அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட தேமுதிகவைச் சேர்ந்த 8
பேரவை உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ததையடுத்து, விஜயகாந்த் எதிர்க்கட்சித்
தலைவர் பதவியை இழந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத்
தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து
போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தின் பிரதான கட்சியான
திராவிட முன்னேற்ற கழகத்தைவிட (23 இடங்கள்) அதிக இடங்களில் வெற்றி
பெற்றதால், எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. விஜயகாந்த் 14-வது பேரவையின்
எதிர்க்கட்சி தலைவரானார்.
இதையடுத்து அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் இடையே
பிரச்னை ஏற்பட்டது. இதில் 8 தேமுதிக உறுப்பினர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக
செயல்பட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் இன்று தங்களது பதவியை ராஜிநாமா
செய்தனர். அவர்கள் ராஜிநாமா ஏற்கப்பட்டதால், தேமுதிகவின் எண்ணிக்கை 20 ஆக
குறைந்தது.
இதையடுத்து, பேரவைச் செயலாளர் வெளியிட்ட செய்தி
குறிப்பில், தேமுதிக கட்சியைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது
பதவியை ராஜிநாமா செய்துள்ளதைத் தொடர்ந்து தேமுதிக உறுப்பினர்களின்
எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளது. இதனால், பேரவை விதி 2(ஓ)-ன்படி,
எதிர்க்கட்சித் தலைவராக பேரவைத் தலைவரால் அங்கீகரிப்பதற்குரிய தகுதியை
விஜயகாந்த் இழக்கிறார். இதன் காரணமாக அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற
அங்கீகாரத்தையும் சலுகைகளையும் இழக்கிறார் என பேரவைத் தலைவர்
அறிவித்துள்ளார்.
மேலும், தற்போது 24 உறுப்பினர்களைக் கொண்ட எந்த
கட்சியும் இல்லாததால், எதிர்க்கட்சித் தலைவராக வேறு எந்தக் கட்சியையும்
அங்கீகரிக்கவில்லை என பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார் என
குறிப்பிட்டுள்ளார் தினமணி.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக