சனி, 27 பிப்ரவரி, 2016

சீமான் பெரியாரை வந்தேறி என்றும், பார்ப்பனர்களை தமிழர்கள் என்றும் சொல்லும் பித்தலாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் வன்னி அரசு, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது ஆவேசம் கொண்டு எழுதியுள்ள பதிவு இது:;">நாம் தமிழர் கட்சியின் தலைவர் அண்ணன் சீமான்னை மிகக் கடுமையாக விமர்சித்தவர்களுள் நானும் ஒருவன். 'அட்டகத்தி சீமான்' என்றே என் கட்டுரைக்கு தலைப்பிட்டுள்ளேன். பின்னர் தனிப்பட்ட சந்திப்புகளின் போது அவர் நட்பு நிமித்தமாக தன்னை விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் அவரை விமர்சிப்பதை நிறுத்துக் கொண்டேன். அவ்வப்போது அவர் செய்து வந்த கோமாளித்தனங்களையும் பொருட்படுத்தாமல் கடந்து சென்றேன்.

இன்று அவர்  அளித்துள்ள பேட்டி ஒன்றில்,   அவர் முட்டாள்தனத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
'இப்போது மதுஒழிப்பு பற்றி பேசும் வைகோ, மதுக்கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்ட போது என்ன செய்துக் கொண்டிருந்தார்' என்று கேட்கும் அண்ணன் சீமான், அதோடு 'மாற்றம் என்பது தொடக்கத்திலிருந்து பேச வேண்டும் இடையில் பேசுவது அல்ல' என்கிறார்.

தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தனது அலுவலகத்தில் கிடா வெட்டி, அவரே சமைத்து மது வகைகளோடு விருந்து வைத்துள்ளார் அண்ணன் சீமான். அப்படி ஒரு விருந்தில் கலந்துக் கொண்ட என்னிடம், வயிறு நிரம்ப குடித்துவிட்டு 'தம்பி எதுக்குடா கறிய மட்டும் சாப்பிடுற, நீயும் எடுத்து குடிடா' என்று சொன்னார். அதற்கு நான் 'எங்கள் கட்சியில் தலைவரைப் போன்று பெரும்பாலானோர் மது குடிப்பதில்லை அண்ணா' என்று மறுத்துவிட்டேன். இந்த நிகழ்வின்போது தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களும் எங்களோடு விருந்தில் அமர்ந்திருந்தார்.
முன்னர் தீவிரமான குடிப்பழக்கத்தை கொண்டிருந்த அண்ணன் சீமான் இப்போது மது ஒழிப்பு பற்றி இன்னும் தீவிரமாக பேசுகிறார். ஆனால் இன்று மதுவுக்கு எதிராக இவ்வளவு பேசும் நீங்கள் அப்போது ஏன் குடித்தீர்கள் என்று நாங்கள் கேள்வி கேட்கலாமா? மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடானது என்று இப்போது பேசுபவருக்கு அப்போது குடிக்கும் போது அது தெரியாதா என்று நாம் கேள்வி கேட்க முடியுமா?

கட்சி தொடங்குவதற்கு முன் அதிகமாக மது குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தவர், கட்சி தொடங்கி தலைவர் என ஆனபின் அந்த பழக்கத்தை பெரிதும் நிறுத்திவிட்டார், மதுவுக்கு எதிராகவும் பேசி வருகிறார், அவருக்கு நம் வாழ்த்துக்கள் என்று தானே சொல்ல வேண்டும்? அது தானே சரியான அணுகுமுறை?

அதே பேட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழரை குறிப்பிட்டு, பத்தாண்டுகளாக திமுகவுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தவர் இப்போது மாற்றம் பற்றி பேசலாமா? என்கிறார் சீமான். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஈழத்தை முன்வைத்து அதிமுகவிக்கு ஆதரவாக 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்று பேசினார். அப்போது ஈழப்போராட்டத்திற்கு முற்றிலும் எதிரான அதிமுகவிற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்த சீமான் இப்போது 'நாமே மாற்று' என்று 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறார். இது எதனால் வந்த மாற்றம்? அப்போதே இந்த யோசனை வராதது ஏன்? இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன? அப்போது, தான் அதிமுகவை தூக்கிபிடித்தது தவறு என்று சொல்வாரா சீமான்? என்றெல்லாம் நம்மால் கேட்கலாமா?

;தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் சட்டக்கல்லூரி மாணவராக இருந்த காலத்திலிருந்து ஈழ ஆதரவு போராட்டக் களத்தில் நிற்பவர். அப்போதே கல்லூரியில் ஈழ ஆதரவு மாணவர் மாநாடு, 'விடுதலைப் புலி' என்னும் கையெழுத்துப்பிரதி இதழ் உட்பட நடத்தியவர். திமுக கூட்டணியில் இருந்த காலகட்டத்தில் தான் நான்கு நாட்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது நாங்கள் மேற்கொண்ட மிகத் தீவிரமான போரட்ட வடிவங்களால் 20க்கும் மேற்பட்ட எங்கள் தோழர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது, ஆயிரக்கணக்கான தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். எந்த இடத்திலும் கொள்கையை மறந்து அரசியல் செய்தது கிடையாது. தலைவர் எழுச்சித்தமிழரின் ஈழ போராட்டக் களம் கால் நுற்றாண்டைக் கடந்தது. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல நாங்கள்.

இன்று தமிழகத்தில் மாற்று அரசியலை முன்வைக்கும் முழு தகுதியோடு நாங்கள் இருக்கிறோம். மக்கள் திரள் அரசியல் இயங்கியலை அடிப்படையாக கொண்டு செயல்படுவதாகும். மாற்றம் என்பது ஓர் இரவில் நடப்பதல்ல. மக்கள் மத்தியில் ஒரு தேவை ஏற்பட்டு அந்த கோரிக்கை வலுப்பெருகிறது.

2009ஆம் ஆண்டு போருக்கு முன்னர் இரண்டு முக்கிய சமர்கள் நடைபெற்றபோது அண்ணன் சீமான் என்ன செய்து கொண்டிருந்தார்? சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். திரைத்துறையில் அவர்கள் எந்த இடத்தில் நின்றாலும் உறுதியாக தொடர்ந்து ஈழ ஆதரவை முன்வைத்து வருபவர்கள் அண்ணன்கள் சத்யராஜ், ஆர்.கே.செல்வமணி போன்றவர்கள். அவர்களைப் போல சீமான் திரைத்துறையில்  இருந்த காலத்தில் ஈழத்தை பற்றி ஏதாவது பேசியுள்ளாரா? அன்று திராவிடர் இயக்க மேடைகளில் தந்தை பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டு கடவுள் மறுப்பு கருத்துகளை தன்னுடைய காமெடி பாணியில் பேசி வந்திருக்கிறார். ஈழத்தை குறித்து அவர் பார்வை அப்போது என்னவாக இருந்தது? இப்போது நீட்டி முழக்கும் அவர் அப்போது என்ன புடுங்கினார் என்று கேட்கலாமா? சினிமா தொழிலில் நிற்க முடியாமல் இப்போது அரசியலை தொழிலாக செய்து வருகிறார் என்று சொல்லலாமா?

அண்ணன் சீமான் இந்த பேட்டியிலும் மற்ற இடங்களிலும் தொடர்ச்சியாக 'அய்யா ராமதாஸ் அண்ணன் திருமாவளவன்' என்று இணைத்து பேசி வருகிறார். தலித்துகளின் வீடுகளை கொளுத்தும் குச்சுச்கொளுத்தி, தலித் இளைஞர்களை கொலை செய்யும் சாதிவெறியனோடு இத்தகைய சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களை அமைப்பாக கட்டியெழுப்பி நிற்கும் தலைவர் திருமாவளவனை இணைத்து பேசுவதே அயோக்கியத்தனமாகும்.

பெரியாரை வந்தேறி என்றும், பார்ப்பனர்களை தமிழர்கள் என்றும் சொல்லும் ஒருவரிடம் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். ஒடுக்குமுறை செய்பவனையும் ஒடுக்கப்படுபவனையும் இணைத்து வைத்து உளரும் இவரும் நமக்கு ஒடுக்குமுறையாளரே. அண்ணன் சீமானை ஆர்.எஸ்.எஸ். கும்பல் இயக்குவதாக முன்னர் சிலர் சந்தேகம் எழுப்பி வந்தனர் அப்போது அதை நான் நம்பவில்லை ஆனால் இப்போது  அவர் வேலை தூக்கிக்கொண்டு பழனிக்கு போவதும், சமீபகாலமாக  அவர் முன்னெடுக்கும் செயல்பாடுகள், பேச்சுகள் அந்த சந்தேகத்தை வலுப்பெறச் செய்வதாக அமைந்துள்ளது. உண்மையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் தோழர்கள், இளைஞர்கள் இவரிடம் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.’’என்று தெரிவித்துள்ளார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: