சனி, 10 மே, 2014

பிளஸ் 2 தேர்வில் சாதனை ! 8ம் வகுப்புடன் வேலைக்குச் சென்ற மாணவன் 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பள்ளி

வெல்டிங் பட்டறையில் பணிபுரியும் ஈ.மணிமாறன். (படம்: ஆர்.அசோக்.)
8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி வேலைக்குச் சென்ற மாணவன் 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பள்ளி சென்று பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்திருக்கிறார்.
தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி வசப்படும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த ஏழை மாணவன் மணிமாறன். குடும்ப வறுமையினால் 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, வெல்டிங் பட்டறையில் வேலைக்குச் சென்ற மணிமாறன், 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பள்ளி சென்று படித்து பிளஸ் 2 தேர்வில் 1129 மதிப்பெண் எடுத்து, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 184, ஆங்கிலம்- 172, கணிதம்- 193, இயற்பியல்- 188, வேதியியல்- 197, கணினி அறிவியல்- 195.
இது எப்படி சாத்தியமாயிற்று என்பதை மணிமாறனே விளக்குகிறார்.
‘தந்தை இசக்கிமுத்து ஊர் ஊராய் மிட்டாய் விற்பனை செய்கிறார். மேல அனுப்பானடியில் வாடகை வீட்டில் வசிக்கிறோம். தந்தையின் வருமானம் வாடகைக்கும், சாப்பாட்டுச் செலவுக்குமே சரியாக இருக்கும். வறுமை நிலவியதால், 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்பினர்.
பள்ளிக்குத்தான் செல்வேன் என அடம்பிடித்தேன். ஆனால் பெற்றோர், சாப்பாட்டுக்கே வழியில்லை. அதனால் வேலைக்கு செல்’ என்றனர். வேறு வழியின்றி வெல்டிங் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆர்க் வெல்டிங் கற்றுக் கொண்டு சம்பாதிக்க ஆரம்பித்தேன். எப்படியாவது படித்து பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற வெறி எனக்குள் ஏற்பட்டது. பிளஸ் 1 சேர்வதற்காக மதுரையிலுள்ள பல தனியார் பள்ளிகளுக்குச் சென்றோம். ஆனால் 3 ஆண்டு இடை நின்றல் இருந்ததாலும், தனி தேர்வராக 10ம் வகுப்பு படித்ததாலும் ஒரு பள்ளியில்கூட என்னை சேர்க்கவில்லை. கடைசியாக பாரதிதாசனார் மாநகராட்சி பள்ளிக்குச் சென்றோம்.
அங்கு எந்த மறுப்பும் கூறாமல் என்னை சேர்த்துக் கொண்டனர். 2 ஆண்டுகளாக வாரத்தின் 5 நாள் பள்ளியிலும், 2 நாள் வெல்டிங் பட்டறையிலும் என காலத்தை கழித்தேன். ஆனாலும் வகுப்பு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றதால் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினர்.
பி.இ கம்யூட்டர் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என ஆசை. வார விடுமுறை நாளில் வெல்டிங் தொழில் மூலம் நாளொன்றுக்கு ரூ.300 சம்பாதித்து, அதைக்கொண்டு தொடர்ந்து படித்துவிடுவேன். குடும்பத்தின் வறுமையை ஒழித்து குடும்பத்தினர் மகிழும் வகையில் வாழ வேண்டும் என்பதே என் ஆசை..’ என்கிறார்.  tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: