ஞாயிறு, 4 மே, 2014

நீதிபதியின் உத்தரவால் குமுதம் வரதராஜன் தரப்பு அதிர்ச்சி !

குமுதம் குரூப்பில் இருந்து வரதராஜன் ரூ.25 கோடி ரூபாயை எடுத்துக் கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை பெருநகர நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 4 ஆண்டுகளுக்குப் பின் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதோடு மட்டுமின்றி இந்த வழக்கை புதிதாக குழு நியமித்து விசாரித்து 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதனால், குமுதம் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் முன்னணி வாரப் பத்திரிகையாகத் திகழும் குமுதம் 1947-ம் ஆண்டு ஜவஹர் பழனியப்பனின் தந்தை எஸ்.ஏ.பி. அண்ணாமலையால் தொடங்கப்பட்டது. இதில் பி.வி.பார்த்தசாரதி (வரதராஜனின் தந்தை) மேலாளராகப் பணிபுரிந்தார். இருவரும் இணைந்து தங்கள் கடுமையான உழைப்பால் குமுதத்தை தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் மிக அதிகப் பிரதிகள் விற்கும் சஞ்சிகையாக மாற்றினர்.

டாக்டரான ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் மிகப்பெரிய ஹார்ட் சர்ஜன். இதனால் அங்கேயே நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினார்.
எஸ்.ஏ.பி. அண்ணாமலை, பி.வி.பார்த்தசாரதி ஆகிய இருவரின் மறைவுக்கு பின் குமுதம் பத்திரிகை நிர்வாகம் பார்த்தசாரதி மகன் வரதராஜனின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
வரதராஜனுக்கு குமுதத்தில் குறிப்பிட்ட அளவு பங்கும் ஜவஹர் பழனியப்பனால் வழங்கப்பட்டது, ஆனால் அதற்கான பணத்தை வரதராஜன் இது வரை செலுத்தவில்லை என்று புகார் உள்ளது. இதனால், இருவருக்கும் இடையே பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு பணியாளர்கள் ரூபத்தில் மோதிக்கொண்டனர்.
இந்த மோதலில் வரதராஜனின் கையே ஓங்கியது. ஏனென்றால் குமுதம் பணியாளர்கள் பெரும்பாலானோருக்கு வரதராஜனையே தெரியும். அமெரிக்காவில் வசிக்கும் ஜவஹர் பழனியப்பனை பலருக்கும் யார் என்றேகூட தெரியாது.
நிர்வாகம் முழுக்க வரதராஜன் கட்டுப்பாட்டில் இருந்ததால் குமுதத்தின் அனைத்து வரவு, செலவுகளும் வரதராஜன் கையெழுத்து இல்லாமல் நடப்பதில்லை.
தனது தாய் கோதை ஆச்சியை குமுதம் அலுவலகத்துக்குச் செல்லுமாறு அமெரிக்காவில் இருந்தவாறே ஜவஹர் பழனியப்பன் அனுப்பி வைத்தார்.
ஆனால், அங்கு அவருக்கு உட்கார சீட் கொடுக்கக்கூட யாரும் முன்வரவில்லை. இதனால், அவமானமடைந்த கோதை ஆச்சி குமுதம் அலுவலகப் பக்கமே தலைகாட்ட மாட்டேன் என்று போய்விட்டார்
இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியபோது, ஜவஹர் பழனியப்பன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி தலையிட்டார்.
அவர் சில யோசனைகளை முன்வைத்து பஞ்சாயத்துச் செய்தார். ஆனால், வரதராஜனோ ஏற்க மறுத்து “நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு” என்ற பாணியில் நடந்து கொண்டார். இதனால், கடுப்பான கருணாநிதி, “சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று கூறிவிட்டார்.
இதையடுத்து வரதராஜன் மீது சில வழக்குகள் போடப்பட்டு கைது நடவடிக்கை வரை சென்றது. ஆனால், ஜவஹர் பழனியப்பன் மென்மையாக நடந்துகொண்டதை அடுத்து, வரதராஜனுக்கு ஜாமீன் கிடைத்து விட்டது.
இதன் அடுத்த கட்டமாக வரதராஜன் தனது பத்திரிக்கை பலம் முழுவதையும் கருணாநிதிக்கு எதிராக 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பயன்படுத்தினார்.
கருணாநிதிக்கு எதிராக குமுதம் வரிஞ்சு கட்டி எழுதியது. ஏற்கெனவே தி.மு.க. மீது காட்டமாக இருந்த மற்ற பத்திரிகைகளும் எதிர்த்து எழுத, சுனாமி போல திரண்ட எதிர்ப்பு அலையில் கருணாநிதியின் ஆட்சி சுருண்டுபோனது.
இதற்கிடையே, 2010-ல் ஜவஹர் பழனியப்பன் சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் “வரதராஜன் 25 கோடி ரூபாய் பணத்தை குமுதம் நிர்வாகத்தில் இருந்து சுருட்டிவிட்டார்” என்று கூறியிருந்தார். இதன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்துக்குப் போனது.
இந்த மனுவை சென்னை பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் நீதிபதி எம்.மோகன் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, “நிறுவனத்தின் பணம் ரூ. 25 கோடியை தவறாக பயன்படுத்தியதாகவும், ஏமாற்றியதாகவும் வரதராஜனுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
இந்தப் பிரச்னையில் கருணாநிதியை நாடியதால் கடுப்பான முதல்வர் ஜெயலலிதா ஜவஹர் பழனியப்பனுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது எனக் கூறிவிட்டார். அதுமட்டுமின்றி, வரதராஜனுக்கு போலீஸ் தரப்பில் தேவையான உதவிகளைச் செய்யுமாறு வாய்மொழியாக ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதற்குப் பிரதிபலனாக வரதராஜனின் குமுதம் 2014 பொதுத் தேர்தல் வரை விசுவாசம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், சென்னை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டின் தீர்ப்பை எதிர்த்து ஜவஹர் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி தனது உத்தரவில், “வரதராஜன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா என்பதையும், எந்த அளவுக்கு முறைகேடு நடந்தது என்பதையும் கண்டுபிடிக்க மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்.
புலனாய்வு அமைப்பு, புகாரை முறையாகப் பரிசீலனை செய்யாமல் வரதராஜன் அளித்த பதிலின் அடிப்படையில், இயந்திரத்தனமாக புகாரை முடித்துள்ளனர்.
மேலும், வரதராஜன் அளித்த பதில் சரியானதுதானா என்பதைக் கண்டறிய, புகார் கொடுத்த ஜவஹர் பழனியப்பனுக்கு சந்தர்ப்பம் வழங்காமலேயே வழக்கு முடிக்கப்பட்டுள்ளது.
மனுதாரரின் (ஜவஹர் பழனியப்பன்) மனுவில் உள்ள அனைத்து அம்சங்களையும் மாஜிஸ்திரேட் பரிசீலிக்கத் தவறிவிட்டார். எனவே, மாஜிஸ்திரேட்டின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை புதிய குழு ஒன்றை நியமித்து விசாரிக்க மத்தியக் குற்றப்பிரிவுக்கு அனுப்ப வேண்டும். ஆறு மாதங்களுக்குள், இறுதி அறிக்கையை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதியின் இந்த உத்தரவால் வரதராஜன் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.
அதேநேரத்தில் ஜவஹர் பழனியப்பன் தரப்போ தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறது.
இதனால், குமுதம் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கப் போகிறது.
viruvirupu.com/

கருத்துகள் இல்லை: