பணம் கொடுக்கத் தயாராக இருந்தால் கட்சிகள் விருப்பத்துக்கு ஏற்ப கணிப்பு
முடிவுகளை மாற்றி வெளியிட கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் தயாராக இருப்பதாக
இந்தி மொழி செய்தித் தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தி இருக்கிறது.
‘நியூஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற இந்தி செய்தி அலைவரிசை இந்த கருத்துக் கணிப்பு
நிறுவனங்களின் செயல்பாடு பற்றி அறிய ஒரு நிருபரை அனுப்பி ரகசிய
நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தது. இதில் கிடைத்த சில தகவல்களை நியூஸ்
எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சியின் ஆசிரியர் வினோத் காப்ரி முதலில்
செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
வாக்காளர்கள் விழிப்புணர்வுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என
தெரிவித்த அவர் தேர்தல் ஆணையத்திடம் இதுபற்றிய விவரங்கள்
பகிர்ந்துகொள்ளப்படும் என்றார்
கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விவரங்களை தமது தொலைக்காட்சியிலும் நியூஸ் எக்ஸ்பிரஸ் ஒளிபரப்பியது.
இதனிடையே. இந்த ரகசிய நடவடிக்கையி்ல் கிடைத்த விவரங்களின் நம்பகத்தன்மையை
‘இந்து’ பத்திரிகையால் சுயேச்சையான வழியில் உறுதிப்படுத்த முடியவில்லை.
ரகசிய திட்டத்துடன் இந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் நிருபர்கள் தங்களை
அடையாளம் காட்டிக் கொள்ளாமல் 13 கருத்துக் கணிப்பு நிறுவனங்களை
அணுகியுள்ளனர்.
ஏசி நீல்சன் நிறுவனமும் தி சென்டர் பார் தி ஸ்டடி ஆப் டெவலபிங் சொசைட்டிஸ் அமைப்பும் இந்த நிருபர்களின் திட்டத்துக்கு உட்படவில்லை.
பிற 11 நிறுவனங்கள் கட்சிகளின் விருப்பத் துக்கு ஏற்ப கணிப்பு முடிவுகளை
மாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றன என்று இந்தி டிவி செய்தி
சேனல் தெரிவித்திருக்கிறது.
சி-வோட்டர் என்ற நிறுவனம் கணிப்பு முடிவின் ஏற்கத்தக்க பிழை அளவு விகிதத்தை
3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தி கட்சிக்கு கூடுதல் இடம்
கிடைக்கும் வகையில் மாற்றி அமைக்கத் தயார் என தெரிவித்திருக்கிறது.,
சி வோட்டர் அமைப்பின் முதன்மை ஆசிரியரும் நிர்வாக இயக்குநருமான யஷ்வந்த் சின்ஹா இதை மறுத்துள்ளார்.
தமது சார்பில் சி வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்புகளை ரத்து
செய்வதாக இந்தியா டுடே குழுமம் அறிவித்துள்ளது. விளக்கம் கேட்டு அந்த
நிறுவனத்துக்கு நோ்ட்டீஸ் அனுப்பி இருப்பாகவும் தெரிவித்துள்ளது.
சி வோட்டர் நிறுவனத்திடம் விளக்கம் கோரப்படும் என டைம்ஸ் நவ் நிறுவனத்தின்
தலைமை ஆசிரியர் ஏ.கோஸ்வாமியும் தெரிவித்துள்ளார். தமக்காக கருத்துக்கணிப்பு
நடத்திட சி வோட்டர் நிறுவனத்தை டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் ஈடுபடுத்தி
வருகிறது.
இந்தி டி.வி. சேனலின் ரகசிய நடவடிக்கையில் சிக்கியுள்ள இன்னொரு நிறுவனம் தர
ஆய்வு மற்றும் சேவைகள் அமைப்பாகும். இந்த நிறுவனத்தை சேர்ந்தவர் இந்தி
டிவி சேனல் நிருபரிடம் பேசும்போது உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 200
தொகுதி கிடைக்கும் என ஒரு ஏஜென்சி பெயரிலும், சமாஜ்வாதி கட்சிக்கு 200
தொகுதிகள் கிடைக்கும் என வேறொரு ஏஜென்சி பெயரிலும் கருத்து கணிப்பை தயாராக
வைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
கருத்துக்கணிப்பை வசதிக்கேற்ப மாற்றி அமைக்க தயார் என இப்ஸாஸ் என்கிற
நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது பற்றி விளக்கம் தர அவகாசம் கேட்டுள்ள
அந்த நிறுவனத்தை அதன் பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை.
கருத்து கணிப்பு விவரங்களை மாற்றத் தயார் என்று மிட்ஸ்ட்ரீம் மார்க்கெடிங்
ஆராய்ச்சி இயக்குநர் சஞ்சய் பாண்டேவும் தெரிவித்திருப்பதாக இந்தி
தொலைக்காட்சி சேனல் சுட்டிக் காட்டி இருக்கிறது. அப்படி எதுவும் நான்
சொல்லவில்லை என மறுத்துள்ளார் பாண்டே. tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக