சனி, 13 அக்டோபர், 2012

ராபர்ட் ரொம்ப நல்லவர் Overnight multi-billionaire Robert Vadra

அன்னா ஹஸாரே கூட்டணியிலிருந்து பிரிந்து வந்த கேஜ்ரிவால் தன்னிடம் கைவசம் நிறைய ஊழல் பட்டியல் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். ஒவ்வென்றாக எடுத்துவிடுகிறார். தற்போது சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவை குறிவைத்து சில புகார்களை வெளிக்கொண்டு வந்துள்ளார். நிச்சயம் இவரை பற்றி முன்பே அன்னா குழுவிற்கு தெரிந்திருக்கும், ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து விட்டால் தான் இவர்கள் டிவியில் ரொம்ப நாளைக்கு தெரிவார்கள்!.
குற்றச்சாட்டு - ஐம்பது லட்சம் ரூபாய் கடனாக டி.எல்.எஃப் கம்பெனியிடம் வாங்கி அதை வைத்துக்கொண்டு டி.எல்.எஃப் ரியல் எஸ்டேட் கம்பெனியில் 300 கோடிக்கு சொத்து வாங்கியது எப்படி ? ஒரு வரைமுறையின்றி சல்லிசாக அள்ளி வீசப்பட்ட கடன்களை மூலதனமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டதுதான் இவ்வளவு பெரிய சொத்துக்களின் சாம்ராஜ்யம்.

கடந்த பிஃப்ரவரியில் நடைபெற்ற பரபரப்பான உத்திரப்ரதேசத் தேர்தலுக்கு இடையில் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேராவின் எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றிய வதந்திகள் பரவிக் கொண்டிருந்த நிலையில், அவருடைய மனைவி ப்ரியங்கா வதேரா, அவர் வெற்றிகரமான தொழிலதிபர், அவருக்கு அரசியலில் நாட்டமில்லை என்று கூறி அப்போதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

பத்திரிக்கை டிவிக்கு இந்த விஷயம் தெரியும் ஆனால் சோனியா என்ற ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு இவர்கள் சும்மா இருந்தார்கள் என்று தான் கூற வேண்டும். கேஜ்ரிவால் இல்லை என்றால் இது பேசப்பட்டிருக்காது என்பது என் எண்ணம்.

மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யம் கட்டமைக்கப்பட்ட போதிலும், எவ்வாறு அவை நிறுவப்பட்டன என்ற விவரங்களேதும் அதிகமாக கிடைக்கப்பெறவில்லை.

கடந்த ஆண்டு, எகனாமிக் டைம்ஸ் தினசரியில், இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான DLF உதவியுடன் எவ்வாறு அதிக ஆர்பாட்டமின்றி, வதேரா ரியல் எஸ்டேட் துறையில் கால்பதித்தார் என்பது பற்றி எழுதியிருந்தது. கடந்த வெள்ளியன்று, ஊழலுக்கெதிரான இந்தியா அமைப்பைச் சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவல் மற்றும் பிரபல சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ப்ரசாந்த் பூஷன் ஆகிய இருவரும், வதேரா எவ்வாறு தலைநகரையொட்டியுள்ள பகுதிகளில் அதிக அளவு நிலங்களை சந்தை மதிப்பை விட மிகவும் குறைந்த மதிப்பில் வளைத்துப் போட்டுள்ளார் என்பது தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டனர். இவ்வாறு அவர் நிலங்களை வாங்குவதற்கு DLF மற்றும் சில நிறுவனங்கள், எவ்வித முகாந்திரமும் இன்றி வட்டியில்லா கடன்களை அளித்துள்ளது பற்றிய ஆவணங்களையும் வெளியிட்டனர்.

அவர்கள் வெளியிட்ட ஆவணங்கள் வதேரா தரப்பில் எவ்வித சட்டவிரோத நடவடிக்கைகளையோ, நிலம் வாங்குவதில் முறைகேடுகளையோ நிரூபிக்காவிட்டாலும், DLF நிறுவனம், எதற்காக காரணமின்றி இவ்வளவு பெரிய வர்த்தக நடவடிக்கைகளில் வதேராவுடன் ஈடுபட வேண்டும் என்ற சந்தேகங்களை எழுப்பின. DLF நிறுவனம் தன் பங்கிற்கு கடந்த சனிக்கிழமையன்று வதேராவுடனான தனது வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான தன் தரப்பு நியாய வாதங்களை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டது. ஆயினும் இந்நிறுவனம் சோனியா காந்தியின் மருமகனுடனான நிறுவனத்துடன் ஈடுபட்டது போன்ற வர்த்தக நடவடிக்கைகளைப் போன்று, மற்ற குறிப்பிடத்தகுந்த சில தனிநபர்கள் நடத்தும் நிறுவனங்களுடன் இதே போன்றதான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதா என்ற சிறு முதலீட்டாளர்களின் கேள்விகள் விடையளிக்கப்படாமலேயே இருந்தன. மற்ற விவகாரங்களில் மிகவும் காட்டமாக நடந்து கொள்ளும் எதிர்க்கட்சிகள், இவ்விஷயத்தில் அஸாத்ய மெளனம் காப்பது ஏன் என்ற கேள்விக்கு, இவ்விரண்டாம் கேள்விக்கான விடையே பதிலாக இருக்கும்.

1997 ஆம் ஆண்டு, ப்ரியங்காவை மணந்த அதே வருட்த்தில், வதேராவின் ஆர்டெக்ஸ் என்ற, கைவினைப் பொருட்களுடன் தொடர்புடைய முதல் நிறுவனம் துவக்கப்பட்டது. 2007 முதல் இவருடைய வர்த்தக நடவடிக்கைகளில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டது. ஒரே ஆண்டில் ரியல் எஸ்டேட், ஹோட்டல் போன்ற வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மேலும் ஐந்து நிறுவனங்களைத் துவக்கினார்.

ஆயினும் ப்ரியங்கா காந்தி இவ்வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து சற்று தள்ளியே இருந்தார். 2008 இல் தான் சம்பந்தப்பட்டிருந்த ஒரே வர்த்தக நிறுவனமான Blue Breeze சார்ட்டர்ட் விமான நிறுவனத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார்.

கெஜ்ரிவல் வெளியிட்ட ஆவணங்கள் மற்றும் “தி ஹிந்து” தன் தரப்பு மூலமாக சேகரித்த வதேராவின் ஆறு நிறுவனங்கள் தொடர்பாகத் திரட்டிய தகவல்கள் மூலமாக, வதேராவின் வளர்ச்சி மிகக் குறுகிய காலத்தில் நினைத்தும் பார்த்திராத அளவிற்கு அபரிமிதமானது எனத் தெரிய வருகிறது. இத்தனைக்கும் இவற்றின் மொத்த மூலதனம் வெறும் 50 லட்சம் ரூபாய் மட்டுமே.

ஆயினும், வதேராவின் நிறுவனங்கள் 2010 ஆம் ஆண்டில், 29 அதிமதிப்புமிக்க சொத்துக்களை ஆர்ஜிதப்படுத்த முடிந்தது, அதுவும் DLF, Bedarwals Infra Projects, Nikhil Internationals and VRS Infra போன்ற நிறுவனங்களின் மூலமாக பெறப்பட்ட சுமார் 80 கோடி ரூபாய் கடன் மூலமாக. இவ்வாறு பெறப்பட்ட சொத்துக்களில் சாகேத் கோர்ட்யார்ட் என்ற ஹோட்டல் நிறுவனங்களின் 31 கோடி ரூபாய் மதிப்புடைய, 50 சதவிகித பங்குகளும் அடக்கம்.

2010 இன் இறுதியில், பிகானிரில் சுமார் 160 ஏக்கர் அளவிலான நிலம் ரூபாய் 1.02 கோடிக்கும், மற்றும் 2.43 கோடி ரூபாய்க்கு பரப்பளவு தெரியாத அளவில் இடங்களும், தவிர மானேஸர் மற்றும் தில்லியின் புறநகர் பகுதிகளில் சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களும் பெறப்பட்டன. மேலும் பெறப்பட்ட இடங்களும் அவற்றின் மதிப்புகளும் முறையே, பல்வலில் 42 லட்சம் மதிப்பிலான இடம், ஹைத்தாப்பூர் மற்றும் குர்காவ்ன் பகுதிகளில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான இடங்கள், ஹஸன்பூர் மற்றும் மீவட்டில் முறையே 76 மற்றும் 95 லட்சம் மதிப்பிலான நிலங்கள், மற்றும் அடையாளங்காண முடியாத விவசாய நிலங்கள் 69 லட்சம் மற்றும் 9 லட்சம் மதிப்பிலும் பெறப்பட்டுள்ளன. இத்தனைக்கும் இவருடைய நிறுவனங்களின் மொத்த முதலீடு வெறும் 50 லட்சம் மட்டுமே!

இந்த இடத்தில் " பணம் என்ன மரத்திலா காய்க்கிறது" என்று நம் பாரதப்பிரதமர் உயர் திரு மன்மோகன் சிங் சில வாரங்களுக்கு முன் சொன்னதை இங்கே நினைவுப் படுத்துகிறேன். .

2008 ஆம் நிதியாண்டில் வெறும் 7 கோடி ரூபாயாக இருந்த வதேராவின் சொத்து மதிப்பு, 2009 ஆம் நிதியாண்டில் 17.19 கோடியாகவும், அதுவே 2010 ஆம் நிதியாண்டில் சுமார் 350 சதவிகித வளர்ச்சி பெற்று 60 கோடி ரூபாயாகவும் உயர்ந்தது. இந்த 2010 ஆம் ஆண்டிலேயே இவரது பெரும்பாலான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன, வெறும் 50 லட்ச ரூபாய் முதலீட்டினைக் கொண்டு, DLF போன்ற நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன் மற்றும் முன்பணங்களின் மூலமாக.

வதேராவின், DLF நிறுவனத்துடனான இப்பரிவர்த்தனைகள் குறித்து ஹிந்து நாளிதழ் விவரங்கள் கேட்டனுப்பிய மின்ன்ஞ்சல்களுக்கு வதேராவிடமிருந்து எவ்விதமான பதிலுமில்லை. மேலும், DLF மற்றும் இதர நிறுவன்ங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு சற்றும் தொடர்பில்லாத வகையில், ரியல் எஸ்டேட் துறையில் முன்ன்னுபவம் கிஞ்சித்தும் இல்லாத வதேராவுக்கு எதற்காக இவ்வளவு பெரிய தொகையை வட்டியில்லாக் கடனாக அளிக்க வேண்டும் என்ற கேள்விக்கும் தெளிவான விடையில்லை. அதுவும் DLF Ltd கம்பெனி பிரைவேட் கம்பெனி கூட கிடையாது.

வதேராவின் ஆறு நிறுவனங்களில் இருப்பிநிலைக்குறிப்புகளால், அவர் எவ்வாறு, என்ன தொழில் செய்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தமுடியவில்லை. குறிப்புகளின்படி, வதேராவின் ஆறு நிறுவன்ங்களுமே ஒரே முகவரியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனத்திலும், ராபர்ட் வதேராவும், அவருடைய தாயார் மவ்ரீன் வதேராவும் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த ஆறு நிறுவனங்களில், ஒரே ஒரு நிறுவனத்திடமிருந்து மட்டுமே வதேரா சம்பளமாக வருடத்திற்கு ரூபாய் 60 லட்சம் பெறுகிறார். தவிர, இக்குறிப்புகளில், இந்நிறுவனங்களில் வேறு பணியாளர்கள் பணியாற்றுவதாகவோ, அவர்களுக்கு சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்கான தொகை வழங்கப்படுவதாகவோ குறிப்பிடப்படவில்லை.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு விசாரணை தேவை இல்லை என்று ப.சிதம்பரம் அறிக்கைவிட்டதை இங்கே நினைவுப் படுத்துகிறேன்.

இந்நிறுவனங்களின் இருப்புநிலைக்குறிப்பில் மேலும் ஒரு முரணாக, வெறும் 15 கோடி மதிப்புடைய மானேஸர் நிலத்தின்மீது, 50 கோடி ரூபாய் கடனிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும் லாபநட்டக் கணக்கில் பல முன்னுக்குப்பின் முரணான தகவல்கள், இவர்களுடைய நடவடிக்கைகளின்படி, ஆறு நிறுவனங்களில், ஸ்கைலைட் ரியாலிடி மட்டுமே லாபம் ஈட்டியுள்ளது, அதுவும் ஒரே வருடம் மட்டுமே. மற்ற நிறுவனங்கள் அனைத்துமே நஷ்டத்தில் இயங்குவதாகக் காட்டப்பட்டிருக்கிறது, ஆனாலும் நஷ்டத்தில் இயங்குவதாக்க் காட்டப்பட்டுள்ள நிறுவனங்கள் அதே நிதியாண்டில் தொடர்ந்து முதலீடுகளும் செய்து வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது எப்படி என்று புரியவில்லை. லாபம் காட்டியுள்ள நிறுவனமும், அந்த நிதியாண்டில் எந்த வியாபார நடவடிக்கைகளிலோ அல்லது முதலீடுகளிலோ ஈடுபட்டதாகத் தெரியவுமில்லை, காட்டப்படவுமில்லை. மேலும் மற்ற ஐந்து நிறுவனங்களும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிய நிலையில், வதேராவால் எவ்வாறு தலைநகரில், அதிக மதிப்புடைய இடங்களில் தொடர்ந்து முதலீடு செய்ய முடிந்தது என்ற கேள்விக்கும் விடையில்லை.

எந்தக் கேள்விக்குமே நேரடியாக விடையில்லாத நிலையில், வதேரா இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்த்தற்கு தன்னுடைய கடின உழைப்பையும், கே.பி சிங் போன்ற குடும்ப நண்பர்கள் மூலமாக்க் கிட்டிய “சிறு உதவிகளையும்” காரணமாகக் கூறுகிறார். இவர் வேறு யாருமல்ல, DLF நிறுவனத்தின் தலைவர். DLF நிறுவனத்திடமிருந்து எவ்விதமான சகாயத்தையும் தான் பெறவில்லை என்று வதேரா, அவர்கள் தமது குடும்ப நண்பர்கள் எனவும், வெகுகாலமாக இத்தொழிலில் இருப்பவர்கள் என்றும், தமக்கு காட்டப்படும் சகாயத்தால் அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள அவசியமில்லை என்றும் எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

2002 ஜனவரியில், தமது சகோதரரும், தந்தையும் இணைந்து, தமக்கு காந்தி குடும்பத்துடன் இருக்கும் நெருக்கத்தைப் துஷ்ப்ரயோகம் செய்து, வேலை அளிப்பதாக பலரை ஏமாற்றினர் எனக் குற்றம் சாட்டினார். இதற்காக இவரது தந்தை வதேரா மீது அவதூறு வழக்கும் தொடர்ந்தார்.

இந்த இடத்தில் கர்நாடக கவர்னர் பரத்வாஜ் ராபர்ட் ரொம்ப நல்லவர் என்று சர்டிப்பிகேட் கொடுத்துள்ளார் என்பதை இங்கே நினைவுப் படுத்துகிறேன்.



அரியானாவில் கற்பழிப்பில் பாதிக்கப்பட்டவர்களை காங். தலைவர் சோனியா காந்தி சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். நாட்டையே ஒரு கும்பல் கற்பழித்துக்கொண்டு இருக்கிறது யார் ஆறுதல் கூறுவார்கள் ?

கருத்துகள் இல்லை: