நான் விரைவில் முதலமைச்சர் ஆகப் போகிறேன் என்று முடிவு
செய்யப்பட்டுள்ளது. நான் வந்த பிறகு, உங்கள் வேலையை பார்த்துக்
கொள்கிறேன். நிம்மதியாக இருங்கள்” என்று மோடி தன்னிடம் சொன்னதாக அசீமானந்தா
கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் –
டாங் மாவட்டம் குஜராத்தின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய மாவட்டம். மாநிலத்தின் தென்கோடியில் அமைந்த அந்த மாவட்டம் கிழக்கிலும், மேற்கிலும் மகாராஷ்டிர மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது. அதன் சுமார் 2 லட்சம் மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்; 93 சதவீதம் பேர் பழங்குடி மக்கள். இந்தியாவின் மற்ற பழங்குடி பகுதிகளைப் போலவே இயற்கை வளங்களுக்காகவும், சித்தாந்தந்தங்களுக்காகவும் தனது அளவுக்கு மிஞ்சிய போர்களையும், போராட்டங்களையும் டாங்ஸ் என்று அழைக்கப்படும் டாங் மாவட்டம் சந்தித்துள்ளது.
டாங் மாவட்டம் குஜராத்தின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய மாவட்டம். மாநிலத்தின் தென்கோடியில் அமைந்த அந்த மாவட்டம் கிழக்கிலும், மேற்கிலும் மகாராஷ்டிர மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது. அதன் சுமார் 2 லட்சம் மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்; 93 சதவீதம் பேர் பழங்குடி மக்கள். இந்தியாவின் மற்ற பழங்குடி பகுதிகளைப் போலவே இயற்கை வளங்களுக்காகவும், சித்தாந்தந்தங்களுக்காகவும் தனது அளவுக்கு மிஞ்சிய போர்களையும், போராட்டங்களையும் டாங்ஸ் என்று அழைக்கப்படும் டாங் மாவட்டம் சந்தித்துள்ளது.
1842-ல் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கவாதிகள் அந்தப் பகுதியின் பழங்குடி மன்னர்களை தோற்கடித்து டாங்ஸின் தேக்கு மர காட்டு வளங்களை கொள்ளை அடிக்கும் உரிமைகளை பெற்றனர். இன்றும் அம்மாவட்டத்தின் பாதிக்கும் மேற்பட்ட பரப்பு காடுகளால் மூடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அந்தப் பகுதியில் கிறித்துவ மதபோதகர்களைத் தவிர எல்லா சமூக சேவகர்களையும், அரசியல் செயல்பாட்டாளர்களையும் தடை செய்தனர். அத்தகைய மத, சமூக நடவடிக்கைகள் பழங்குடி மக்களுக்கு நிலத்தின் மீதான உரிமை உணர்வை வளர்த்து விடும் என்று அவர்கள் அஞ்சினர். 1905-ம் ஆண்டு மாவட்டத் தலைநகரான ஆஹ்வாவில் முதல் மிஷன் பள்ளி உருவாக்கப்பட்டது. அப்போது முதலே பல பிரிவுகளைச் சேர்ந்த கிறித்துவ மத போதகர்கள் இந்தப் பகுதியில் செயல்பட்டு வந்தனர். கிறித்துவர்கள் டாங்ஸை “பஸ்சிம் கா நாகாலாந்து” – மேற்கின் நாகாலாந்து என்று அழைத்து வந்தனர். “வடகிழக்கைப் போன்ற பெரிய அச்சுறுத்தல் இங்கும் இருந்தது” என்கிறார் அசீமானந்தா.
அசீமானந்தா வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் சார்பாக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது 1996-ம் ஆண்டு முதன் முறையாக டாங்ஸ் போனார். இந்துத்துவா அமைப்பின் தலைவர்கள், அவரது வெற்றிகரமான மத மாற்ற செயல்பாடுகளை நாடு முழுவதிலும் உள்ள பழங்குடி பிரதேசங்களுக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஷ்ரத்தா ஜாக்ரன் விபாக் (மத நம்பிக்கையை எழுப்பும் பிரிவு) ஒன்றை ஏற்படுத்தி அவரை அதற்கு தலைவராக நியமித்தார்கள். ஆனால், தான் ஒரே இடத்தில் தங்கி வேலை செய்தால் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அசீமானந்தா கருதினார். அந்த வகையில் டாங்ஸ் அவரை பெரிதும் ஈர்த்தது. “டாங்சுக்கு எனது தனிச்சிறப்பான பணி தேவைப்பட்டது. பழங்குடி மக்களிடையே தங்கி வேலை செய்வதுதான் எனக்கு விருப்பமானது. ஒருவர் தனக்கு மனத் திருப்தி கொடுக்கும் வேலையைத்தான் எப்போதும் செய்ய வேண்டும். வடகிழக்கை போல் இல்லாமல், டாங்சை கிறித்துவர்களிடமிருந்து மீட்பதற்கு இன்னும் வாய்ப்பு இருந்தது” என்கிறார் அவர்.
இருந்தாலும் முதன்மையாகவும், முக்கியமாகவும், அசீமானந்தா சங்க பரிவாரத்துக்கு விசுவாசமானவர். குஜராத்தின் காடுகளில் தங்கிக் கொண்டு தேசிய பொறுப்புகளை அவரால் கவனித்துக் கொள்ள முடியுமா என்று சங்க பரிவார தலைவர்கள் கவலைப்பட்டனர். எனவே, அசீமானந்தாவால் தான் டாங்சில் தங்கி செயல்படுவதற்கான அனுமதியை 1998 வரை பெற முடியவில்லை. ஆனால், அதற்கான அனுமதி பெற்று காட்டினுள் குடியேறிய ஒரு ஆண்டுக்குள், தலைவர்களின் கவலையை பொய்ப்பிக்கும் விதமாக தனது மதபோதக அணுகுமுறையையும், வன்முறை பிரச்சாரத்தையும் இணைத்து நாடு முழுவதும் உள்ள சங்க பரிவார தொண்டர்களை அணி திரட்டுவதை சாதித்துக் காட்டினார். வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் அமைப்புச் செயலாளரும் கேரளா ஆர்.எஸ்.எஸ் தலைவருமான ராவ், அசீமானந்தாவின் பணி “மொத்த தேசத்துக்கும் ஒரு எடுத்துக்காட்டு” என்று பாரட்டியதை அசீமானந்தா நினைவு கூர்கிறார்.
1998-ல் அசீமானந்தா வாகாய் என்ற இடத்தில் வனவாசி கல்யாண் ஆசிரமத்தை ஏற்படுத்தி தங்க ஆரம்பித்த போது, டாங்சில் உள்ள பழங்குடி சமூகங்களை ஏற்கனவே மத வேறுபாடுகள் பிளவுபடுத்த ஆரம்பித்திருந்தன. 1970-களுக்கு முன்பு வரை அந்தப் பகுதியில் கிறித்துவ மத போதகர்களின் நடவடிக்கை வரம்புக்குட்பட்டதாகவே இருந்தது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களின்படி அந்தப் பகுதியின் கிறித்துவ மக்கள் தொகை 1991 முதல் ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற வீதத்தில் அதிகரித்து வந்தது. பெற்றோர்கள் இறந்த பிறகு எந்த மதத்தின் அடிப்படையில் இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்று அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள். அசீமானந்தா அங்கு வருவதற்கு முந்தைய ஆண்டில் அம்மாவட்டத்தில் கிறித்துவர்கள் மீது 20 தாக்குதல்கள் பதிவாகியிருந்தன. 1998 முழுவதும் அவ்வப்போது தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தன.
ஒவ்வொரு ஆண்டும் இரண்டு டஜன் பழங்குடி சிறுவர்களை தங்க வைத்து இலவச உணவும், தங்குமிடமும் வழங்கி உள்ளூர் அரசுப் பள்ளியில் படிக்க வனவாசி கல்யாண் ஆசிரமம் உதவி செய்து வந்தது. அசீமானந்தா தலைமையில் பையன்கள் ஏகதா மந்திரத்தை உச்சரிப்பதிலிருந்து ஆசிரமத்தில் ஒரு நாளைய நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. ஏகதா மந்திரம் என்பது பாரத மாதா மற்றும் காந்தி முதல் கோல்வால்கர் வரையிலான முக்கியமான இந்தியர்களின் புகழ் பாடும் பாடல்; ஷாகாக்களின் ஒவ்வொரு அமர்வையும் ஆரம்பிப்பதற்கு முன் ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவகர்கள் அதை பாடுவது வழக்கம். அந்த ஆசிரமத்தில் அசீமானந்தா சந்தித்த மாணவர்களில் ஒருவர் பூல்சந்த் பப்லூ. அசீமானந்தாவின் வழிகாட்டியாகவும், வலது கையாகவும் ஆகி விட்ட பப்லூதான் டாங்ஸ் பகுதியில் தனது வெற்றிகளுக்கு பெருமளவு காரணம் என்கிறார் அசீமானந்தா.
சென்ற ஆண்டு நான் வாகாய் ஆசிரமத்திற்கு போன போது பப்லூ தனது கிராமத்திலிருந்து வந்து என்னை சந்தித்தார். கொஞ்சம் குண்டான உடல்வாகு, உருண்டை முகம், முன்பின் தெரியாத ஒரு ஊரில் நம்பிக்கையாக வழி கேட்கலாம் என்பது போன்ற முகத் தோற்றம். அவர் நம் மனதை கலக்கும் நிகழ்வுகளை சொல்லும் போது கூட நட்புணர்வு குன்றாமலே அவற்றை கேட்க முடிகிறது.
அசீமானந்தா, அந்தமான் தீவுகளில் பின்பற்றிய அதே உத்திகளை இங்கும் கடைப்பிடித்தார். தன்னை வரவேற்கக் கூடிய கிராமங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு அவர் பப்லூவை நம்பியிருந்தார். அதன் மூலம் புதிய தொண்டர்களை சேர்த்துக் கொண்டு அந்த வனப்பகுதியில் தனது செல்வாக்கை பரப்பத் திட்டமிட்டார். அவரும் அவரது தொண்டர்களும் எளிதில் போக முடியாத பழங்குடி கிராமங்களுக்கு மலையேறி சென்று, அங்கு ஒரு வாரம் வரை தங்கினார்கள். பழங்குடி மக்களுடன் உணவு உண்டு அவர்களது குடிசைகளில் தூங்கினார்கள். அசீமானந்தா இந்து மதப் பிரச்சாரம் செய்தார்; சாக்லேட்டுகளையும், அனுமான் லாக்கெட்டுகளையும், அனுமான் சாலீசாவையும் குழந்தைகளிடம் வினியோகித்தார். இந்து மத பஜனைகள் நடத்தி, கிறித்துவத்திற்கு ஏன் மாறக் கூடாது என்று கிராம மக்களிடம் எடுத்துரைத்தார். ஒவ்வொரு கிராமத்திலும், இந்துக்களாக மதமாற்றம் செய்ய தகுதி படைத்தவர்களின் பட்டியலை அசீமானந்தாவும் அவரது உதவியாளர்களும் தயாரிப்பார்கள். அந்த பட்டியல்களை அசீமானந்தா கவனமாக கண்காணித்து வந்தார். அவர்கள் அடுத்த குடியிருப்புக்கு புறப்படும் போது, பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த பழங்குடி மக்களின் குடிசைகளின் உச்சியில் சங்க பரிவாரத்தின் கொடி பறப்பதை அவரது உதவியாளர்கள் உறுதி செய்திருப்பார்கள்.
அசீமானந்தா இத்தகைய ஒப்பீட்டளவில் மென்மையான அணுகுமுறையுடன், பயமுறுத்தல்களையும் சேர்த்து பயன்படுத்தினார். “வங்காள எல்லைப்புற கிராமங்களில் நடக்கும் உண்மை சம்பவங்களை அவர் விவரிப்பார். எல்லைக்கு அப்பாலிருந்து வந்து குவியும் முஸ்லீம்களால் ஒட்டுமொத்த இந்து சமூகமும் அந்த இடத்தை விட்டு ஓட வேண்டி வந்தது” என்று அவர் கூறியதை பப்லூ நினைவு கூர்கிறார். அசீமானந்தா கிறித்துவர்களுக்கு எதிரான கடும் கண்டனங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு மாவட்டம் முழுவதும் வினியோகிக்க ஏற்பாடு செய்தார். ஜூன் 1998-ல் நடக்கவிருந்த ஒரு பேரணிக்கான துண்டறிக்கையின் தலைப்பில், “இந்துக்களே வாருங்கள், திருடர்கள் ஜாக்கிரதை” என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன் கீழ், “டாங் மாவட்டத்தின் மிக முக்கியமான பிரச்சனை கிறித்துவ போதகர்களால் நடத்தப்படும் அமைப்புகள்தான். சேவை என்ற முகமூடியை அணிந்து கொண்டு அந்த சாத்தான்கள் பழங்குடி மக்களை சுரண்டுகிறார்கள். பொய்களும், ஏமாற்றல்களும்தான் அவர்களது மதம்” என்று எழுதப்பட்டிருந்தது. இத்தகைய வெறுப்பு பிரச்சாரங்களை விரைவில் வன்முறை செயல்களாக மாற்றினார் அசீமானந்தா.
1998-ம் ஆண்டு கிருஸ்துமஸ் அன்று மாலை விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆஹ்வாவில் உள்ள தீப் தர்ஷன் பள்ளியை தாக்கினார்கள். 100-க்கும் அதிகமானவர்கள் அந்த சூறையாடலில் பங்கேற்றதாக அந்த பள்ளியை நடத்தும் கார்மலைட் பெண் துறவிகளில் ஒருவரான சிஸ்டர் லில்லி சொல்கிறார். அவர்கள் கல்லெறிந்து ஜன்னல்களை உடைத்து, பழங்குடி சிறுவர்களுக்கான தங்கும் விடுதியின் கூரைகளையும் நொறுக்கினர். “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அது என் கண் முன்னால் நிற்கிறது. அன்று நான் மிகவும் நடுங்கிப் போயிருந்தேன்” என்கிறார் சிஸ்டர் லில்லி.
30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுபீரில் இன்னொரு பள்ளி தாக்கப்பட்டது. அங்கிருந்த தானியக் களஞ்சியம் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. காத்வி கிராமத்தில் சுமார் 200 பேரைக் கொண்ட கும்பல் அந்த ஊர் கிறித்துவ தேவாலயத்தை தாக்கி நொறுக்கி, தீ வைத்தது. பின்னர் அவர்கள் பக்கத்து கிராமத்துக்குப் போய் அங்கிருந்த சர்ச்சுக்கும் தீ வைத்தனர். அதற்கடுத்த நாள் வாகி கிராமத்தின் தேவாலயம் தீயிடப்பட்டது; அந்தத் தாக்குதலில் ஒரு வனத்துறை ஜீப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்த நாள் டாங்ஸ் மாவட்ட கிராமங்களில் ஆறு தேவாலயங்கள் அழிக்கப்பட்டன. கிறித்துவ பழங்குடி மக்களின் வீடுகள் கல் எறிந்து தாக்கப்பட்டன, கிறித்துவ மற்றும் முஸ்லீம் கடைகள் தாக்கி அழிக்கப்பட்டன, கிறித்துவ பழங்குடி மக்கள் தாக்கப்பட்டார்கள்.
10 நாட்களுக்கு இந்த நாசவேலை தொடர்ந்து நடந்தது. 1998 டிசம்பர் மத்தியிலிருந்து அடுத்த ஆண்டு ஜனவரி வரை “40,000 கிறித்துவர்கள் இந்து மதத்துக்கு மாறினார்கள்” என்று பெருமையுடன் கூறுகிறார் அசீமானந்தா. “நாங்கள் 30 தேவாலயங்களை இடித்து கோயில்கள் கட்டினோம். ஒரே கலவரமாக இருந்தது” என்கிறார் அவர்.
இந்த வன்முறை கிருஸ்துமஸ் தினத்தன்று காலையில் நடத்தப்பட்ட மூன்று ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் ஊர்வலங்களிலிருந்து தொடங்கியது. அசீமானந்தாவால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த ஊர்வலங்களில் ஒன்று ஆஹ்வாவிலும், மற்ற இரண்டும் பக்கத்து மாவட்டத்திலும் நடைபெற்றன. ஆஹ்வாவில் நடந்த ஊர்வலத்தில் 3,500 சங்க உறுப்பினர்கள் திரிசூலங்களும் கம்புகளும் ஏந்தி பங்கேற்றதாக டாங்ஸ் பா.ஜ.க கிளையின் அப்போதைய செயலாளர் தசரத் பவார் தெரிவிக்கிறார். அசீமானந்தாவின் கிறித்துவ எதிர்ப்பு உரைகளிலிருந்து உருவாக்கப்பட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நகரத்தின் பிரதான சாலை காவி பேனர்களால் நிரப்பப்பட்டிருந்தது. உள்ளூர் கிறித்துவ பாதிரியார்கள் மாவட்ட ஆட்சியாளர் பரத் ஜோஷியிடம் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்துமாறு மனு கொடுத்திருந்தார்கள். அவரோ, பதற்றத்தை தணிப்பதற்கு பதிலாக ஆஹ்வாவில் நடந்த ஊர்வல மேடையில் தோன்றி இந்துத்துவா கும்பலுக்கு ஆசி வழங்கியிருக்கிறார்.
ஊர்வலங்களை தொடர்ந்து நடந்த கலவரங்கள் விரிவாக பரவுவதில் அசீமானந்தாவின் ஒருங்கிணைக்கும் திறன் பெரும் பங்கு வகித்தது. அசீமானந்தா வருவதற்கு முன் அந்த மாவட்டத்தில் ஒரு சில சங்கத் தொண்டர்கள் மட்டுமே இருந்தார்கள். அசீமானந்தா இந்துத்துவா நடவடிக்கைகளுக்கு புத்துயிர் ஊட்டி அதை ஆயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட சக்தியாக மாற்றினார். “அவரது வார்த்தைகள் உங்களில் உறங்கிக் கொண்டிருக்கும் இந்துத்துவாவை தட்டி எழுப்பும் சக்தி படைத்தவை.” என்கிறார் பவார்.
“மதமாற்றங்களை நிறுத்துவது எளிதான வேலை. அதற்கு மதத்தின் சக்தியை பயன்படுத்த வேண்டும். இந்துக்களை மத வெறியர்களாக மாற்ற வேண்டும். அதன்பிறகு, மற்றதையெல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்” என்கிறார் அசீமானந்தா.
ஹிந்து ஜாக்ரன் மஞ்சை உருவாக்கியதை தனது சாதனையாக அசீமானந்தா சொல்கிறார். முழுக்க முழுக்க பழங்குடியினருக்கான அமைப்பாக தெரியும்படி அது உருவாக்கப்பட்டது. வன்முறை தொடர்புடைய “சங்கத்தின் எல்லா வேலைகளையும் வனவாசி கல்யாண் ஆசிரமம் மூலமாக நாங்கள் செய்ய முடியாது. எனவே அதற்காக பழங்குடிகளை வைத்து ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் உருவாக்க வேண்டியிருந்தது. இந்த ஜானுபாய்க்கு (ஹிந்து ஜாக்ரன் மஞ்சின் பெயரளவு தலைவர்) எதுவும் தெரியாது. என்ன செயல்திட்டத்தை மேற்கொள்வது, துண்டறிக்கைகளில் என்ன அச்சிடுவது இது போன்ற அனைத்து முடிவுகளையும் நாங்கள்தான் எடுக்க வேண்டியிருந்தது. அவரை அமைப்பின் பழங்குடி இன முகமாக வைத்திருந்தோம். பழங்குடி மக்கள் சங்கத்தின் பணிகளை செய்து வந்தார்கள்.”
தூண்டுதல்களினாலோ, மிரட்டல்களினாலோ அசீமானந்தாவின் “தாய் மதம் திரும்பும்” நிகழ்வுகள் மேலும் மேலும் பிரபலமாகி வந்தன. மதமாற்றுவதற்கான தகுதி படைத்தவர்களாக அவர்கள் கருதுபவர்களின் 50 முதல் 100 வரையிலானவர்களின் பட்டியல் தயாரானதும், அசீமானந்தாவும் உதவியாளர்களும் அவர்களை திரட்டி லாரிகளிலும் ஜீப்புகளிலும் சூரத்தில் உள்ள உனாய் கோயிலுக்கு அழைத்துச் செல்வார்கள். கோயிலுக்கு அருகில் உள்ள வற்றாத வெந்நீர் ஊற்றில் மூழ்கிக் குளித்து, ஒரு திலக பூஜை நடத்தி அந்த பழங்குடியினர் இந்துக்கள் என்று அறிவிக்கப்பட்டனர். அனுமானின் புகைப்படத்தையும், அனுமான் சாலீசாவையும் கைகளில் பிடித்தபடி அவர்கள் வண்டிகளில் திணிக்கப்படுவார்கள். திரும்பும் வழியில் ஒலிபெருக்கிகளில் பஜனைகள் முழங்கப்பட்டு மொத்த நிகழ்வும் ஒரு காட்சியாக நடத்தப்பட்டது. வாகாய் ஆசிரமம் வரை தொடரும் கொண்டாட்டங்களின் நிறைவில் அசீமானந்தா அனைவருக்கும் விருந்து அளித்து ஆளுக்கு ஒரு ஹனுமான் லாக்கெட்டை கொடுப்பார்.
அசீமானந்தாவின் அக்கறை பழங்குடி மக்கள் இயேசு கிறிஸ்துவை கும்பிடுகிறார்களா அல்லது ராமனை கும்பிடுகிறார்களா என்பதைத் தாண்டி போனதில்லை. 1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் த வீக் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில், “ஏழ்மையை ஒழிப்பதிலோ வளர்ச்சிப் பணிகளிலோ எங்களுக்கு ஆர்வம் இல்லை. பழங்குடி மக்களை ஆன்மீக ரீதியாக மேம்படுத்துவதற்குத்தான் நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்றார் அசீமானந்தா. இந்த அணுகுமுறையுடன் அசீமானந்தாவின் மக்களோடு கலந்து பழகும் திறமையும் சேர்ந்து அவரது இயக்கத்துக்கு ஒரு வலுவான ஈர்ப்பை தோற்றுவித்திருந்தது. “சுவாமிஜியை விட அதிக கஷ்டமான வாழ்க்கையை வாழும் யாரையும் நான் பார்த்ததில்லை. அவர் ஆழமான அர்ப்பணிப்புடன் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் போய் தங்குவார். அங்கு தங்கி, அவர்களுடன் சாப்பிட்டு, அவர்களுடன் கலந்து பழகி அந்த மக்களை தனது சொந்த மக்களாக மாற்றிக் கொள்வார். இப்போது நமக்காக போராடவும் ஒருவர் இருக்கிறார் என்று மக்களுக்கு நம்பிக்கை வந்து விடும்” என்கிறார் பப்லூ.
டாங்ஸ் உலகின் மிகவும் அழகான பகுதிகளில் ஒன்று என்று அசீமானந்தா விவரிக்கிறார். 1990-களின் இறுதியில் அங்கு பணிபுரிந்த பல பத்திரிகையாளர்கள் அதனை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், ஜூன் 2013-ல் நான் அங்கு சென்ற போது காடு பழுப்பு நிறமாகவும் காய்ந்து போயும் காணப்பட்டது. அந்த பகுதியில் மலைச் சரிவுகளில் உருவாக்கப்பட்டிருந்த மைல் கணக்கிலான உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகள் என் கவனத்தை ஈர்த்தன. அவை அசீமானந்தாவின் மிக முக்கியமான அரசியல் புரவலர் நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்டவை.
1998-ன் தொடக்கத்தில் அசீமானந்தா டாங்சுக்கு குடியேறிய சமயத்தில் பா.ஜ.கவின் கேசுபாய் பட்டேல் குஜராத் முதலமைச்சராக பதவி ஏற்றிருந்தார். சுதந்திரம் அடைந்த பிறகு பெரும்பாலான காலத்துக்கு அம்மாநிலம் காங்கிரசின் கோட்டையாக இருந்தது. 1998 மார்ச் மாதம் மத்தியில் வாஜ்பாயி பிரதமர் ஆனதும் இந்தியா குறித்த அவர்களது தொலைநோக்கு பார்வை நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. ஆட்சி பொறுப்புக்காக அத்தகைய சித்தாந்தத்தில் சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்பது பின்னர்தான் தெரிய வந்தது.
டாங்சில் நடந்த கிறிஸ்துமஸ் கலவரங்கள் அவர்கள் விரும்பிய மாற்றத்தின் ஒரு சிறு பகுதியாக தோன்றியது. சோனியா காந்தி ஆஹ்வாவுக்கு பயணம் செய்து, “மனதை உருக்கும்” வன்முறையை கண்டனம் செய்தது அசீமானந்தாவின் வெற்றியின் ஆரம்ப அறிகுறியாக இருந்தது. மற்ற அரசியல்வாதிகளும், பிரபலங்களும் அதில் இணைந்து கொண்டனர். இது தொடர்பான ஊடக செய்திகள் ஆர்.எஸ்.எஸ்சில் அசீமானந்தாவின் மதிப்பை உயர்த்தின. வெகு விரைவில் கோல்வால்கரின் பெயரில் வழங்கப்படும் வருடாந்திர ஸ்ரீ குருஜி விருது வழங்கி ஆர்.எஸ்.எஸ் அவரை சிறப்பித்தது.
அசீமானந்தாவின் கலவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கூச்சல் குழப்பங்களைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி அதில் தலையிட வேண்டி வந்தது. “என்னுடைய மதமாற்ற நடவடிக்கைகள் தேசிய ஊடகங்களில் வெளியாகி, சோனியாகாந்தி எனக்கு எதிராக பேசிய பிறகு, ஊடகங்களில் பல விவாதங்கள் நடைபெற்றன. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிஜி என்னை கட்டுப்படுத்தி வைக்கும்படி கேசுபாய் பட்டேலிடம் சொல்லியிருக்கிறார். அவர் எங்கள் பணிகளை நிறுத்தி வைத்ததோடு, என் ஆட்களை கைது செய்யவும் ஆரம்பித்தார்” என்கிறார் அசீமானந்தா. ஆனால், அப்போதே மோடி முதல்வர் பதவியை நோக்கி தனது கத்திகளை தீட்டிக் கொண்டிருந்தார். அகமதாபாத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட மோடி அசீமானந்தாவிடம் “கேசுபாய் உங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறார் என்று எனக்குத் தெரியும். நீங்கள் செய்து வரும் பணிக்கு ஈடு இணையே இல்லை ஸ்வாமிஜி. நீங்கள்தான் உண்மையான சேவை செய்து வருகிறீர்கள். நான் விரைவில் முதலமைச்சர் ஆகப் போகிறேன் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நான் வந்த பிறகு, உங்கள் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன். நிம்மதியாக இருங்கள்” என்று தன்னிடம் சொன்னதாக அசீமானந்தா கூறுகிறார். (இது தொடர்பாக மோடியின் விளக்கத்தை பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் தோல்வியடைந்தன).
2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மோடி குஜராத் முதலமைச்சர் ஆனார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் குஜராத்தில் 1,200 குஜராத்திகளைக் கொன்ற மதக் கலவரங்கள் தொடங்கின. டாங்சுக்கு வடக்கே பஞ்ச்மால் மாவட்டத்தில் நடந்த தாக்குதல்களை தான் நடத்தியதாக அசீமானந்தா கூறுகிறார். “இந்தப் பகுதியில் முஸ்லீம்களை அழித்து ஒழிக்கும் வேலையை நான்தான் செய்தேன்” என்கிறார் அவர்.
அந்த ஆண்டு இறுதியில் டாங்சுக்கு வந்த மோடி அசீமானந்தாவின் செல்வாக்கை உறுதிப்படுத்தினார். 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராமனின் 14 ஆண்டு வனவாசத்தின் போது உதவியதாக நம்பப்படும் பழங்குடி பெண்ணை வழிபடுவதற்காக சபரிதாம் என்ற புனித வளாகத்தை அசீமானந்தா கட்ட ஆரம்பித்தார். அந்த வளாகத்தில் கட்டப்படவிருந்த ஆசிரமத்திற்கும் ராமர் கோயிலுக்கும் நிதி திரட்டுவதற்காக புகழ் பெற்ற கதாகாலட்சேபகர் மொராரி பாபுவின் 8-நாட்கள் ராமாயண காலட்சேபத்துக்கு அவர் ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்வு 10,000 பேரை கவர்ந்தது. முதலமைச்சர் பதவியை மீண்டும் கைப்பற்றுவதற்காக அந்தப் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மோடி (கலவரங்களைத் தொடர்ந்து அந்த ஆண்டு ஜூலையில் அவரது அரசு ராஜினாமா செய்திருந்தது), அந்த கதாகாலட்சேபத்தை தொடங்கி வைப்பதற்காக மேடையில் தோன்றினார்.
அந்த தேர்தலில் மோடியின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக அனைத்து மத மாற்றங்களுக்கு மாவட்ட நீதிபதியின் ஒப்புதல் கோரும் குஜராத் மத சுதந்திர மசோதா சேர்க்கப்பட்டிருந்தது. மோடியின் நம்பகமான கூட்டாளி அமித் ஷா, மாநில சட்டசபையில் அந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஏப்ரல் 2003-ல் சட்டமாக்கப்பட்டது. விரைவில், மொராரி, மோடி, மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைமையின் உதவியோடு டாங்சில் ஒரு பெரிய “தாய் மதம் திரும்பும்” நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார், அசீமானந்தா.
மொராரி தனது ராமகதா காலட்சேபத்தின் இறுதியில் சபரி தாமில் ஒரு புதிய கும்பமேளா நடத்த ஏற்பாடு செய்யுமாறு பரிந்துரைத்தார். தயாரிப்புகளுக்காக நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட அந்தத் திருவிழா மதமாற்றங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாகவும், இந்துத்துவாவின் கொண்டாட்டமாகவும் விளங்கியது. ஆர்.எஸ்.எஸ்சுடன் சேர்ந்து இந்த மேளாவை ஏற்பாடு செய்யும் பொறுப்பை அசீமானந்தா ஏற்றுக் கொண்டார்.
2006-ம் ஆண்டு பிப்ரவரி 2-வது வாரம் பல பத்தாயிரக் கணக்கான இந்தியர்கள் வன கிராமமான சுபீரில் குவிந்தார்கள். சபரி தாமில் இருந்த அசீமானந்தாவின் ஆசிரமத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுபீரில் சபரி கும்பமேளா தொடங்கி வைக்கப்பட்டது. மற்ற நான்கு பாரம்பரிய கும்பமேளாக்களைப் போல சபரி கும்ப மேளாவும் பாவங்களை கழுவும் சடங்குகளை மையமாகக் கொண்டிருந்தது. அந்த ஊர் ஆற்றில் சம்பிரதாய கொண்டாட்டங்களுடன் முழுக்கு போடுவதன் மூலம் பழங்குடி மக்கள் இந்து மதத்தின் பிடிக்குள் தாம் திரும்பி வருவதை அறிவித்தார்கள். மத்திய இந்தியாவின் பழங்குடி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் லாரிகளில் ஏற்றிக் கொண்டு வரப்பட்டார்கள். கூட்டத்திற்கு போதுமான அளவு ஆற்றுக்குள் தண்ணீரை திருப்பி விடுவதற்கு குஜராத் அரசு 53 லட்சம் ரூபாய் செலவழித்தது என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட மனு ஒன்றின் மூலம் தெரிய வந்தது.
சபரி கும்பமேளா இந்துத்துவ அமைப்புகள் தமது ஒற்றுமையை பறைசாற்றுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. பிரபல மதத் தலைவர்கள் (மோராரி பாபு, ஆசாராம் பாபு, ஜெயேந்திர சரஸ்வதி, சாத்வி ரிதம்பரா போன்றவர்கள்), ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற சங்க பரிவார அமைப்புகளின் உயர்மட்டத் தலைவர்கள் (இந்திரேஷ் குமார், விஸ்வ இந்து பரிஷத்தின் தீவிரவாத தலைவர்கள் பிரவீன் தொகாடியா, அசோக் சிங்கால் உள்ளிட்டவர்கள்), மூத்த பா.ஜ.க அரசியல்வாதிகள் (மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டவர்கள்) மேடையை அலங்கரித்தனர். நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ்சின் முழுநேர ஊழியர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சபரி கும்ப மேளாவை, “சாதுக்கள், சங்கம், மற்றும் சர்க்கார் (அரசு) இவற்றின் கூட்டிணைவு” என்று இரு ஆய்வாளர்கள் வர்ணித்தது மிகவும் பொருத்தமானது.
திருவிழாவின் தொடக்க விழாவில் மறுபடியும் முதலமைச்சராக ஆகி விட்டிருந்த மோடி, பழங்குடி மக்களை ராமனிடமிருந்து பிரிக்க நடக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடையும் என்று பேசினார். மேடையின் பின்புலமாக, பத்து தலை இராவணனின் மீது அம்பு விடும் ராமனின் பிரம்மாண்டமான சுவரோவியம் தீட்டப்பட்டிருந்தது. அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தேசியத் தலைவர் கே எஸ் சுதர்சன், “நாம் அடிப்படைவாத முஸ்லீம்களாலும், கிறித்துவர்களாலும் நடத்தப்படும் ஒரு கபட யுத்தத்தை எதிர் கொள்கிறோம்” என்றும் “நம் வசம் இருக்கும் அனைத்து சக்திகளையும் திரட்டி இதை எதிர் கொள்ள வேண்டும்” என்று அங்கு கூடியிருந்த சாதுக்களின் கும்பலுக்கு அறிவுறுத்தினார். 2009-ல் சுதர்சன் இறந்த பிறகு தலைமை பதவிக்கு வந்த மோகன் பாகவத், “நம்மை எதிர்ப்பவர்களின் பற்கள் உடைக்கப்படும்” என்று கூறினார்.
சுமார் 1.5 லட்சம் முதல் 5 லட்சம் பேர் அந்த கும்பமேளாவில் கலந்து கொண்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் மதமாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. இன்றைக்கு, சபரி தாம் கோயிலுக்கு ஒரு சில பக்தர்களே போகிறார்கள். கோயிலில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கக் கூட வக்கில்லாமல் போயிருக்கிறது. அசீமானந்தா வசித்து வந்த ஆசிரமம் இடிக்கப்பட்டிருக்கிறது.
கோயிலின் தலைமை பூசாரிக்கு உதவி புரியும் பிரதீப் பட்டேல், அசீமானந்தாவுடன் தொடர்புடையதால் கோயிலின் பெயர் கெட்டு விட்டது என்கிறார். பணக்கார குஜராத்திகளில் பலர் இந்த கோயிலுக்கு வருவதையும் நன்கொடைகள் கொடுப்பதையும் நிறுத்தி விட்டிருக்கின்றனர். கோயிலுக்கு வரும் ஒரு சில மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு 10 ரூபாய் நோட்டைக் கூட காணிக்கை பெட்டியில் போடுவதில்லை. டாங்ஸ் வந்து சேருவதற்கே அவர்களது பணம் முழுவதும் செலவாகி விடுகிறது. அசீமானந்தா “அதை சரியாக கட்டமைக்காமல் போனது என்னுடைய தவறு” என்று சொல்கிறார்.
இருந்த போதிலும் அந்த வட்டாரத்தில் பல சுறுசுறுப்பான செயல்பாடுகள் நிறைவேறி வருகின்றன. அந்த பிராந்தியத்திற்கு மிக முக்கியமான தேவை கோயில்கள்தான் என்று குஜராத் அரசு கருதுகிறது. டாங்ஸ் தனது வாழ்வாதார தேவைகளை மத சுற்றுலா மூலம் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பது திட்டம். 2012-ம் ஆண்டு மாநில அரசு ராமர் பாதை திட்டத்தை ஆரம்பித்து வைத்தது. ராமாயண கதாபாத்திரங்கள் மேற்கொண்ட பயணத்தை கொண்டாடுவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் சபரி தாம் முக்கியமான இடம் வகிக்கிறது.
ராமன் பாதை திட்டத்தின் கீழ், சபரி தாமுக்கு ரூ 13 கோடி மானியம் மாநில அரசால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிவன் கோயில், 4 ஊற்றுக்கள், ஒரு சேவைச் சாலையும் சுற்றுச் சுவரும், பெரியதொரு வாகனம் நிறுத்தும் இடம், உட்காரும் வளாகம், மற்றும் சுகாதார வசதிகள், தரை பாவுதல், மின் இணைப்பு, நீர் வினியோகம் கொடுத்தல் போன்ற செலவுகளுக்காக அந்நிதி பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக, டாங்ஸ் பகுதியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு கொடுக்கும் பின் தங்கிய பகுதிகள் முன்னேற்றத்துக்கான ரூ 11.6 கோடி மானியத்துக்கான திட்டங்கள் எதையும் மோடி அரசு சமர்ப்பிக்கவில்லை. அந்த நிதி கடந்த 6 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் தூங்குகிறது.
உள்ளூர் கிறித்துவ அமைப்புகளும் மாநில அரசால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. “1998 முதல் நாங்கள் காந்திநகரில் தொடப்படாதவர்களாக்கபட்டிருக்கிறோம்” என்கிறார் தீப் தர்ஷன் பள்ளியின் சிஸ்டர் லில்லி. “ஒவ்வொரு ஆண்டும் பள்ளியின் புதிய நிதி தேவைகளுக்கான கோப்புகளை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு எதையும் தருவதில்லை.”
நவ்சாரியில் அசீமானந்தா தனது மத மாற்ற நிகழ்வுகளை நடத்தி வந்த உனாய் கோயிலும் ராமன் பாதை திட்டத்தின் கீழ் ரூ 3.63 கோடி மானியம் பெற்றது. ஜூன் 2013-ல் முக்கிய கட்டிடத்தின் வேலைகள் முடிக்கப்பட்டிருந்தன. இந்த புதிய கட்டிடம் மிகப் பெரியதாகவும், பிரமிக்க வைப்பதாகவும் உள்ளது. அசீமானந்தா பழங்குடி மக்களை மதமாற்றத்துக்காக அழைத்து வந்த எளிய பழைய கோயில் சுவர்களுக்குப் பின்னே மறைந்திருக்கிறது. கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது, ஆனால் வெந்நீர் ஊற்றுகள் முதல் முறையாக வற்றிப் போய் விட்டன என்று கோயில் பூசாரி சொல்கிறார்.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக