செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாள். அ.தி.மு.க. அடிமைகளும் உடகங்களும் சாமியாடினார்கள்

நேற்று 24.02.2014, ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாள். இதற்கு அ.தி.மு.க. அடிமைகளும், ஜெயா டி.வி.யும் பாதம் பணிந்து தவழ்ந்து வணங்கியதில் வியப்பில்லை.  ஊடகங்கள் ஒவ்வொன்றும் ஜெயா பிறந்த நாளை பயபக்தியுடன் கொண்டாடியதும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் அதைக்கூட ‘நாசூ’க்காக இல்லாமல் பட்டவர்த்தனமாக சாமியாடியதைத்தான் சகிக்க முடியவில்லை. ஏனெனில் இந்த ஜால்ரா இசையின் சொந்தக்காரர்களைத்தான் நடுநிலைமை ஊடகங்களாக அப்பாவிகள் பலர் கருதுகின்றனர்.
ஊடகங்கள் ஜால்ரா
ஜால்ரா இசையின் சொந்தக்காரர்களைத்தான் நடுநிலைமை ஊடகங்களாக அப்பாவிகள் பலர் கருதுகின்றனர்.
ராஜ் டி.வி. ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது. தங்கத் தலைவி, தங்கத் தாரகை, தமிழகத்தை முன்னேற்ற வந்த விடிவெள்ளி, நாளைய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று எல்லாம் வர்ணித்து இரண்டு, மூன்று நிமிடத்திற்கு ஒரு படக்காட்சியை ஒளிபரப்பிக் கொண்டே இருந்தார்கள். தமிழகத்தின் மக்கள் போராட்ட வரலாறு குறித்த காட்சிகளை ஆவணப்படுத்தவில்லை என்றாலும் ‘அம்மா’வின் சர்வ வியாபக காட்சிகளை ஊடகங்கள் பயபக்தியுடன் சேமித்து வருகின்றன. ஆனாலும் திரும்ப திரும்ப காக்கா கத்துவதையும் பிடிப்பதையும் காட்டுவதற்கு முதலில் அந்த ‘எடிட்டருக்கு’ முற்றும் துறந்த மனநிலை வேண்டும். உடகங்களும் சாமியாடினார்கள்

தமிழ் இதழியலின் அறம் சார்ந்த ஏரியாவை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் தி இந்து தமிழ் பத்திரிகை நாலு பக்கங்களில் ஜெயலலிதாவை புகழ்வதற்கு என்றே தனி இணைப்பு வெளியிட்டது. இவர்கள் பத்திரிகை ஆரம்பித்த முதல் நாளன்றே இத்தகைய இணைப்பு போட்டு தங்களது அடிமைப் புத்தியை அம்மணமாக காட்டியவர்கள். நேற்றைய இதழில் அம்மா உணவகம் திறந்து சோறு போட்டார், சப்பாத்தி சுட்டார் என்று ஒரே ஜால்ரா ராகம். அதற்கு பிச்சையாக இல்லை எலும்புத் துண்டாக ஐந்து பக்க விளம்பரம் கிடைத்திருக்கிறது இந்துவுக்கு.
அன்றைய நாளில்தான் ஜெயலலிதா நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அ.தி.மு.க.வின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அந்த வெளியீட்டு விழாவில் ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப் பயணத் திட்டத்தை ஜெயலலிதா வெளியிட, பெற்றுக் கொண்டவர் தினத்தந்தி நிருபர். ‘‘தினத்தந்தி நிருபர் இதைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று விரும்பி அழைத்து அவரிடம் அதை அளித்துள்ளார். இதை அடுத்த நாள் தினத்தந்தி பெருமகிழ்ச்சியுடன் தன் பத்திரிகையிலேயே வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட கடவுளை பார்த்த பக்தனது மகிழ்ச்சிதான்.
தினத்தந்தி
வேட்பாளர் பட்டியல் வெளியிடும் விழா : ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப் பயணத் திட்டத்தை ஜெயலலிதா வெளியிட, பெற்றுக் கொண்டவர் தினத்தந்தி நிருபர்.
தந்தியின் ஆளுங்கட்சி ஜால்ரா சத்தம் எப்போதும் பிரசித்திப் பெற்றதுதான். எப்போதும் அதை மூடி மறைக்காமல் வீரமாக சொம்பு தூக்குவதில் தினத்தந்தியை அடித்துக்கொள்ள முடியாது. அம்மணம்தான் எங்களது உடை, அடிமைத்தனம்தான் எங்களது நடை என்று தினத்தந்தி தனது இலட்சியத்தை எப்போதும் மறைப்பதில்லை.
இப்போதும் அப்படியே. பத்திரிகை நடத்திக்கொண்டு இப்படி ஒரு கட்சிக்கு சார்பாக நடந்துகொள்கிறோமே என்ற கூச்சவுணர்வு எதுவும் அவர்களுக்கு இல்லை. இதைக் கண்டிக்கும் துப்பு கருணாநிதிக்கும் இல்லை. அவர் ஆட்சி வந்தால் ஜால்ரா சத்தம் அந்தப் பக்கம் இடம் மாறிவிடும். முகப்புப் பக்கத்தில் ‘தினத்தந்தியின் ஒவ்வொரு அங்குலமும் தங்கநகை போல் அலங்கரிக்கப்படுகிறது‘ என்ற வாசகம் அவ்வப்போது இடம்பெறும். அதை, ‘தினத்தந்தியின் ஒவ்வொரு அங்குலமும் ஜங்ஜக் ஜால்ராவால் அலங்கரிக்கப்படுகிறது‘ என்று மாற்றலாம்.
ஓர் ஊடகத்திற்கு உரிய குறைந்தப்பட்ச சார்பின்மையோ அல்லது அவ்வாறு நடிக்க வேண்டிய அவசியமோ இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. மிகவும் பச்சையாக ஜெயலலிதாவுக்கு சாமரம் வீசுகின்றனர். காவடி தூக்குகின்றனர். ஜெயலலிதாவை பாராட்டுவதற்குக் கிடைக்கும் சிறு வாய்ப்பையும் தவறவிடாத இவர்கள், அவரது மக்கள் விரோத நடவடிக்கைகளின்போது அருவருப்பான மௌனத்தை கடைபிடிக்கின்றனர். அல்லது அமுங்கிய குரலில், ‘அம்மா, நீங்கள் போய் இப்படி செய்யலாமா?’ என்று அடிமையின் உடல்மொழியில் நெளிந்து, குழைகிறார்கள். அதையும் கூட தினமலர் போன்ற அவாள் பத்திரிகைள்தான் கொஞ்சம் உரிமையுடன் செய்கின்றன. துக்ளக் சோவெல்லாம் தினத்தந்தியை விஞ்சி விட்டார்.
இப்போது ஜெயலலிதா 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வின் சார்பில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். கூட்டணியில் காரத் கட்சியும் (சி.பி.எம்), தாபா கட்சியும் (சி.பி.ஐ.) இருக்கிறார்களே.. அவர்களுக்கு என்னக் கணக்கு என்றால், அவர்களுக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டவுடன் அந்தத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் ஒதுங்கிக்கொள்வார் என்கிறார். எத்தனை மேட்டிமைத்தனமான பேச்சு!
ஜெயா - நல்லகண்ணு
இந்தியாவின் பிரதமராக ஜெயலலிதா வரவேண்டும் என்று ‘நேர்மை’ மற்றும் ‘எளிமை’ புகழ் நல்லக்கண்ணுவே கூறிவிட்டார்.
இதுதான் கூட்டணி இலட்சணமா என்று ஓட்டுக் கட்சிகளின் ஜனநாயக தரத்திலாவது இதை கேள்விகேட்க எந்தப் பத்திரிகைக்கும் துப்பில்லை. சாதாரண நேரத்திலேயே அறிவித்த வேட்பாளரை எப்போது தூக்குவார் என்று ஜெயலலிதாவுக்கே தெரியாது. அறிவிக்கப்பட்டவர்களின் கிரைம் ரிக்கார்டை அறிவிக்கப்படாத போட்டி கும்பல்கள் வெளியிடும் போது எப்படியும் இரண்டு தலைகள் உருளும் என்பதே அ.தி.மு.க அடிமைகள் மற்றும் ஊடக அடிமைகளின் எதிர்பார்ப்பு. இப்படி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கிரிமினல் என்று தெரியாமலே அறிவிக்கிறீர்களே, இதுதான் கட்சி நடத்தும் இலட்சணமா என்று எந்த பத்திரிகையாளனும் கேட்க மாட்டான்.
போலி கம்யூனிஸ்டுகளுக்கும், ‘அம்மா, நாங்களும் உங்க வண்டிலதான் தொங்கிக்கிட்டிருக்கோம். ரொம்ப நேரமா தொங்குறதால கை வலிக்குது. பார்த்து கொஞ்சம் பைசல் பண்ணுங்க’ என்று கேட்பதற்கான தைரியம் இல்லை. ஏற்கெனவே ஆளுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்துவிட்டதால் இப்போது எப்படியும் தலா ஒரு தொகுதி கொடுத்தாலே பெரிய விஷயம். பிரதமர் கனவில் வேறு இருப்பதால் ‘அந்த ரெண்டு பேரும் இரட்டை இலையிலேயே போட்டியிடுங்கள்‘ என்று கடைசி நேரத்தில் குண்டு போட்டால் அதை தாங்கும் நெஞ்சுரம் தா.பாவுக்கும், ஜி.ஆருக்கும் உண்டு. இன்றுதான் இந்தியாவின் பிரதமராக ஜெயலலிதா வரவேண்டும் என்று ‘நேர்மை’ மற்றும் ‘எளிமை’ புகழ் நல்லக்கண்ணுவே கூறிவிட்டார்.
இனி இரண்டு போலிக் கம்யூனிஸ்டு கட்சிகளும் வேப்பிலை அடித்து சாமியாடதது மட்டும்தான் பாக்கி.
ஜெயா, வேல்முருகன்
வன்னியப் போராளி பண்ருட்டி வேல்முருகன் : ‘கொஞ்ச நாளைக்கு முன்பு நாம் வேறுமாதிரி பேசினோமே’
இப்படியான நேரத்தில் ஜெயா டி.வி.யைப் பார்த்துத் தொலைத்தேன். ஜெயலலிதாவின் பல்வேறு ‘சாதனை’ முகங்களைப் பற்றி வீணை காயத்ரி, செ.கு.தமிழரசன், குமாரி சச்சு, பண்ருட்டி வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சியாம். விவாதம் என்றால் ஒருத்தராவது மாற்றுக் கருத்துடன் பேச வேண்டும். அவர்களுக்கு இடையே இருந்தது “யார் கூடுதலாக புரட்சித் தலைவியைப் புகழ்வது” என்ற போட்டி மட்டும்தான். ஒரு பக்கம் தலித் போராளி செ.கு.தமிழரசன், ‘‘அம்மா அனைத்து மதங்களையும், அனைத்து சாதிகளையும் சமமாகப் பாவிப்பவர். அவர் போல் இப்பூமியில் யாருண்டு?’’ என்று பொளந்து கட்டினார். மறுபக்கம் வன்னியப் போராளி பண்ருட்டி வேல்முருகனோ, ‘ஏழு பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டதன் மூலம் அம்மாவின் தாயுள்ளம் உலகத்திற்கே வெளிச்சமாகியிருக்கிறது. அவரை எதிர்த்தவர்களும் இன்று பாராட்டுகின்றனர்’ என்று அள்ளிவிட்டார். ‘கொஞ்ச நாளைக்கு முன்பு நாம் வேறுமாதிரி பேசினோமே’ என்று அவருக்கே ஞாபகம் வந்துவிட்டது போல… ‘‘அம்மாவை எதிர்த்தவர்களும் இன்று ஆதரிக்கின்றனர் என்பதற்கு நானே சாட்சி. நாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரிக்கிறோம்’’ என்றார். இனி சூடு, சொரணை, வெட்கம், மானம் அனைத்திற்கும் நாம் வேறு தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்தால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும்.
இதேக் கோமாளிக் கூத்துதான் கடந்த கருணாநிதி ஆட்சியிலும் நடந்தது. தொட்டதற்கு எல்லாம் பாராட்டு விழா நடத்தி மக்கள் பணத்தை சூறையாடினார்கள். கோடிகளில் சம்பளம் பெறும் பிரபல சினிமா நட்சத்திரங்களெல்லாம் ஆபாச ஆடையுடன் ரிகார்டு டான்ஸ் நடத்தி கருணாநிதியை மனம் குளிர பாராட்டினார்கள். வள்ளுவர் கோட்டத்தின் தூண்கள் கருணாநிதியின் புகழ்பாடும் கவிதைகளைக் கேட்டுக் கதறித் துடித்தன. கடைசியில் அந்தப் பாராட்டு விழாக்களே மக்களின் மனதில் நீங்கா வெறுப்பை விதைத்தன. கமல்ஹாசன் முதல் அஜித் முதல் சகலரையும் ஆள் வைத்து அழைத்துப் பாராட்டச் சொன்னார் கருணாநிதி.
ஆனால் ஜெயலலிதாவின் கதை வேறு. ஏழாம் அறிவு படத்தில் வில்லன் டாங் லீ, நோக்கு வர்மத்தால் கண்களை நோக்கியதும் மக்கள் ஓடிச் சென்று தாங்களாகவே அடிப்பார்கள், விழுவார்கள், சண்டையிடுவார்கள். அதுபோல, ஜெயலலிதா ஒரு நோக்கி நோக்கினாலே போதும் தமிழ் இந்து, தினத்தந்தி, விகடன், குமுதம் என்று சகலரும் ஜிங்ஜக் தட்டத் துவங்கி விடுவார்கள்.
அந்த வகையில் கருணாநிதியை விட ஜெயலலிதாதான் ஊடகங்களை பெண்டு  ஒடிப்பதில் சாதனையாளர். என்ன இருந்தாலும் சர்ச் பார்க் கான்வென்டில் படித்தவரல்லவா!
-    வளவன்

கருத்துகள் இல்லை: