வியாழன், 11 அக்டோபர், 2012

கர்நாடக ஜனதா கட்சி' எடியூரப்பா புதிய கட்சி Karnataka Jantha Party

'கர்நாடக ஜனதா கட்சி' என்ற பெயரில் எடியூரப்பா புதிய கட்சி தொடங்குகிறார்
கர்நாடகத்தில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா சுரங்க முறைகேடு புகாரை அடுத்து பதவியை ராஜினாமா செய்தார். தன் மீதான புகாரை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த புகாரை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தன் மீதான புகார் ரத்து செய்யப்பட்டு விட்டதால் தன்னை மீண்டும் முதல்- மந்திரி ஆக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா மேலிடத்திற்கு எடியூரப்பா கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் மேலிட தலைவர்கள் மீது எடியூரப்பா கடும் அதிருப்திஅடைந்தார்.

இந்த நிலையில் தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கவில்லை என்றாலும் பரவாயில்லை, மாநில தலைவர் பதவியையாவது வழங்க வேண்டும் என்று எடியூரப்பா கேட்டு வந்தார். இந்த முயற்சியும் எடுபடவில்லை. எக்காரணத்தை கொண்டும் எடியூரப்பாவுக்கு கட்சி தலைவர் பதவி வழங்குவது இல்லை என்று கட்சி மேலிடம் முடிவு செய்தது.


கர்நாடக எம்.பி.க்களான பிரகலாத் ஜோஷி, நளின்குமார் கட்டீல் ஆகிய இருவரில் ஒருவருக்கு கட்சி தலைவர் பதவி வழங்க மேலிட தலைவர்கள் முடிவு செய்தனர். ஆனால் இதற்கான அறிவிப்பை வெளியிட்டால் எடியூரப்பா கட்சியை விட்டு விலகி விடுவார் என்று அந்த முடிவை மேலிடம் நிறுத்தி வைத்து உள்ளது.

இந்த நிலையில் எடியூரப்பா பா.ஜனதா கட்சியில் தொடர்ந்து இருக்க மாட்டேன் புதிய கட்சி தொடங்குவேன் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து எடியூரப்பா பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் பா.ஜனதாவில் தொடர்ந்து நீடிக்கும் பேச்சுக்கே இடமில்லை. பா.ஜனதா கட்சிக்கு நான் தேவை இல்லை என்று அந்த கட்சியின் தலைவர்கள் நினைக்கிறார்கள். அதனால் நான் புதிய கட்சியை தொடங்குவது 100-க்கு 100 சதவீதம் உறுதி.

இதுதொடர்பாக எனது ஆதர வாளர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறேன். அவர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். வருகிற டிசம்பர் மாதம் புதிய கட்சி தொடங்குகிறேன். இதற்கு முன்பாக மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களிடம் விவாதித்து கருத்துக்களை கேட்டு அறிய முடிவு செய் துள்ளேன். விரைவில் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளேன். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

எடியூரப்பா தனது புதிய கட்சிக்கு ‘கர்நாடக ஜனதா கட்சி’ என்று பெயர் தேர்வு செய்துள்ளார். தேர்தலில் போட்டியிட கட்சிக்கு ‘சைக்கிள்’ சின்னம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பெயர், கொடி, சின்னம் போன்ற விவரங்களை எடியூரப்பா விரைவில் வெளியிடுவார் என்று அவரது ஆதரவாளர் ஒருவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: