வியாழன், 8 மே, 2014

சென்னை குண்டுவெடிப்பு தீவிரவாதி என சந்தேகம் ? ரயிலுக்கு அடியில் படுத்து பயணம் செய்தவர் ?

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் திருவனந்தபுரம்
இடையிலான வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல திருவனந்தபுரம் ரயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர், பராமரிப்பு பணிகளுக்காக யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊழியர்கள் ரயிலின் அடிப்பகுதியில் சுத்தம் செய்த போது, சக்கரங்களுக்கு மேல் ஒரு மனித கால் தெரிந்தது.அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், ரயிலுக்கு அடியில் நுழைந்து பார்த்த போது ஒரு வாலிபர் சக்கரங்களுக்கு மேல் உள்ள சிறிய இடைவெளியில் படுத்திருந்தார். அவரை பிடித்து வெளியே கொண்டு வந்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, அவருடைய பெயர் டியோல் பசமட்டாரி (23) என்பதும் அசாம் மாநிலம் சலபாரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. டிக்கெட் பரிசோதகருக்கு பயந்து எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை 225 கிமீ தூரம் ரயிலுக்கு அடியில் படுத்து கொண்டு பயணம் செய்ததாக கூறினார்.


கடந்த ஒரு வருடமாக எர்ணாகுளத்தில் கட்டிட தொழில் செய்து வந்ததாகவும், அங்கு தகராறு ஏற்பட்டதால் வேலை தேடி திருவனந்தபுரம் வந்ததாகவும் கூறினார். அவரது உடலில் கழுத்து, கைகள் மற்றும் காலில் பலத்த காயங்கள் இருந்தது. சில இடங்களில் தீப்புண்களும் காணப்பட்டன. பேசக் கூட முடியாத நிலையில் அவர் இருந்தார். இதையடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இந்த தகவல் அறிந்ததும் திருவனந்தபுரம் ரயில்வே போலீசார் வந்து விசாரித்தனர். அப்போது வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

கோட்டயத்தில் ஒரு ரப்பர் தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்ததாகவும், அங்கு சிலருடன் அடிதடி ஏற்பட்டதில் தான் உடலில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், தீக்காயம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார். அவர் தீவிரவாதியாக இருக்கலாமோ என்ற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், அசாம் செல்லும் ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் இந்த வாலிபருக்கு தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் ரயில்வே எஸ்.பி. தலைமையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
- See more at tamilmurasu.org

கருத்துகள் இல்லை: