புதன், 7 மே, 2014

ஒளிரும் குஜராத் என்ற இந்தப் புதுக்கடவுள், ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர்ஜி போன்ற கார்ப்பேரட் சாமியார்களை ஒத்தது


ன்றைய “இராம ஜென்மபூமி”யும் இன்றைய “ஒளிரும் குஜராத்”தும் வேறு வேறானவையா? இல்லை. இரண்டும் புனைவுகள்தான். முன்னது ஆர்.எஸ்.எஸ்-ன் சொந்த சரக்கு; பின்னது இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் தந்த சரக்கு என்பதுதான் வேறுபாடு. இராமாயணம் என்ற புனைகதையை, ஒரு நம்பிக்கையாக மக்கள் மனதில் நிலைநாட்ட பார்ப்பனர்களுக்கு சில நூறு ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால், ஒளிரும் குஜராத் என்ற புனைசுருட்டை, மிகக் குறுகிய காலத்தில் ஒரு ‘தேசிய’ மூடநம்பிக்கையாக நிலைநிறுத்தி விட்டது, இந்தியத் தரகு முதலாளி வர்க்கம்.
“ஒளிரும் குஜராத்” என்பது ஒரு குறியீடு. மறுகாலனியாக்கத்தின் மூலம் முன்னேற்றம், வளர்ச்சி, சொர்க்கம் என்று ஆளும் வர்க்கம் உருவாக்கும் கருத்தாக்கம்தான் அதன் உள்ளடக்கம். தீவிரமான வர்க்கச் சுரண்டலையும் ஏற்றத் தாழ்வையும் நியாயப்படுத்தும் இந்தக் கருத்தாக்கத்தின் இதயமாக இந்துத்துவம் மறைந்திருக்கிறது.

“நாளைய பிரதமர் மோடி” என்ற முழக்கம், இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் தீர்மானித்த நிகழ்ச்சி நிரல்தான் என்பது இன்று முற்றுமுழுதாக அம்பலமாகிவிட்டது. இந்த முடிவுக்கு இந்திய கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் வந்ததைப் பற்றித் தனது கட்டுரையொன்றில் விளக்குகிறார் சித்தார்த் வரதராஜன் (தி இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர்).
மன்மோகன் அரசு 2009-ல், இரண்டாம் முறையாகப் பதவி ஏற்றிருந்த அந்த ஆண்டிலேயே, கார்ப்பரேட் வர்க்கத்தின் இந்தக் கனவு துவங்கி விட்டது. “மோடியின் தலைமையில் குஜராத் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் கண்டிருக்கிறது; இந்த தேசத்துக்கு தலைமையேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தால், எப்படி இருக்கும்; எண்ணிப் பாருங்கள்” என அன்றே “வைப்ரன்ட் குஜராத்” நிகழ்ச்சியில் பேசினார் அனில் அம்பானி. உடனே மிட்டல் உள்ளிட்டோர் அதனை வழிமொழிந்தனர். 2010-ல் மேற்கு வங்கத்திலிருந்து விரட்டப்பட்ட டாடாவுக்கு குஜராத்தில் சர்வமானியம் அளித்து மோடி குடியேற்றியவுடன், “வீடற்றவர்களாக நடுத்தெருவில் நின்ற எங்களுக்குத் தஞ்சமளித்தவர் மோடி” என்று நெகிழ்ந்தார் டாடா மோட்டார்ஸின் எம்.டி. ரவி காந்த். “மற்ற மாநிலங்களில் தொழில் தொடங்க உரிமம் பெறுவதற்கு 6 மாதங்கள் ஆகும்; குஜராத்தில் இரண்டே நாட்கள்தான்” என்று மோடியின் ஒற்றைச் சாளர நிர்வாகத்தைப் புகழ்ந்தார் டாடா.
ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2
“குஜராத் மாநிலமே ஒரு தங்கக் குத்துவிளக்காக மின்னுவதாகவும், அதன் பெருமை அனைத்தும் மோடியையே சேரும்” என்றும் 2011-ல் புகழ்ந்து, பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்தார் முகேஷ் அம்பானி. “இன்று சீனாவைப் போன்ற வளர்ச்சி என்று எல்லோரும் பேசுகிறார்கள். விரைவில் குஜராத்தைப் போல வளரவேண்டும் என்று சீனாவில் பேசப்போகிறார்கள். அந்த நாள் தொலைவில் இல்லை” என்று 2013-ம் ஆண்டு “வைப்ரன்ட் குஜராத்” நிகழ்ச்சியில் பேசினார் ஆனந்த் மகிந்திரா. இவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. மோடியின் பத்தாண்டு ஆட்சியில் தனது சொத்தைப் பத்து மடங்கு பெருக்கிக் கொண்ட அதானியைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அவர்தான் மோடியின் அதிகாரபூர்வ ஸ்பான்சர்; “சர்வதேச அரங்கில் குஜராத்தின் கவுரவம் குலைக்கப்படுவதை எதிர்த்து” (இனப்படுகொலைக்காக) 2002-லேயே குரல் கொடுத்தவர்.
ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியை இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் இப்படியெல்லாம் துதிபாடிப் பதவியில் அமர்த்த துடித்தது இந்திய அரசியலில் இதுவரை நடந்ததில்லை. அதுவும் முதலாளிகளுக்குச் சலுகை வழங்குவதில் “நீ, நான்” என்று மாநில முதல்வர்கள் போட்டி போடும் இந்தக் காலத்தில், இனப்படுகொலை குற்றவாளி என்று அம்பலப்பட்டுப்போன ஒரு நபரை, முதலாளி வர்க்கம் இந்த அளவுக்குத் தலையில் வைத்துக் கொண்டாடுவதிலிருந்தே மோடியின் தனிச்சிறப்பை யாரும் ஊகிக்க முடியும்.
மோடி, குஜராத்தின் கடற்கரையையும், விளைநிலங்களையும் அதானி, டாடா, அம்பானி சகோதரர்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரையிலான அனைவருக்கும் வாரிக்கொடுத்ததும், வரிச்சலுகைகள் – மானியங்கள் அளித்ததும் ஏற்கனவே அம்பலமாகியிருக்கின்றன. கேட்பதற்கு முன் வாரிவழங்கும் மோடியின் பரந்த உள்ளத்தைக் காட்டிலும் முதலாளிகளுக்குப் பிடித்திருப்பது மோடியின் வேகம். சட்டம்-நெறிமுறை எதையும் பொருட்படுத்தாத வேகம்! 8 அமைச்சரவைகளைக் கையில் வைத்துக் கொண்டு மோடி என்ற ஒற்றைச் சாளரத்திலேயே முதலாளிகளுக்கு எல்லாவற்றையும் முடித்துத் தரும் நிர்வாகத் திறன் அல்லது சர்வாதிகாரம்! மக்களின் எதிர்ப்பு இயக்கங்களை இல்லாதொழிக்கும் சாமர்த்தியம் அல்லது துணிச்சல்!
2009 முதல் 2012 வரையிலான இந்தக் காலத்தில்தான் கலிங்காநகர், போஸ்கோ, நியம்கிரி முதலான போராட்டங்கள் நடந்தன. ராடியா டேப்புகள் வெளியாகின. தங்களது அந்தப்புர இரகசியங்களைக் காப்பாற்றுவதற்குக்கூட முடியாத அளவு இந்திய ஜனநாயகம் பலவீனமடைந்திருப்பதை எண்ணிக் குமுறினார் டாடா. முகேஷ் அம்பானி, டாடா உள்ளிட்ட தரகு முதலாளிகள் தொழில் செய்வதற்குரிய சூழல் இந்தியாவில் இல்லையென்றும், வெளிநாட்டில் முதலீடு செய்வதாகவும் பகிரங்கமாக அரசை மிரட்டினர்.
