வெங்கடாச்சலம். இந்தப் பெயரைக் கேட்டாலே
தமிழகத்தில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அனைவரும் நடுங்குவார்களோ இல்லையோ, பம்முவார்கள். அப்படியொரு சக்திவாய்ந்த பெயர் இந்த வெங்கடாச்சலம்.
ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் வேந்தர்தான் இந்த வெங்கடாச்சலம். இவரைக் கிட்டத்தட்ட கடவுள் என்றே சொல்லலாம். பார்ப்பவர் அனைவரும் காலில் விழாத குறையாக வணங்குபவர் கடவுள்தானே…. ?
அப்படிப்பட்ட வெங்கடாச்சலத்தை சிபிஐ கைது செய்தது என்று அறிந்ததும் அதிர்ச்சி, ஆனந்தம், மகிழ்ச்சி எல்லாமுமே. ஆனால், நம் நாட்டில் சட்டத்தின் முன் எல்லோரும் சமமா என்ன ?
அப்படி என்ன குற்றம் செய்து விட்டார் வெங்கடாச்சலம் ? ஒரு ஏழெட்டு வெளிநாட்டுக் கார்களை வாங்கி விட்டார். இது ஒரு குற்றமா ? ஒரு எம்பிபிஎஸ் சீட்டுக்கு 75 லட்சம் வாங்கும் ஒரு கல்லூரியின் வேந்தருக்கு சொகுசுக்கார்கள் வாங்கக் கூட உரிமையில்லையா ? சமீபத்தில் ராமச்சந்திர பல்கலைக்கழகத்தில் எம்.டி ரேடியாலஜி சீட்டுக்கு ஏகத்துக்கும் டிமான்ட். கடைசியில் என்ன ஆனது தெரியுமா ? பெங்களுரில் சீட்டை ஏலம் விட்டார்கள். ஏலத்தில் வெற்றி பெற்றவர் செலுத்திய தொகை என்ன தெரியுமா ? நாலேமுக்கால் கோடி. இது போல பல்வேறு சீட்களை வைத்து வியாபாரம் செய்யும் ஒரு நபர், ஒரு எட்டு வெளிநாட்டுக் கார்களை வாங்கி வைத்திருந்தார். இதற்குப் போய் சிபிஐ கைது செய்து விட்டார்கள்.
வெளிநாட்டுக் கார்களை நேரடியாக வாங்குவதென்றால் கிட்டத்தட்ட 300 சதவிகித வரி கட்ட வேண்டும். என்னதான் பணம் கொழுத்த முதலை என்றாலும், எதற்காக அரசாங்கத்துக்குப் போய் வரி கட்டிக் கொண்டு ? அதனால்தான், எளிமையான முறையில் அலெக்ஸ் ஜோசப் மூலமாக கார்களை வாங்கினார்.
நீங்களோ நானோ கார் வாங்க வேண்டும் என்றால், முதலில் பழைய கார்களை விசாரிப்போம். சரிவரவில்லையென்றால், ஆல்டோ. இன்டிகா போன்ற கார்களை வாங்கலாம் என்று திட்டமிடுவோம். ஆனால், பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றே தெரியாத வெங்கடாச்சலம் போன்ற ஆட்களால் ஆல்டோ, இன்டிகா போன்ற கார்களில் பயணம் செய்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இருப்பதிலேயே விலை உயர்ந்த கார் எது என்று விசாரிப்பார்கள். அந்த காரையும் நேர்மையாக வரி கட்டி வாங்க மாட்டார்கள். அற்பத்தனமாக திருட்டுத்தனத்தில் ஈடுபடுவார்கள். ஏன் இவ்வளவு துணிச்சலாக திருட்டுத்தனத்தில் ஈடுபடுகிறார்கள் தெரியுமா ? நம்மை யாருமே எதுவுமே செய்ய முடியாது என்ற துணிச்சலே. நாம்தான் காவல்துறை, நாம்தான் நீதிமன்றம், நம்மை யார் என்ன செய்து விட முடியும் என்ற இறுமாப்பே இப்படி நடந்து கொள்வதற்கு காரணம்.
வெங்கடாச்சலத்தின் செல்வாக்குக்கு மற்றொரு உதாரணம் உச்சநீதிமன்றம் மருத்துவ கல்லூரிகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தது. இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் சேர்த்து ஒரு பொது நுழைவுத் தேர்வு இருந்தது. அந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சியடையாதவர்கள் மருத்துவராக முடியாது என்ற கட்டுப்பாடு இருந்தது. இப்படியெல்லாம் கட்டுப்பாடுகள் வைத்தால், 35 மதிப்பெண்கள் பெற்றவர்களெல்லாம் எப்படி மருத்துவர் ஆவது ? இதன் காரணமாக, தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் சேர்ந்து இந்த பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
அப்போதைய தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் ஓய்வு பெறும் நாளன்று அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பு வெளிவந்த அன்று காலை, ஒரு வழக்கறிஞர், இணையதளத்தில் இந்தத் தீர்ப்பு இப்படித்தான் வரப்போகிறது என்று ஆரூடம் சொன்னார் அவர் கூறியது போலவே அச்சு பிசகாமல் தீர்ப்பு வந்தது. வழக்கறிஞர் என்றல்ல, வெங்கடாச்சலம் மூலமாக பல கல்லூரி அதிபர்களுக்கும் அனைத்து விபரங்களும் தெரிந்திருந்தது என்றால் வெங்கடாச்சலத்தின் திறமையையும் வலிமையையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
இந்தத் தீர்ப்பு குறித்து, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், வெளிப்படையாக விமர்சித்தார். இதன் பிறகு, ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், எனது எதிரிகளில் பிரசாந்த் பூஷணும் ஒருவர் என்றார். அவர் ஏன் உங்களை எதிரியாக நினைக்கிறார் என்று பிரசாந்த் பூஷணிடம் கேட்டபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார். ”
I can understand why he thinks that. It is because I told him to recuse himself from several cases which he should not have dealt with. He also knows that I was openly talking about the fact that his judgment in the NEET case had been leaked well before it was delivered. Although he said it was not leaked from his chamber, but his body language gave him away. It was obviously given to the private medical colleges well before it was given to his brother judge Justice Dave.
The draft judgment was ready at least by the first of July because on that date my application was listed before him and that time I had information that the draft judgment was already with these private medical colleges. Therefore, I am not surprised at his statement. Every corrupt judge would regard me as his enemy because I have been speaking out against corrupt judges and corruption. I am not surprised he regards me as his enemy.”
’எனக்கு புரிகிறது கபீரின் ஆத்திரம். பல வழக்குக்களை அவர் விசாரிக்கக்கூடாது என நான் நேரடியாகவே கோரியிருக்கிறேன். இந்த நேரடித் தேர்வு வழக்கில் இப்படித்தான் தீர்ப்பு வரப்போகிறது என்பதை நான் கணித்து பலரிடம் வெளிப்படையாகவே பேசிவந்தது கபீருக்குத் தெரியும். தனது அலுவலகத்திலிருந்து தீர்ப்பு விவரங்கள் கசியவில்லை என்றார் ஆனாலும் அவரது உடல் மொழி அவரைக் காட்டிக்கொடுத்தது….சக நீதிபதி தவேக்கு முன்பே தீர்ப்பின் நகல் தனியார் கல்லூரி அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. ஜூலை முதல் நாளன்று என்னுடைய வழக்கு அல்டமாஸ் கபீர் முன் வருமென்று அறிவிக்கப்பட்டது, அப்போதே தீர்ப்பு தயாராகியிருக்கவேண்டும், கல்லூரி அதிபர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கவேண்டும்… கபீர் என்னை தன்னுடைய விராதி என வர்ணித்தது எனக்கொன்றும் வியப்பை அளிக்கவில்லை… நான் ஊழல் பேர்வழிகளைப் பற்றித் தொடர்ந்து பேசிவருவதால் அப்படிப்பட்டவர்கள் என்னை நண்பனாகவா நினைப்பார்கள்?” என்றார் சாந்தி பூஷன்.
பாதாளம் வரை மட்டுமல்ல உச்சநீதி மன்றம் வரையும் பணம் பாயும். வெங்கடாச்சலத்திடம் கொட்டிக்கிடக்கிறது அது. அப்புறம் கேட்பானேன் அனைவரும் எழுந்து நின்று சலாம் அடிக்க அல்லது காலில் விழ.
காவல்துறையின் உயர் அதிகாரிகள் அனைவரும் இவரது ஆளுகைக்கு உட்பட்டவர்களே….. சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருக்கும் டி.கே.ராஜேந்திரனின் மகள் ராமச்சந்திராவில்தான் படிக்கிறார். உளவுப் பிரிவு இணை ஆணையர் வரதராஜுவின் இரண்டு பிள்ளைகளும் ராமச்சந்திராவில்தான் படிக்கிறார்கள். இது போல பல முக்கிய உயர் உயர் அதிகாரிகளின் பிள்ளைகள் அனைவரும் ராமச்சந்திராவில்தான் படிக்கிறார்கள். இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம், மிகப் பெரிய அதிகாரிகள் என்பதால், அவர்களுக்கு இலவசமாக சீட் கிடைக்கும் என்று நினைத்து விடாதீர்கள். யாராக இருந்தாலும் பணம்தான். நீங்கள் உயர் உயர் அதிகாரியாக இருந்தால், இரண்டோ அல்லது மூன்றோ லட்சம் குறைத்துக் கொள்வார். அவ்வளவுதான்.
கடந்த வாரம், சம்மன் செய்து விசாரணைக்காக அழைக்கப்பட்ட வெங்கடாச்சலத்தை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். யார் கைது செய்யப்பட்டாலும், அவர்களை சிறைக்கு அனுப்பும் உத்தரவை பிறப்பிப்பது, நீதிபதியே. வழக்கமாக காவல்துறை அதிகாரிகள், 14 அல்லது 15 நாட்களுக்கு கைது செய்யப்பட்டவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு வேண்டுகோள் விடுப்பார்கள். அதன்படி, நீதிபதியும் உத்தரவிடுவார். ஆனால், சிபிஐ நீதிபதி கிருஷ்ணமூர்த்தி வெங்கடாச்சலத்துக்கு ஒரு நாள் நீதிமன்றக் காவல் என்று உத்தரவிட்டார். இந்த ஒரு நாள் நீதிமன்றக் காவல் கேள்விப்பட்டதேயில்லை. நீதிமன்றக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், புழல் சிறைக்கு அண்ணனை அழைத்துச் செல்கிறார்கள். சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் அனைத்து கைதிகளையும், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது வழக்கம். அதன்படி, ஸ்டான்லி மருத்துவமனையில் வெங்கடாச்சலத்துக்கு பரிசோதனை நடக்கிறது.
வெங்கடாச்சலத்தை பரிசோதித்த மருத்தவர்கள், இவருக்கு கடுமையான நெஞ்சு வலி இருக்கிறது. ஒரு இன்ச் நகர்த்தினாலும் உயிருக்கே ஆபத்து என்றனர். காவல்துறை அதிகாரிகள் என்ன செய்ய முடியும் ? சரி என்று அங்கேயே அட்மிட் செய்தனர். பிறகு, வழக்கத்துக்கு மாறாக, சிபிஐ நீதிபதி கிருஷ்ணமூர்த்தி, மருத்துவமனைக்கே சென்று, வெங்கடாச்சலத்தை 15 நாட்கள் ரிமாண்டு செய்தார்.
வெங்கடாச்சலம் மருத்துவமனையில் இருந்த அந்த ஒரு சில நாட்களில் ஏராளமான பார்வையாளர்கள். ஸ்டான்லி மருத்தவமனையின் மொத்த மருத்துவர்களுமே அங்கே குழுமினார்கள். வெங்கடாச்சலத்துக்கு கை கால் அமுக்கி விடுவதைத் தவிர மற்றதனைத்தையும் செய்தார்கள். இப்படி மகிழ்ச்சியாக மருத்துவமனையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் வெங்கடாச்சலம்.
கைது செய்யப்பட்ட அன்று இரவு வரை, மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தார் வெங்கடாச்சலம். அப்போது, அவர்களிடம். எப்போ சார் ஸ்டேட் போலீஸ் வரும் என்று நச்சரித்தவண்ணம் இருந்திருக்கிறார் வெங்கடாச்சலம். ஸ்டேட் போலீஸ், நமது கைப்பாவை என்பது, வெங்கடாச்சலம் அறியாததா என்ன ? அதுவும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியின் மகளே அவரது கல்லூரியில் படிக்கையில், அது இவரது ஏவல் துறை அல்லவா ?
இவ்வாறு அவர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கையில் வெங்கடாச்சலத்தை கஸ்டடி எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தனர் சிபிஐ அதிகாரிகள். வெங்கடாச்சலத்தின் ஜாமீன் மனுவும் நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்காக வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கஸ்டடி கேட்ட சிபிஐயின் மனுவை தள்ளுபடி செய்தார். கஸ்டடியில் விசாரிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தினால் தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார். அதே நேரத்தில் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தார்.
(கனம் கோர்ட்டார் அவர்களே, அத்தகைய ஆதாரங்களை சேகரிக்கவே குற்றம் சாட்டப்படுபவரை கஸ்டடியில் வைத்து விசாரிப்பார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.)
ஆனால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யும் அளவு துணிவா என வியக்கவேண்டாம். பொதுவாகவே சிபிஐ நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டால், அந்த நீதிபதிகள் கொஞ்சம் ஒழுங்காக இருப்பார்கள். அது வரை வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், சிபிஐக்கு வந்ததும், மிகுந்த நேர்மையாளர்கள் போல நடந்து கொள்வார்கள். சிபிஐ மீது அவ்வளவு பயம். இந்த கிருஷ்ணமூர்த்தியோ ஒரு வருடத்துக்குள் ஓய்வு பெற உள்ளார். ஓய்வு பெறும் நேரத்தில் சிபிஐ சிக்கலை இழுத்து விட்டால்? எனவே பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீனாக, சிபிஐ கஸ்டடி இல்லை ஆனால் ஜாமீனும் இல்லை என்ற ரீதியில் தீர்ப்பு.
வெங்கடாச்சலம் வழக்கில் அதன் பிறகு நடந்தவையே இன்னும் சுவையானவை. கோடை விடுமுறை காலங்களில், விடுமுறை நீதிமன்றங்கள் செயல்படும். அந்த நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்வது, திங்கள் மற்றும் செவ்வாய். என்ன வழக்கு, ஏன் அவசரம் என்பன போன்றவற்றை, விடுமுறை நீதிமன்ற பதிவாளரிடம் விளக்கி, அவர் அனுமதித்தால் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். விசாரணை புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும். இதைத் தவிர்த்து வேறு நாட்களில் தாக்கல் செய்யவோ, வாதிடவோ முடியாது.
இந்த வாரத்துக்கு விடுமுறை கால நீதிபதி, நீதி நாயகன் கர்ணன். திங்கள் மற்றும் செவ்வாய் அன்றுதானே வழக்கு தாக்கல் செய்ய முடியும். ஆனால் வெங்கடாச்சலத்தின் ஜாமீன் மனு குறித்து, வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர், அவசர மனுவாக விசாரணை செய்ய வேண்டும் என்று கோருகிறார். துடிதுடித்தார் கர்ணண்….. எங்கே சிபிஐ வழக்கறிஞர். ? மதியம் நான் இதை விசாரணைக்கு எடுக்கும்போது சிபிஐ பதில் மனு தயாராக இருக்க வேண்டும். தாமதித்தால் நான் ஜாமீன் வழங்கி விடுவேன் என்று எச்சரித்தார் (தாக்கல் செஞ்சா நியாயப்படி விசாரிப்பீங்களா ?)
சிபிஐ அமைப்பை பொறுத்தவரை, உயர்நீதிமன்றத்தில் எந்த மனு தாக்கல் செய்வதாக இருந்தாலும், அதை இணை இயக்குநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் என்றால் இயக்குநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். எதற்காக இந்த ஏற்பாடு என்றால், சிபிஐ போன்ற சிறந்த அமைப்பு, தப்பித் தவறிக் கூட நீதிமன்றத்தில் தவறாக எதையும் தாக்கல் செய்து விடக்கூடாதே என்பதற்காகத்தான்.
ஆனால் கர்ண மகாராசா இப்படி உத்தரவிட்டதும், அடித்து பிடித்துக் கொண்டு வேலை செய்தனர் சிபிஐயின் மூத்த அதிகாரிகள். கர்ணன் கேட்டபடியே, மதியம் பதில் மனுவையும் தாக்கல் செய்கிறார்கள்.
ஜாமீன் வழங்குவதை எதிர்த்து கடுமையாக வாதாட வேண்டிய சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகரோ, கல்லுருண்டை மாதிரி நிற்கிறார். “மை லார்ட்…. இன்வெஸ்டிகேஷன்” என்று மென்று விழுங்குகிறார். இதற்குள் கர்ணன்… “என்னங்க கேஸ் இது… ? இத்தனை வருஷம் கழிச்சு இதை ஏன் விசாரிக்கிறீங்க ? அவர்தான் எவ்வளவு வரி கட்டணுமோ அதை கட்டறேன்னு சொல்லிட்டாருல்ல… அப்புறம் எதுக்குங்க அரெஸ்ட் பண்றீங்க ? வெரி பேட்” என்கிறார். பதில் மனுவை தருகிறார்கள். வாங்கிப் பார்த்து அதைக் கடாசிவிட்டு, ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறார் கர்ணன்.
சிபிஐ வழக்கறிஞரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்! மத்திய புலனாய்வுத்துறை தொடுக்கும் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மிக மிக முக்கிய புள்ளிகளாக இருப்பார்கள். கல்வித் தந்தைகளாக இருப்பார்கள். அது போன்ற வழக்குகளிலெல்லாம் உள்குத்தில் ஈடுபடுபவர்தான் சந்திரசேகர். வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலரது கல்வி ஆலயங்களில் நீதிபதிகளின் அருமை வாரிசுகளுக்கு இடம் பெற்றுத் தரும் வல்லமை படைத்தவர் சந்திரசேகர்.
முன்பொருமுறை சுரானா என்ற மார்வாடி வணிகரின் 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் மார்வாடிக்கு சாதகமாக இவர் நடந்து கொள்ள இருந்தை, சிபிஐ அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக கண்காணித்த காரணத்தால் தடுத்தது குறித்து முன்னரே விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.
இவர் இரண்டாவது முறையாக சிபிஐ வழக்கறிஞராக நியமிக்கப்பட்டதற்கு காரணம் தற்போது உளவுத்துறை டிஜிபியாக இருக்கும் அசோக் குமார். அவரது பணி மூப்பு தொடர்பான வழக்கை எண்பது மற்றும் தொண்ணூறுகளில் நடத்தி வெற்றி கண்டவர் சந்திரசேகர்தான். அந்த நன்றியில், நல்லெண்ணத்தில் இரண்டாம் முறையாக அவர் சிபிஐ வழக்கறிஞராக உதவியிருக்கிறார் டிஜிபி.
அசோக் குமாரிடம் உள்ள ஒரு குறைபாடு, யாராவது ஒருவரை நல்லவர் என்று நம்பினால், அந்த கருத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டார். அது சந்திரசேகர் போன்றோருக்கு வசதியாகவிருக்கிறது.
2011ம் ஆண்டில் ஜெயலலிதா மீதான பிறந்தநாள் பரிசு வழக்கில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. வழக்கு கே.என்.பாஷா முன்னிலையில் வர இருந்தது. பாஷாவிடம் வழக்கு விசாரணைக்கு வந்தால், ஊற்றி மூடி விடுவார் என்றுணர்ந்தோ என்னவோ சிபிஐ அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர். அப்போது சந்திரசேகர் துடித்தார் பாருங்கள்…. அப்படி ஒரு துடிப்பு. டெல்லிக்கு பேசினார். டெல்லியில் இருந்து உடனடியாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவு வந்ததும், வேறு வழியின்றி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் எதிர்பார்த்தது போலவே ஜெயலலிதா மீதான வழக்கை ரத்து செய்தார் கே.என்.பாஷா. இதே போல, ஜெகதரட்சகனின் மகள் மற்றும் மகன் மீதான வழக்கில் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவும் பெருமளவில் சந்திரசேகர் உதவி செய்துள்ளார் என்கின்றன சிபிஐ வட்டாரங்கள்.
இப்போதெல்லாம், சந்திரசேகரனின் வண்டவாளங்கள் சிபிஐ அதிகாரிகளுக்கு முழுக்க தெரிந்து விட்டதால், அவருக்கு அடுத்த பணி நீட்டிப்பு வழங்கவில்லை. ஆனால் மங்குணி சிபிஐ அதிகாரிகள் சந்திரசேகருக்கு அடுத்த வழக்கறிஞரை தேர்வு செய்வதில் காட்டி வரும் தாமதத்தினால் இவர் தொடர்ந்து சிபிஐ வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார்.
அப்படிப்பட்ட புத்திசாலிக்கு வெங்கடாச்சலம் ஜாமீன் பெற என்ன செய்யவேண்டும் என்பது தெரியாதா?
சமீபத்தில் நர்சிங் கல்லூரிகளுக்கான ஆடிட் பணியை செய்ய வேண்டிய அதிகாரியான 2005ம் ஆண்டு பேட்ச்சைச் சேர்ந்த ஐஏ அன்ட் ஏஎஸ் அதிகாரி பரமசிவத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவர் புழல் சிறையில் இருந்தார். கர்ணன் நீதிபதி என்றதும் அவசர அவசரமாக ஜாமீன் மனு கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து வந்தனர். மனு விசாரணையின் போது, கர்ணன், சிபிஐ வழக்கறிஞரைப் பார்த்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார். சந்திரசேகர், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கூறியதும், நான்தான் ஜாமீன் வழங்கப் போகிறேனே…. பிறகு எதற்கு பதில் மனு என்று கூறி, உடனடியாக ஜாமீன் வழங்கினார்.
இப்போதும் நீதிபதி கர்ணன் இரண்டு நாட்கள் ஜாமீன் விசாரிக்கும் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருப்பார் என்பதை அறிந்து அவர் முன் வெங்கடாச்சலம் தொடர்பான வழக்கை எடுத்துச் செல்லும் தொழில் இரகசியமெல்லாம் சந்திரசேகருக்கு அத்துபடி.
வெங்கடாச்சலம் மட்டுமல்ல கார் கடத்தலின் கதாநாயகன் அலெக்ஸ் ஜோசப்பும் கர்ணனின் கருணையால் உய்வு பெற்றார். அலெக்ஸ் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது கர்ணன் கடுமையாகவே கோபப்பட்டார்.
“குற்றப்பத்திரிக்கைதான் தாக்கல் செய்தாயிற்றே…. எதற்காக இவரை இன்னும் சிறையில் வைத்திருக்கிறீர்கள்… பதில் மனுவெல்லாம் தேவையில்லை. நான் ஜாமீன் தரப்போகிறேன். வேண்டுமென்றால் அவர் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துக் கொள்ளுங்கள்” என்றார். அலெக்ஸ் ஜோசப் மீது நிலுவையில் உள்ள மற்றொரு வழக்கு போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்றது குறித்து என்பதை நீதி நாயகனுக்கு யார் புரிய வைப்பது ? சந்திரசேகருக்கு அப்படிப் புரியவைக்க பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன !
இந்த வழக்குகளிலெல்லாம், உச்சநீதிமன்றம் சென்று ஜாமீன் மனுவை ரத்து செய்ய வைக்கலாம்தான். ஆனால், சிபிஐ போன்ற அமைப்புகளில் உச்சநீதிமன்றம் செல்ல பல்வேறு படிகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். அதற்குள், ஒரு வருடம் ஆகி விடும். இந்த நாட்டில் இன்னமும் ஓரளவுக்கு நம்பிக்கையோடு உள்ள ஒரு அமைப்பு, சிபிஐ. இது போன்ற ஒரு அமைப்புக்கே, பதில் மனு தாக்கல் செய்யக் கூட அனுமதி மறுக்கிறார் என்றால், கர்ணன் யார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அகர்வால், வேதனையோடு, கர்ணன் பற்றி புகார் அனுப்பி, கிட்டத்தட்ட மூன்று மாதங்களான பின்னாலும் இது வரை அவரை சிக்கிம் அல்லது வேறு ஏதாவது மாநிலத்திற்கு மாற்றாமல் வைத்திருந்தால் அவர் நினைத்ததை ஏன் செய்யமாட்டார்?
அகர்வால் ஓரம் கட்டினால் பகிரங்கமாகவே மோதுகிறார். தேசீய பட்டியலினத்தவர் ஆணையத்திடம் முறையிடுகிறார் தான் தாழ்த்தப்பட்டவர் என்பதால் பழிவாங்கப்படுவதாக. செய்தியாளர்களை சந்தித்து எச்சரிக்கை விடுகிறார்.
இந்நிலையில் அகர்வால் மிரண்டாரா உச்ச நீதிமன்றமே மிரண்டதா நமக்குத் தெரியாது, இறுதியில் அகர்வாலின் வேண்டுகோள் நிறைவேற்றப்படவில்லை.
தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி அப்பதவியில் ரெகுலரைஸ் ஆகவேண்டும், எனவே எப்பிரச்சினையிலும் சிக்கிக்கொள்ள விரும்பமாட்டார் என்கின்றன நீதித்துறை வட்டாரங்கள்.
எனவே நீதிபதி கர்ணன் போன்றோருக்கு ஜாக்பாட்தான். அவர் விரும்பும்வண்ணம் ஜாமீன் நீதிமன்றப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
அவரது ஆங்கிலப் புலமை அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்கும்போது பக்கம் பக்கமாக அவரது தீர்ப்புக்கள் எப்படி எழுதப்படுகின்றன என்பது தனிக்கதை.
இத்தகைய பின்னணியில்தான் கல்வியை வியாபாரம் செய்து கொழிக்கும் சமூக விரோதிகள், சட்ட விரோதமாக காரை கடத்தி, வரி ஏய்ப்பு செய்வதைக் கண்டுபிடித்து ஓர் அமைப்பு நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றங்கள் கைகொடுக்கின்றன.
என்ன செய்யலாம்? சவுக்கில் புலம்பலாம். சட்டம் என்பது இருளில் மூழ்கிவிடாமல் அனைவர்க்கும் நீதி கிடைக்கும் நாள் வாராதா என ஏங்கலாம். வேறு என்ன செய்ய முடியும் ? சவுக்கு.கொம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக