசாயிகளின் விலை பொருளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக மத்திய காங்கிரஸ் அரசு விவசாய விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் குழு அமைத்தது. அக்குழுவின் பரிந்துரைப்படி விவசாயிகளின் விலை பொருளுக்கான உற்பத்திச் செலவோடு, அதில் 50 சதவீதத்தை கூடுதலாக சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சமீபத்தில் பரிந்துரை செய்திருந்தது. இதுவரை மத்திய பாஜக அரசு அதை பரிசீலிக்கக் கூட தயாராக இல்லாமல் அந்த பரிந்துரையை கிடப்பில் போட்டிருக்கிறது.
தனியார் பிடியிலிருந்து விவசாயிகளை மீட்பதற்காக விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குகிற திட்டத்தை மத்திய காங்கிரஸ் அரசு அமல்படுத்தியது. 2003-04 இல் பாஜக ஆட்சியில் ரூ.83 ஆயிரம் கோடியாக இருந்த விவசாயிகளின் கடன், மத்திய காங்கிரஸ் ஆட்சியில் 2014-15 இல் ரூ.8 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் தற்போது 7 சதவீதமாக உயர்த்தப்பட்டு விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த பின்னணியில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல ஏற்கனவே பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிற விவசாயிகளின் வருமானத்திற்கு வரியா ? என்று கேட்டு கொந்தளிப்பான சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். நகரங்களைப்போல தங்கள் வருமானத்தை வரவு-செலவு செய்யவோ, கணக்கு எழுதி வைக்கவோ எவ்வித வசதியும் இல்லாமல் கிராமப்புறங்களிலே வாழ்ந்து கொண்டிருக்கிற விவசாயிகளின் வாழ்க்கை முறையை சரியாக புரிந்து கொள்ளாத நரேந்திர மோடி அரசு இத்தகைய முடிவுகளை எடுக்க முனைவதை விவசாயிகள் முறியடித்துக் காட்டுவார்கள்.
இந்தியாவிலுள்ள விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கிற வகையில் மத்திய பாஜக அரசு விவசாயிகளின் வருமானத்திற்கு வரி விதிக்க முனையுமேயானால், அதை முறியடிக்கிற வகையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்க விரும்புகிறேன்.
அதேபோல சோனியா காந்தி வழிகாட்டுதலில் மன்மோகன்சிங் ஆட்சியில் 2005 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க ரூ.72 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதிலும் விவசாயிகள் கடன் சுமையில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். இதை போக்குகிற வகையில் மத்திய பாஜக அரசு விவசாயிகள் கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். தினமணி.com

கருத்துகள் இல்லை: