வியாழன், 8 மே, 2014

பிரவீண் குமாரின் 144 தடை உத்தரவு பணம் கொடுப்பதற்கு மிகவும் வசதியாக இருந்தது


தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நாளுக்கு நாள் கேலிக் கூத்தாகி வருகிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த தேர்தல் ஆணையம் தற்போது எதிர்க்கட்சிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பது வெட்டவெளிச்சமாகி வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா முதல் அ.தி.மு.க.வின் கடைசித் தொண்டன் வரை தேர்தல் விதிமீறிலில் ஈடுபட்டது மக்கள் அனைவருக்கும் தெரியும். அதேபோல, வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததும் மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமாருக்கும் தெரியும்.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். ஆனால், எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டோ 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டதே அ.தி.மு.க.வினருக்காகவேதான்.
ஏனென்றால் அவர்களுக்குப் பணம் கொடுப்பதற்கு மிகவும் வசதியாக இருந்தது என்று கூறுகின்றனர்.  கண்ணுக்குள் நூறு களவு இது ஒரு சதியா ? கைக்குள்ளே காசு வழங்க புதுவித தடையா ?

தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீசார் மீதான நடவடிக்கை பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அபிராமம் பகுதியில் மார்ச் 20-ம் தேதி திமுக வேட்பாளர் முகமது ஜலீலை ஆதரித்து மாவட்டச் செயலாளர் சுப. தங்கவேலன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தேர்தல் விதிகளை மீறி 16 வாகனங்களில் ஆதரவாளர்களுடன் சென்றதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி புகார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவுசெய்த அபிராமம் போலீஸார், மே 4-ம் தேதி சுப. தங்கவேலனை கைது செய்தனர். கட்சிப் பிரமுகரின் இல்ல நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த அவரை கைது செய்த போலீசார் பின்னர் அவரை ஜாமீனில் விடுதலை செய்தனர்.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் முதன் முதலாவதாக கைது செய்யப்பட்ட தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் இவர்தான்.
அதேபோல, ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தேர்தல் விதிமீறல் தொடர்பாக கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 13-ம் தேதி மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது பார்த்திபனூரில் தேர்தல் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட கூடுதலான வாகனங்களில் சென்றதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
அதன் பேரில் பார்த்திபனூர் போலீசார் ரவிச்சந்திர ராமவன்னியை அவரது இல்லத்தில் கைது செய்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி, ஜாமீனில் விடுதலை செய்தார்.
தேர்தல் விதி மீறல் தொடர்பாக கைது செய்யப்பட்ட முதல் பிரமுகர் திமுகவைச் சேர்ந்தவர், இரண்டாவது பிரமுகர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது அதிக அளவிலான வாகனங்களில் வந்தார்.
அது மட்டுமல்ல, அங்கு நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்ககள் கூட்டத்தில் பேசுகையில், “தேர்தல் வரையில்தான் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். அதற்குப் பின் அவர்கள் நம்ம கன்ட்ரோலில் வந்துவிடுவார்கள். அ.தி.மு.க.வினர் மீது வழக்குப் போடும் அதிகாரிகள் எந்த ஊருக்கு போவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. எனவே, அதிகாரிகளை அ.தி.மு.க.வினர் யாரும் கண்டுகொள்ள வேண்டாம்” என காஷூவலாக பேசிவிட்டு போனார்.
அமைச்சரின் இந்தப் பேச்சைக் கேட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் இதைக் கண்டுகொள்ளவே இல்லை.
அதிகாரிகளை மிரட்டும் வகையில் அமைச்சர் பேசினார் என போலீசாரோ, உளவுத்துறையினரோ, வேறு யாருமோ தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கவே இல்லை. ஆனால், அமைச்சரின் பேச்சு ஊடகங்களில் வெளியானது.
அமைச்சரின் மிரட்டல் பேச்சுக்கு ஒன்றரை மாதம் கழித்து, ஏப்ரல் 30-ம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வெளி மாநிலங்களில் நடந்த தேர்தலின்போது வாக்காளர்களுக்கு சில கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பணம் கொடுத்தனர். அப்போது அவர்களைப் பிடித்த தேர்தல் ஆணையம், பிடிபட்ட தொண்டர் சார்ந்த கட்சியின் வேட்பாளர் மீதும் வழக்குப் பதிவு செய்தது.
ஆனால், தமிழகத்தில் அவ்வாறு நடக்கவில்லை.
பல இடங்களில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தபோது எதிர்க்கட்சியினர் அ.தி.மு.க.வினரைப் பிடித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் ஒப்படைத்தனர். ஆனால், அந்தத் தொகுதி வேட்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை.
சில தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்குள் வரிசையாக நின்றபோதுகூட அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்தனர். இதுபோன்ற செயல்களை போலீசாரும் தேர்தல் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்தனர். இந்தக் காட்சிகள் படத்துடன் ஊடகங்களில் வெளியான போதும்கூட தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தலில் அளவுக்கு அதிகமான வாகனங்களைப் பயன்படுத்தியது, அரசு இயந்திரங்களை கட்சிக்குப் பணிக்குப் பயன்படுத்தியது, வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது என்பது போன்ற அதிக அளவிலான விதிமீறல்களில் ஈடுபட்டது ஆளுங்கட்சியினர்தான்.
ஆனால், அ.தி.மு.க.வினர் மீது பெயரளவுக்கு வழக்குகள் பதிவு செய்து ‘கப்சிப்’ என்று போலீசார் இருந்துகொண்டனர். தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை எந்த அ.தி.மு.க.வினரும் கைது செய்யப்படவில்லை.
தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகள், போலீசார் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது அ.தி.மு.க.வினர் யாருமே தேர்தல் விதிகளை மீறவில்லை, அவர்கள்தான் ‘மிஸ்டர் கிளீன்’ என்று தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீம்குமார் சர்டிபிகேட் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
viruvirupu.com/

கருத்துகள் இல்லை: