விஜயகாந்தைவிட வடிவேல் எவ்வளவோ மேல் என அதிமுவில் இணைந்த விஜயகாந்தின் சகோதரர் பால்ராஜ் (56) குற்றம் சாட்டியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜய காந்தின் சகோதரர் பால்ராஜ் வெள்ளிக்கிழமை மதுரையில்
முதல்வர் ஜெயலலிதா முன்னிலை யில் அதிமுகவில் இணைந்தார். அவரை
சந்திப்பதற்காக மதுரை சதாசிவம் நகர் திருவள்ளுவர் தெரு வில் உள்ள அவரது
வீட்டுக்குச் சென்றோம். 4-க்கு 6 அடி உள்ள சமையலறை, கால்களை நீட்டி படுக்க
முடியாத அளவுக்கு வெறும் 48 சதுர அடி மட்டுமே கொண்ட மற்றொரு அறை. இதுதான்
விஜயகாந்தின் சகோதரர் வீடு என்பதைக் கண்டதும் ஆச்சரியமாக இருந்தது.
உடைந்த
நாற்காலியின் மீது வைக்கப்பட்டிருந்த அரசின் இலவச டி.வி.யைப் பார்த்துக்
கொண்டிருந்தவர், அதை நிறுத்திவிட்டு பேசத் தொடங்கினார்.
‘‘எங்க அப்பா கே.என்.அழகர் சாமிக்கு ஆண்டாள், ருக்மணி என்று இரண்டு
மனைவிகள். முதல் மனைவிக்கு விஜயலெட்சுமி, நாகராஜன், விஜயராஜ் (தற்போது
விஜயகாந்த்), திருமலாதேவின்னு 4 பிள்ளைகள். இரண்டாவது மனைவிக்கு செல்வராஜ்,
பால்ராஜ் (நான்), சித்ராதேவி, ராம்ராஜ், மீனாகுமாரி, சாந்தி,
பிருத்விராஜுன்னு 7 பிள்ளைகள். ஆண்டாள் அம்மா இறந்த பிறகு ருக்மணியம்மாதான்
எல்லோரை யும் பாத்துக்கிட்டாங்க. அப்பா ரைஸ்மில்ல கவனிச்சிக்கிட்டாரு.
விஜயகாந்தும் அங்கேதான் இருப்பாரு..
ஒருசில நேரத்துல வீட்டுல சமைக்க நேரமாயிடும். அதுக்கப் பறம் அந்த சாப்பாட்ட
எடுத்துக்கிட்டு நான் வேகமா மில்லுக்கு ஓடிப்போய் கொடுப்பேன். அப்
பிடியிருந்தும் ஏன்டா லேட்டா வந்தேன்னு, அங்க கெடக்கற கயித்த எடுத்து
விஜயகாந்த் என்னை அடி அடின்னு அடிப்பாரு.. இதனால அவருக்குப் பயந்து 5 வயசுல
இருந்தே இன்னொரு அண்ணன் நாகராஜ் கூடத்தான் நான் எப்பவுமே இருப்பேன்.
அவருதான் என்னை கடைசி வரை வளர்த்தாரு. விஜயகாந்த் என்கூட சரியாகக்கூட பேச
மாட்டாரு.. அப்புறம் அவர் சினிமாவுல நடிக்க சென்னை போயிட்டாரு. பணத்துக்கு
கஷ்டப்பட்டதால எங்க அப்பா மாசாமாசம் 1000 ரூபாயை என்கிட்ட கொடுத்து
அனுப்புவாரு. நானும் ரயில்ல போய் கொடுத்துட்டு உடனே திரும்பிடுவேன். அப்பா
இறந்த பின்னாடி என்ன மில்லவிட்டே தொறத்திட்டாங்க..’’ என பழைய நினைவுகளை
நினைவுகூர்ந்தார்.
பின்னர் அவர் மேலும் கூறியது: ‘‘எலக்ட்ரிஷியன் வேலை தெரிஞ்சதால ஊர் ஊரா
போய் பிழைப்பு நடத்த ஆரம்பிச்சேன். அப்பதான் எங்க உறவுக்காரப் பெண்
வெங்கடலெட்சுமியை பதிவுத் திருமணம் செஞ்சுகிட்டேன். அவருக்கும் யாரும்
இல்லை. எனக்கும் உதவி செய்ய ஒருத் தரும் முன்வரல. ஒரு கட்டத்துல
குடும்பத்துல ரொம்ப கஷ்டம். அதனால எனக்கு பங்கு பிரிச்சு கொடுத்த வீட்டோட
கீழ் பகுதியை மாசம் ரூ.4,000-க்கு வாடகை விட்டுட்டு மேலே இருக்கிற அறையில்
குருவிக்கூடு போல குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கோம். மகனை பாலி டெக்னிக்
படிக்க வைக் கலாம்னு ஆசைப்பட்டு, அதுக்கு விஜயகாந்திடம் உதவி கேட்க
நினைச்சேன். ஆனா வீடு, ஆபீஸ்ன்னு எங்கயும் அவரைப் பார்த்து பேச முடியல.
போன் பண்ணினாலும் கட் பண்ணிடு வாங்க.. அவரு.. நல்லவரோ.. கெட்டவரோ.. ஆனா
பிரேமலதா வந்து ஆளையே மாத்திடுச்சு.. இப்ப கூட தனது மனைவி, மைத்துனன்
பேச்சை கேட்டுக்கிட்டுதான் இப்பிடி யெல்லாம் பண்றாரு..
எனக்கு மட்டுமில்ல.. குடும்பத்துல யாருக்குமே விஜயகாந்த் எந்த உதவியும்
செய்யல.. ராமராஜ் மகன் கௌதமன அவரோட ஆண்டாள் அழகர் கல்லூரியில் காசு
வாங்கிட்டுதான் சேர்த்தாங்க.. மீனாகுமாரி மகனைப் படிக்க வைக்க உதவி
கேட்டப்பவும் முடியாதுன்னுட்டாங்க. இப்பிடி யாருக்குமே அவரு எதையும்
செய்யல.. இப்பிடி அண்ணன், தம்பிக்கே எதுவும் செய்யாதவரு நாட்டுக்கு என்னது
செய்யப் போறாரு? மைத்துனனுக்காகவும், சகலைக்காகவும்தான் அவர் கட்சியே
நடத்திக்கிட்டு இருக்காரு. அவரது சகலை (பிரேமலதாவின் சகோதரியின் கணவர்)
ஆண்டாள் அழகர் கல்லூரி அறக்கட்டளை, புதுச்சேரியில் உள்ள நர்சிங் கல்லூரி
ஆகியவற்றின் நிர்வாகப் பணிகளை கவனித்து வருகிறார். இதில் எங்கள்
குடும்பத்தினர் யாருக்கும் இடமில்லை.
ஆனா விஜயகாந்த் ஊருக்கே உதவி செய்றதா பேப்பர்ல வருது.. அது உண்மைன்னா அவரோட
சொந்த தம்பி, தங்கைகள் குடும்பத்துக்கும் ஏதாவது செய்யலாமே? நாங்க
அவருகிட்ட உதவி கேட்டு ஓஞ்சு போயிட்டோம். சாகப்போற காலத்துல இனி அவரே வந்து
உதவி பண்ண நினைச்சாலும் அது எங்களுக்கு வேண்டாம். கண்ணதாசன் எப்பவோ எழுதுன
பாட்டு.. ஆனா இன்னைக்கும் அதுதான் உண்மையா இருக்கு.. அதான் சார்.. ‘அண்ணன்
என்னடா.. தம்பி என்னடா.. அவசரமான உலகத்துலே..’. இதுதான் இப்போ நான்
அடிக்கடி கேட்குற பாட்டு’’ என தன் வேதனையை பால்ராஜ் கொட்டித் தீர்த்தார்.
அதிமுகவில் இணைந்த கதை
பால்ராஜ் குடும்பத்தினர் மிகவும் சிரமப்படுவதைக் கண்ட அவரது நீண்டகால
நண்பரும், அதிமுகவின் தலைமைக்கழகப் பேச்சாளருமான வைகை பாண்டி என்பவர்
அமைச்சர் செல்லூர் கே.ராஜு மூலமாக அவரை அதிமுக வில் இணைத்துள்ளார். முதல்
வரை சந்திக்கும்போது குடும்ப கஷ்டத்தை தெரிவிக்க பால்ராஜும், அவரது மனைவி
வெங்கடலெட்சுமியும் முடிவு செய்திருந்தனர். ஆனால் மேடையில் அவ்வாறு செய்ய
முடியாது என செல்லூர் கே.ராஜு மறுத்துவிட்டார். மேலும் அதிமுகவிலிருந்தும்
இவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. இதுபற்றி பால்ராஜ் கூறும்போது,
‘என் மகனோட வாழ்க்கைக்காக அம்மா (முதல்வர்) ஏதாவது பண்ணுவாங்கன்னு
எதிர்பார்க்கிறேன். அது மட்டும் செஞ்சு கொடுத்தா காலத்துக்கும் அம்மாவுக்கு
நன்றியோட இருப்பேன்’ என்றார் கண்ணீருடன்.
‘வடிவேலுதான் மனுஷன்’
‘‘இதே மதுரையில பொறந்து வளர்ந்த வடிவேல், விஜயகாந்தை விட எவ்வளவோ மேல்...
ஏழையா இருந்த அவரு சினிமாவுக்கு போயி சம்பாதிச்ச பிறகு தன்னோட குடும்பத்தை
நல்லா கவனிச்சுக்கிறாரு.. அதோட விடாம.. கஷ்டத்துல இருக்க தன்னோட
சொந்தக்காரங்க எல்லாத்தையும் தேடித்தேடி போயி பலசரக்கு கடை,
பெட்டிக்கடைன்னு ஏதாவது ஒண்ண வச்சுக் கொடுத்து வாழ்க்கைக்கு
வழிகாட்டியிருக்காரு.. அவர்தான் மனுஷன்...’’ என்றார் பால்ராஜ்.://tamil.thehindu.com/tamilnadu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக