வியாழன், 8 மே, 2014

2ஜி வழக்கு: சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார் கனிமொழி!


டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி மகளும், ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி, டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 17 பேரும் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்று அண்மையில் சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, கடந்த திங்கட்கிழமை தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். நீதிபதி அளித்திருந்த 1,718 கேள்விகளுக்கான பதிலை ராசா எழுத்துப்பூர்வமாகவும் வாய்மொழியாகவும் அளித்தார்.  இதை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்தியத் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா, ஆ.ராசாவின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் தங்கள் வாக்குமூலங்களை செவ்வாய், புதன் ஆகிய தினங்களில் பதிவு செய்தனர். இதனிடையே குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பால்வா, நீதிபதி எழுப்பும் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க அனுமதிக்குமாறு கோரினார். அதை தொடர்ந்து, எழுத்துப்பூர்வமாக பால்வா வாக்குமூலம் பதிவு செய்ய நீதிபதி சைனி கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தார். இந்நிலையில், தி.மு.க. ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் தனது வாக்குமூலத்தை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று எழுத்துப்பூர்வமாக பதிவு செய்தனர்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: