புதன், 7 மே, 2014

தாய்மொழியில் துவக்கப்பள்ளி படிப்பு கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடில்லி: 'துவக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு, தாய்மொழி அல்லது வட்டார மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என, மாநில அரசுகள் கட்டாயப்படுத்த முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் நேற்று உத்தரவிட்டுள்ளது.தடை உத்தரவு:
கர்நாடக மாநிலத்தில், நீண்ட காலமாகவே, துவக்கப் பள்ளிகளில், கன்னட மொழியில் தான் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பித்து கொடுக்க வேண்டும் என்ற பிரச்னை நீடித்து வருகிறது. இது தொடர்பாக, மாநில அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு, அந்த மாநில உயர்நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெற்று வரப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த 1994ல், கர்நாடக மாநில அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 'ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கன்னட மொழியில் தான் பாடம் கற்பித்துக் கொடுக்கப்படும். ஆங்கிலம் இரண்டாம் மொழியாக இருக்கும்' என, சில ஆண்டுகளுக்கு முன், கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது.இதை எதிர்த்து, ஆங்கில பள்ளிகள் சங்கத்தினர் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, சில மாதங்களுக்கு முன், இரண்டு நீதிபதிகளை கொண்ட, 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரிக்கப்பட்ட போது, 'இந்த விவகாரத்தில், அடிப்படை சுதந்திரம் தொடர்பான அம்சங்கள் உள்ளதால், இந்த வழக்கை, ஐந்து நீதிபதிகள் கொண்ட, அரசியல் சாசன பெஞ்ச் விசாரிப்பது தான் சரியாக இருக்கும்' என தெரிவித்து, அந்த பெஞ்சிற்கு வழக்கு மாற்றப்பட்டது.அரசியல் சாசன பெஞ்சில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நல்ல தீர்ப்பு. மக்களுக்கு எது தேவையோ அதை தான் அரசுகள் கல்வி சேவையில் அளிக்க வேண்டும்.இதைத்தான் படிக்க வேண்டும் என கட்டாய படுத்த கூடாது.


தலைமை நீதிபதி லோடா மற்றும் நீதிபதிகள், பட்நாயக், முகோபாத்யாயா, தீபக் மிஸ்ரா, கலிபுல்லா ஆகியோரை கொண்ட டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:துவக்கப் பள்ளி படிப்பை, அந்தந்த வட்டார மொழி அல்லது தாய்மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என, மொழி சிறுபான்மையினரை, எந்த மாநில அரசுகளும் கட்டாயப்படுத்த முடியாது; அதற்கான அதிகாரம், மாநில அரசுகளுக்கு கிடையாது.தாய்மொழியில் தான் துவக்கப் பள்ளி பாடங்களை படிக்க வேண்டும் என வற்புறுத்துவது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. எனவே, கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவுகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு உத்தரவிடபட்டது.

ஆங்கில அறிவு அவசியம்
இந்த வழக்கில், கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தவர்கள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், கே.வி.தனஞ்சயா, தன் வாதத்தில் கூறியதாவது:கன்னட மொழியின் பெருமை மற்றும் சிறப்புக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். எனினும், ஆங்கில மொழி அறிவு இருந்தால் தான், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பானதாகவும், அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பும் நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே, ஆங்கில அறிவு மிகவும் அவசியம்.வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, நாகலாந்தில், 90 சதவீத மக்கள், பழங்குடியின மக்கள் தான். அங்கு, அவர்களின் அடிப்படை மொழி, ஆங்கிலமாகத் தான் உள்ளது.ஆங்கிலம், வெளிநாட்டு மொழி; அதை பாதுகாக்க முடியாது; நம் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க முடியாது என்றால், வெளிநாட்டிலிருந்து வந்த இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு பாதுகாப்பு எதன் அடிப்படையில் நம் நாட்டில் வழங்கப்படுகிறது?இவ்வாறு அவர் வாதிட்டார்.

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ரவிவர்மா குமார், தன் வாதத்தின் போது, ''மாநில மக்களுக்கு அறிவுரை வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது,'' என வாதிட்டார்; எனினும், அதை நீதிபதிகள் ஏற்கவில்லை. dinamalar.com

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தன்னுடைய நாட்டில் கூட தன் மொழியை வளர்க்க அனுமதி இல்லை. ஆனால் ஹிந்தியை மட்டும் மற்ற மொழியினர் படிக்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம். ஒரே பொய்யை 100 தடவை ஒருவர் காதில் உரக்க சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பதை போல ..... ஹிந்தி படித்தால் நல்லது .... நல்லது .... நல்லது என்று சொல்லி சொல்லியே இன்று தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்தி திணிக்கப்பட்டு வருகிறது. ஒரு மொழி அழிந்தால் ஒரு இனம் அழிந்தாக சொல்வார்கள் .... பல மொழிகளை படிப்பது தவறு என்று சொல்லவில்லை. ஒரு மொழியை திணிக்கும் அளவிற்கு மத்திய அரசு மறைமுக காரியங்களில் ஈடுபட்டு வருவது தவறு என்று தான் சொல்கிறேன் . எல்லா மொழிகளையும் சரி சமமாக கருத வேண்டும். ஒரு கண்ணில் எண்ணையும் மறுகண்ணில் மண்ணையும் போட கூடாது. இது நாட்டின் ஒற்றுமைக்கு பாதகமாக அமையும்.