இதனைத் தொடர்ந்து முதலாளிகளைத் தாஜா செய்வதற்கான நடவடிக்கைகளில் மன்மோகன் அரசு ஈடுபட்டது. என்றபோதிலும், சிங்குர், மாருதி உள்ளிட்ட பிரச்சினைகளில் துணிச்சலாக முதலாளி வர்க்கத்துக்கு அடியாள் வேலை பார்த்த மோடியைத்தான் ஆளும் வர்க்கம் விரும்பியது. இந்தப் பின்புலத்திலும் சில்லறை வணிகம், ஓய்வூதிய நிதி உள்ளிட்டவற்றைத் திறந்து விடுவதில் மன்மோகன் அரசு காட்டிய தாமதம் போன்ற பல காரணங்களினாலும்தான், மோடியைப் புகழ்ந்து எழுதிய அமெரிக்க டைம்ஸ் வார ஏடு, மனமோகனை “அண்டர் அச்சீவர்” என்று விமரிசித்தது.
தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மோடியைக் கொண்டு வருவதற்கு இன்று காட்டிவரும் வெறி, பாபர் மசூதியை இடிப்பதற்கு அன்று அத்வானி காட்டிய வெறியைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமானது. இது முதலாளிகளிடம் வெளிப்படும் வழக்கமான இலாப வெறி அல்ல; கடற் கொள்ளையர்களிடம் மட்டுமே காணத்தக்க வெறி! இதற்கும் ஒரு பின்புலமிருக்கிறது.
நிலக்கரி, இரும்பு, பாக்சைட் உள்ளிட்ட கனிம வளங்கள், நீர்வளம், நிலவளம், கடல்வளம், எண்ணெய், எரிவாயு, காடுகள், மலைகள் முதல் அலைக்கற்றை வரையிலான எல்லா பொதுச்சொத்துக்களையும் இலவசமாகவோ, அடிமாட்டு விலைக்கோ கைப்பற்றிக் கொள்வதற்கான போட்டி இன்று உலகெங்கும் தீவிரமடைந்திருக்கிறது. 2008-க்குப் பிந்தைய பொருளாதார மந்தத்திலிருந்து மீள வழி தெரியாமல், உலக முதலாளித்துவம் திணறுகிறது. சந்தைகளின் தேக்கம், மிகை உற்பத்தி ஆகியவற்றின் காரணமாக தொழில் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. மூலதனத்தின் ரத்தப்பசியைத் தீர்ப்பதற்கு, பொதுச்சொத்துக்களைக் கொள்ளையடிப்பதும் நிதி மூலதனச் சூதாட்டமுமே முதலாளி வர்க்கம் தெரிவு செய்யத்தக்க தொழில்களாக இன்று எஞ்சியிருக்கின்றன. சூதாட்டத்தைக் காட்டிலும் உத்திரவாதமானது கொள்ளை என்ற உண்மையை விளக்கத் தேவையில்லை. இந்தக் கொள்ளைதான் இந்தியத் தரகு முதலாளிகளின் இலாப விகிதத்தை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து, அவர்களில் பலரை உலக கோடீசுவரர்களாகவும் ஆக்கியிருக்கிறது.
மக்கள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள், மாவோயிஸ்டு பிரச்சினை, சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் தொந்திரவுகள் போன்றவற்றால் இந்தக் கொள்ளையைத் தாங்கள் விரும்பிய வேகத்தில் நடத்த முடியவில்லை என்பதுதான் காங்கிரசு அரசின் மீது தரகு முதலாளிகள் கோபம் கொள்ளக் காரணம். மாறாக, சுற்றுச்சூழல் தடையகற்றுதல் (environmental clearance) குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்துத் தரப்படும் என்று கூறும் மோடியின் தேர்தல் அறிக்கை அவர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறது.
“சுற்றுச்சூழலைப் பேணுதல், பழங்குடி மக்களின் உரிமை, விவசாயிகளின் உரிமை” என்பன போன்ற பசப்பு வார்த்தைகள் ஏதுமின்றி, மரங்கள், மலைகள் முதல் பழங்குடிகள், மீனவர்கள் வரையிலான அனைத்தையும், நாட்டின் ‘வளர்ச்சி’க்காக அகற்றப்படவேண்டிய தடைகளாக மோடி கருதுகிறார் என்பது மட்டுமின்றி, இந்து ராஷ்டிரத்துக்கான தடையகற்றும் நடவடிக்கைகளை அவர் ஏற்கனவே குஜராத்தில் வெற்றிகரமாக செய்தும் காட்டியிருக்கிறார் என்பதால், மோடியை இயல்பாகவே அவர்கள் ஆதரிக்கிறார்கள். பிரதமர் பதவியின் மீது மோடி என்ற பாசிஸ்டு கொண்டிருக்கும் மோகத்தைக் காட்டிலும், பிரதமர் நாற்காலியில் மோடியை அமர்த்துவதற்கு கார்ப்பரேட் முதலாளிகள் காட்டும் வேகம் சற்று அதிகமாகவே இருக்கிறது.
ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2
80-களில் ராம ஜென்மபூமி என்ற கட்டுக்கதையையும் இந்துத்துவ அரசியலையும் எதிர்த்து எழுதுவதற்கு, பல்வேறு சிந்தனைப் போக்குகளைச் சார்ந்த அறிவுத்துறையினரும் இருந்தனர். வெளியிடுவதற்கும் ஊடகங்களில் ஓரளவு இடமிருந்தது. இன்றோ தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், இணையம் என எல்லா ஊடகங்களும் மோடிக்காக குரைக்கின்றன. முன்னர் பார்ப்பன மதத்தை எதிர்த்தவர்கள் வேட்டையாடிக் கொன்றொழிக்கப் பட்டதைப் போலவே, இன்று மோடியை விமரிசிக்கும் ஊடகவியலாளர்கள் பணியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்; தாக்கப்படுகிறார்கள்.
ஒளிரும் குஜராத் என்பது முதலாளி வர்க்கத்தால் படைக்கப்பட்ட கடவுள். மோடி அதன் தலைமைப் பூசாரி. தனது கடவுளோ, பூசாரியோ கேள்விக்குள்ளாக்கப்படுவதைத் தரகு முதலாளி வர்க்கம் விரும்பவில்லை என்பதையே இவை காட்டுகின்றன.
ஒளிரும் குஜராத் என்ற புனைவைத் தகர்க்கும் புள்ளி விவரங்கள் அன்றாடம் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு 11 ரூபாய்க்கு குறைவாக ஈட்டுவோரே வறியவர்கள் என்ற குஜராத் அரசின் வரையறை, 4.5 இலட்சம் மாநில அரசு ஊழியர்கள் ஒப்பந்தக் கூலிகளாக அமர்த்தப்பட்டிருப்பது, நகர்ப்புற சேரிகளில் 75% வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமலிருப்பது, இந்தியாவிலேயே அதிக கடன்பட்ட மாநிலங்களில் குஜராத் மூன்றாம் இடத்தில் இருப்பது, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவுக்குள் வந்த மொத்த அந்நிய முதலீடு 7000 கோடி டாலர்கள்தான் என்று ரிசர்வ் வங்கி கூற, பத்தாண்டு மோடி ஆட்சியில் 8 இலட்சம் கோடி டாலர் அந்நிய முதலீடு குஜராத்திற்கு வந்திருப்பதாக வைப்ரன்ட் குஜராத் இணைய தளம் புளுகுவது… என அடுக்கடுக்காக உண்மைகள் வருகின்றன.
மோடியின் குற்றங்கள், குஜராத் அரசின் ஊழல்கள் பற்றிய சி.ஏ.ஜி.- யின் அறிக்கை, நிலப்பறிப்புக்கும் அணு உலைக்கும் எதிரான மக்கள் போராட்டங்கள் என அடுத்தடுத்து செய்திகள் வருகின்றன. ஆனால், அனைத்தும் மோடி ஆதரவு பிரச்சாரம் எனும் அடைமழையில் மூழ்கடிக்கப்படுகின்றன.
இந்துக்களின் வெகுளித்தனமான மத நம்பிக்கையை, தனது இராம ஜென்மபூமி என்ற சதித் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொண்டதைப் போலவே, இன்று தனியார்மயத் தாக்குதல்கள், ஊழல், விலை உயர்வு போன்ற பல காரணங்களால் காங்கிரசு அரசின் மீது அதிருப்தியுற்று, ஏதேனும் ஒரு மாற்றத்துக்காக ஏங்குகின்ற, ஆனால் என்ன மாற்றம் வேண்டும் என்று அறிந்திராத மக்களிடம், ஒளிரும் குஜராத்தைப் புதிய கடவுளாகவும், மோடியை மீட்பனாகவும் சந்தைப்படுத்துகிறது பா.ஜ.கட்சி.
ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2
ஒரு வகையில், ஒளிரும் குஜராத் என்பதே புதிய மொந்தையில் பழைய கள்ளுதான். 2004 பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில், ஆடு மேய்ப்பவர்களும் செல்போன் வைத்திருப்பதைக் காட்டி, “இந்தியா ஒளிர்கிறது” என்று பிரச்சாரம் செய்தது பாரதிய ஜனதா. இந்தியா ஒளிரவில்லை என்பதைத் தம் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருந்த மக்கள் பாரதிய ஜனதாவைத் தோற்கடித்தார்கள். அதனால்தான் மக்கள் தமது சொந்த அனுபவத்தில் கண்டுபிடிக்க முடியாததும், சிங்கப்பூர், துபாயைப் போல எங்கோ இருப்பதும், யாரும் காணாததுமான குஜராத்தின் படத்தைக் காட்டி ஒளிர்கிறது, ஒளிர்கிறது என்று கூவுகிறது.
இராம ஜென்மபூமி என்ற புனைகதையை வரலாற்றாசிரியர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் ஆதாரங்களுடன் கேள்விக்குள்ளாக்கிய போது, அவர்களை இந்து விரோதிகள் என்று பார்ப்பன பாசிஸ்டுகள் சாடியதைப் போலவே, இன்று குஜராத்தின் வளர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்கியவுடனே கேஜ்ரிவாலையும் பாகிஸ்தான் கைக்கூலி என்று முத்திரை குத்துகிறார் மோடி. ஒரு சிறிய விமரிசனமே மோடியின் கனவான் மேக்கப்பைக் கலைத்து அவரது உண்மைச் சொரூபத்தை வெளிக் கொணர்ந்து விடுகிறது.
“மோடியைத் தீமையின் உருவமாக சித்தரிப்பதன் மூலம் அவரை வீழ்த்திவிட முடியாது. ஏனென்றால், இளைய தலைமுறைக்குத் தீமைதான் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது; ‘நான், எனது’ என்று மோடி, தன்னை மட்டுமே முன்நிறுத்திப் பேசுவதும்கூட சுய முன்னேற்றத்தை விரும்பும் இன்றைய தலைமுறைக்குப் பிடிக்கத்தான் செய்யும். நெறிகளைப் பேசிப் பயனில்லை, வெற்றி பெறுவது எதுவோ அதுவே சிறந்த நெறி” என்று அம்பானிக்குச் சொந்தமான ஃபர்ஸ்ட் போஸ்ட் என்ற இணைய இதழில் அதன் ஆசிரியர் கட்டுரை எழுதுகிறார்.
இது மோடிக்கு ஆதரவான வெறிபிடித்த எழுத்து என்றபோதிலும், மோடியை ஆதரிக்கும் புதிய நடுத்தர வர்க்கத்தினரின் உளவியலை இது சரியாகத்தான் சொல்கிறது. 2002 இனப்படுகொலை என்பது இந்தப் பிரிவினருக்கெல்லாம் தெரியாத உண்மையல்ல; ஆனால் மோடிக்கு எதிராக நீங்கள் எத்தனை ஆதாரங்களைக் கொடுத்தாலும், “நிரூபிக்க முடியுமா?” என்று மடக்குவார்கள். அதேபோலத்தான், குஜராத்தின் பொய்மைகளை அம்பலப்படுத்துவோரையும் அவர்கள் மடக்குகிறார்கள். மோடி இந்துத்துவ அரசியலைப் பேசாமல் தவிர்ப்பதையும், ராஜ்நாத் சிங் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்பதையும், அதே நேரத்தில் அமித் ஷா பழிவாங்கச் சொல்வதையும் முரண்பாடுகளாகவோ சந்தர்ப்பவாதமாகவோ இவர்கள் கருதுவதில்லை. மாறாக, இதனைச் சாமர்த்தியம் என்று மெச்சுகிறார்கள்.
ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2
மோடியின் காலாட்படைகள் அனைவரும் முன்னாள் கரசேவகர்களாகேவா, இந்து வெறியர்களாகவோ இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. இந்து மத நம்பிக்கை கொண்டவர்களை மட்டும்தான் ராமபிரானால் அன்று திரட்ட முடிந்தது. ஒளிரும் குஜராத் என்ற இந்தப் புதுக்கடவுளோ, ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர்ஜி போன்ற கார்ப்பேரட் சாமியார்களை ஒத்தது. இது, இந்து மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒருவகை கார்ப்பரேட் மத நம்பிக்கை. வாழும் கலையால் வனைந்து உருவாக்கப்பட்ட புதிய பார்ப்பன மதம். இந்த நம்பிக்கையின் மத உள்ளடக்கம், ஏறத்தாழ மோடி அணிந்துவரும் டிசைனர் குர்த்தாவின் காவி நிறத்துக்கு ஒப்பானது.
மறுகாலனியாக்கம் தோற்றுவித்துள்ள ஏற்றத்தாழ்வை “வளர்ச்சி” என்று கொண்டாட முடிகின்ற மனோபாவத்துக்கும், பார்ப்பனியத்துக்குமான இடைவெளி கூப்பிடு தூரம்தான். 2002 படுகொலைக்கு நீதி கேட்கும் முஸ்லிம் மக்களுக்கு “வளர்ச்சியை” வழங்குவதாக வாக்களிக்கிறார் மோடி. அது சிறுபான்மையினர்க்கு வழங்கப்படும் சலுகை அல்ல, அனைவருக்குமான வளர்ச்சி என்றும் வலியுறுத்துகிறார்.
நீதி என்ற சொல்லைப் பார்ப்பனியம் மட்டுமின்றி முதலாளித்துவமும் விரும்புவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு என்ற ‘ஓர வஞ்சனையை’ எதிர்ப்பதற்கு, தகுதி-திறமை என்ற ‘நடுநிலையான’ மாற்றை பார்ப்பனியம் முன்நிறுத்தியதைப் போலவே, ‘நீதி’க்கு எதிரான நடுநிலையான மாற்று, ‘வளர்ச்சி’ என்று முன் நிறுத்துகிறார் மோடி.
சல்வா ஜுடும் கூலிப்படையால் தாய் மண்ணிலிருந்து அகதி முகாம்களுக்கு விரட்டப்பட்ட பழங்குடி மக்கள், 2002 இனப்படுகொலையின் போது வீடும், தொழிலும், உடைமைகளும் பறிக்கப்பட்டு அகதி முகாம்களுக்குத் துரத்தப்பட்ட முஸ்லிம்கள், முசாபர் நகரின் முஸ்லிம் அகதிகள், விவசாய அழிப்பு என்ற அறிவிக்கப்படாத வளர்ச்சித் திட்டத்தின் விளைவாக மாநிலம் விட்டு மாநிலம் நாடோடிகளாக ஓடும் விவசாயிகள் – இவர்கள் வேண்டி நிற்பது வளர்ச்சியா, நீதியா? சட்டீஸ்கரின் அகதி முகாம்களுக்கும், அகமதாபாத்தின் அகதி முகாம்களுக்கும் என்ன வேறுபாடு?
“வலியது வெல்லும்” என்ற தத்துவத்தைப் பார்ப்பனியப் பின்வாயால் கூறி வந்த மோடி, இனி அதனை முதலாளித்துவ முன்வாயால் முழங்குவார் என்பதைத் தவிர பார்ப்பன பாசிசத் தாக்குதலுக்கும், மறுகாலனியாக்கத் தாக்குதலுக்கும் வேறு என்ன வேறுபாடு? மனித முகம் கொண்ட “வளர்ச்சி”யும் இல்லை, மனித முகம் கொண்ட ராமராச்சியமும் இல்லை. எனவே, மோடியின் மனித முகம் என்பது ஒரு முகமூடி.
“நல்ல இந்து மதம், மத நல்லிணக்கம்” போன்ற வாதங்களின் மூலமன்றி, பார்ப்பன இந்து மதத்தைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம்தான் பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த முடியும். அதேபோல, “எந்த வர்க்கத்துக்கான வளர்ச்சி” என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம்தான், மறுகாலனியாக்க கொள்ளையையும், முதலாளித்துவக் கொள்ளையர்களின் சொர்க்கபுரியான குஜராத்தின் உண்மை முகத்தையும் மக்களுக்குக் காட்ட முடியும். இல்லையேல், “நல்ல முதலாளித்துவம், மனித முகம் கொண்ட வளர்ச்சி” என்பன போன்ற பித்தலாட்டங்களுக்கு நாம் பலியாக வேண்டியிருக்கும்.
குஜராத் – இந்துத்துவத்தின் சோதனைச்சாலை என்பதை வர்க்கக் கண்ணோட்டத்தில் விளங்கிக் கொள்ளுங்கள்” என்று தங்களது நடவடிக்கைகள் மூலம், டாடா, அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகள் மீண்டும் மீண்டும் நமக்கு வலியுறுத்திச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைத்தான் ஒருமுறை கேட்டுப் பாருங்களேன்.
*

மோடியை விஞ்சுகிறார் லேடி :

மோடியை விஞ்சுகிறார் லேடி
ஒளிரும் குஜராத், விஷன் தமிழ்நாடு போன்ற எல்லாமே மெக்கின்சி போன்ற பன்னாட்டு கன்சல்டன்சி நிறுவனங்களும், ஃபிக்கி, சி.ஐ.ஐ. போன்ற இந்தியத் தரகு முதலாளித்துவ சங்கங்களும் தத்தம் எதிர்கால தொழில் வளர்ச்சியை மனதிற்கொண்டு வழுவழு தாளில் அடித்துக் கொடுக்கும் விளம்பரக் காகிதங்கள் என்பதே உண்மை. அவற்றைத் தமது சொந்தக் கண்டுபிடிப்புகள் போல மோடியும் ஜெயாவும் சந்தைப்படுத்திக் கொள்கிறார்கள்.
தமிழகத்தில் 12 மணி நேர மின்வெட்டு, பத்து இலட்சம் விசைத்தறி முதலாளிகள் – தொழிலாளர்களின் போராட்டம், குடிக்கத் தண்ணீரில்லாமல் எங்கு நோக்கினும் பெண்களின் சாலை மறியல் போராட்டம் என இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில்தான், இவை எதையும் பற்றிக் கவலைப் படாமல், தமிழகம் முதன்மை மாநிலம் என்று பொளந்து கட்டிக் கொண்டிருந்தார் புரட்சித் தலைவி. எங்கோ இருக்கும் குஜராத்தைக் காட்டி ஏமாற்றுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
- சூரியன் vinavu.com
__________

கருத்துகள் இல்லை: