திங்கள், 22 பிப்ரவரி, 2016

பெண்கள் நிர்வகிக்கும் நிறுவனங்கள் அதிக வெற்றி... 91 நாடுகளில் ஆய்வு


அடுக்களையில் ஆழ்ந்திருக்கும் தாய்க்குத் தன் கைக்குழந்தை படுக்கையறையில் லேசாகச் சிணுங்குகிற ஒலிகூடக் கேட்டுவிடும். கல்யாணக் கூட்டத்தில் குழந்தையின் சிரிப்பு அல்லது அழுகையின் ஒலி கேட்டால் அதன் தாய் அந்த ஒலியின் திசையறிந்து குழந்தையை நோக்கி விரைவாள். இது ஆண்களுக்கு இயலாது. ஏனெனில், உயிரினம் தொடங்கிய காலத்திலிருந்தே பசி அல்லது பயத்தால் வீறிடும் குட்டியின் குரலைக் கேட்டு அதன் உதவிக்கு விரையும் உள்ளுணர்வு எல்லாப் பாலூட்டி விலங்கினத் தாய்மார்களின் மரபணுக்களில் பதியப்பட்டுள்ளது.
“முதலைத் தாய்மார்கள்’கூட மண்ணில் புதைத்த தமது முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிப்படும் நேரத்தில் குரல் கொடுப்பதைக் கேட்டு விரைந்தோடி வந்து மண்ணுக்குள்ளிருந்து அவற்றை விடுவிக்கின்றன.
பெண்களின் உட்காதிலுள்ள நத்தைக் கூடு உறுப்பில் உணர்வு இழைகள் ஆண்களுக்கு இருப்பதைவிட அதிக எண்ணிக்கையில் உள்ளன. வயதாவது மற்றும் நோய்வாய்ப்படுவது போன்ற காரணங்களால் அவை வலுவிழப்பதுகூடப் பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவான அளவிலேயே நேர்கிறது.
பெண்களுக்குள்ள மோப்ப சக்தியும் ஆண்களினுடையதைவிட அதிகக் கூர்மையானது. அபாயகரமான வாயுக்கள் அல்லது நச்சுப்பொருள்களின் வாசனைகள் போன்றவற்றை உடனடியாக உணர்ந்து தன்னையும் தன் குழந்தையையும் காப்பாற்றிக்கொள்ள வேகமாக விலகிச் செல்லும் உந்துதலைப் பெண் விலங்குகள் பெற்றிருக்கின்றன.
கடந்தாண்டு செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, மொழியைக் கையாளுவதில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகத் திறமை பெற்றிருப்பது நிரூபணமாயுள்ளது. ஆண் குழந்தைகளைவிடப் பெண் குழந்தைகள் சீக்கிரமாகப் பேசக் கற்றுக்கொண்டு விடுகின்றன. அவர்களின் சொல் வளமும் விரைவாக அதிகரிக்கிறது. அவர்களுடைய பேச்சில் புதிதாகக் கற்றுக்கொண்ட சொற்கள் அதிகமாயிருக்கும்.
மொழித் திறமை பற்றிச் சம வயதுள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளை வைத்துச் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், ஆண் குழந்தைகளைவிடப் பெண் குழந்தைகள் ஒன்றரை மடங்கு அதிகமான லாகவத்துடன் மொழிகளைக் கையாளுவதாகத் தெரிய வந்துள்ளது. ஒரு விஷயத்தைப் பற்றிப் பல கோணங்களில் வர்ணிப்பதையும், வேகமான சம்பாஷணைகளையும், சூசகமான செய்திப் பரிமாற்றங்களையும், இரட்டை அர்த்தமுள்ள கூற்றுகளையும் பெண்கள் அதிக அளவில் புரிந்து கொள்கிறார்கள்.
இத்தகைய மொழித்திறமை வளர்ந்த பின்னரும், பெண்களிடம் நீடிக்கிறது. ஒரே பொருளுள்ள பல சொற்கள், ஒரு சொல்லின் பல்வேறு பொருள்கள் போன்றவற்றைக் கையாளுவதில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகத் திறமை பெற்றுள்ளனர். சொல் விளையாட்டுகளிலும், குறுக்கெழுத்துப் போட்டிகளிலும் ஆண்களைவிடப் பெண்கள் அதிக அளவில் வெற்றி பெறுகிறார்கள். தாய்மொழி தவிர்த்த மற்ற மொழிகளைப் பயில்வது மற்றும் பயில்விப்பது ஆகியவற்றில் பெண்களே மேலானவர்கள்.
அத்துடன் இரு வெவ்வேறு மொழிகளில் மாறி மாறிப் பேசுவதிலும் பெண்களுக்குத் திறமை அதிகம். அதிலும் ஆண்களைவிடப் பெண்களே அதிகத் திறமையான மொழிபெயர்ப்பாளர்களாக விளங்குகிறார்கள்.
பெண்களின் கை விரல்களும் ஆண்களின் கை விரல்களைவிட அதிகச் செயல் திறனுள்ளவை. மெலிந்து நீண்டிருக்கும் விரல்கள் பூத்தொடுப்பது, புள்ளி வைத்துக் கோலம் போடுவது, தட்டச்சுச் செய்வது, கணினித் திரையை இயக்குவது, கைக்கடிகாரங்கள் போன்ற சிறு கருவிகளில் உறுப்புகளைப் பொருத்துவது போன்ற நளினமான வேலைகளை அதிக லாகவத்துடன் செய்கின்றன. அதற்குத் தேவையான பொறுமையும் நெடுநேரக் கவனக் குவிப்புத் திறனும் பெண்களிடம் அதிகமாக உள்ளது.
பல வெற்றிகரமான ஆண் நிர்வாகிகளின் சாதனைக்குப் பெருமளவு காரணமாயிருப்பது அவர்களுடைய தனி உதவியாளர்களாகவும் செயலர்களாகவும் திறமைமிக்க பெண்களை நியமித்துக் கொண்டதுதான் என அந்த ஆய்வு கருத்துத் தெரிவிக்கிறது. பல ஆண் நிர்வாகிகள் சிக்கலான சந்தர்ப்பங்களில் தமது மனைவியிடம் கலந்தாலோசிப்பதுண்டு என ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் உலகம் முழுக்க இருக்கும் நிறுவனங்களில், பத்தில் மூன்று நிறுவனங்களில் நிர்வாக பதவிகளிலோ, உயர்மட்ட பதவிகளிலோ பெண்கள் இல்லை என்றும் 30 சதவீத பெண்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள், ஆறு சதவீதம் அதிக லாபத்தைப் பெறுகின்றன என்கிறது சமீபத்திய ஆய்வு.
வாஷிங்டனில் உள்ள சர்வதேச பொருளியல் கல்விக்கான பீட்டர்சன் நிறுவனம் மெக்ஸிகோவில் இருந்து நார்வே, இத்தாலி வரை உலகம் முழுக்க இருக்கும் 91 நாடுகளில் இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வு குறித்துப் பேசிய அதன் ஆசிரியர்களில் ஒருவரான டெய்லர் மோரான், ‘திறமை வாய்ந்த பெண் தலைவர்களை ஒதுக்கும் நிலை, உண்மையிலேயே தவறான உதாரணமாகும்’ என்கிறார்.
தலைமைப் பதவியில் பெண்கள் என்பது குறித்த ஆய்வின் முடிவுகள் இதோ :
* பெரு நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் பெண்களின் இருப்பு, ஒட்டுமொத்த நிறுவன வளர்ச்சிக்குத் துணைபுரிகிறது. பெண்கள் வேலைவாய்ப்பை, அவர்களின் உழைப்பை ஊக்குவிக்கும் கொள்கைகள் பாராட்டப்பட வேண்டும்.
* அதே சமயம், நிர்வாகப் பதவிகளில் இருக்கும் பெண்களின் திறமைக்கேற்ற அளவுக்கு, பெண் சி.ஈ.ஓ.க்களோ, செயற்குழுக்களில் இருக்கும் பெண்களோ கவனித்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
* தேசிய கொள்கையான குடும்ப விடுப்பு உள்ளிட்டவைகள் தேவைப்படும் பெண் மேலாளர்களை, எல்லா நிறுவனங்களும் ஒரே மாதிரியாக நடத்துவதில்லை.
* பெரிய அளவிலான நிறுவனங்கள் இப்போதுதான், பெண்களை உயரிய பதவிகளில் அமர்த்த ஆரம்பித்திருக்கின்றன.
* கீழ்நிலையில் உள்ள பெண் மேலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்தாலும், இன்னும் முன்னேற்றம் தேவை. உலகம் முழுக்க இருக்கும் நிறுவனங்களில், பத்தில் மூன்று நிறுவனங்களில் நிர்வாக பதவிகளிலோ, உயர்மட்ட பதவிகளிலோ பெண்கள் இல்லை.
இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு நிதியுதவி அளித்த நிறுவனம், தொழில்முறை சேவைகள் நிறுவனம் ஆகும். அதன் பெண் செய்தி தொடர்பாளர் கார்ன் ட்வரோனைட் ஆய்வு குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.அதில் “இந்த ஆய்வு, வெவ்வேறு பணி இடங்களின் முக்கியத் தேவை குறித்து விவாதித்திருக்கிறது. இனிமேலாவது ஆண்களுக்கும், பெண்களுக்கும் தலைமைப் பொறுப்புகளில் சம உரிமை வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது  aanthaireporter.com/

கருத்துகள் இல்லை: