தம்மைப்
பற்றி பேசியும், எழுதியும் வந்த எதிர்க் கட்சியினர் மற்றும் ஊடகங்கள் மீது
அவதூறு வழக்கு போடுவது அம்மா ஸ்டைல். இப்படி அம்மா போட்ட வழக்குகளின்
எண்ணிக்கை எவ்வளவு என்ற கணக்கு அவருக்கே தெரிந்திருக்காது. அந்தளவுக்கு
எண்ணிக்கை அதிகம்.
தற்போது கதை திரும்புகிறது. தம்மீது பொய் புகார்
கொடுத்த ஆறுமுகம் என்பவர் மீதும், அது தொடர்பான செய்தியை ஒளிபரப்பிய ஜெயா
டிவி மீதும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தி.மு.க பொருளாளர்
மு.க.ஸ்டாலின் இன்று அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது சென்னையை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் புகார் கொடுத்திருந்தார். தமது நிலத்தை ஸ்டாலின் அபகரித்ததாக அந்த புகாரில் அவர் கூறியிருந்தார். இந்த விவகாரத்துக்கு ஜெயா டி.வி. விலாவாரியாக கவரேஜ் கொடுத்தது.
அதையடுத்து, தி.மு.க. சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி, கடந்த வெள்ளிக்கிழமை போலீஸ் டி.ஜி.பி.யிடம் ஒரு மனு கொடுத்தார். “தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக ஆறுமுகம் என்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய வருகிறோம்.
விளம்பரம் பெற வேண்டும் என்பதற்காக, எங்கள் இயக்க தலைவர் மீது மாசு கற்பிக்கும் தீய நோக்குடன், அவதூறான வார்த்தைகளுடன் முற்றிலும் பொய்யான, ஆதாரமற்ற, குற்றச்சாட்டுகள் கொண்ட மனு அது.
பொய் புகார் அளித்து, எங்களது தலைவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காவும், பொய்யான தகவல் மூலம் அவர்களது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காகவும், தண்டனை சட்டத்தின்படி ஆறுமுகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” என்றது அந்த மனு.
இதுவரை முதல்வர் ஜெயலலிதா, அவ்வப்போது போடும் அவதூறு வழக்குகளின் மனுக்களில் உள்ள அதே வாக்கியங்கள்தான் இவை.
எதிர்பார்க்கப்பட்டதுபோல, வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்ட இந்த மனு மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸ்டாலின் தரப்புக்கு அதுதானே தேவை? எனவே அடுத்த நடவடிக்கையில் இறங்கிவிட்டனர்.
தி.மு.க. சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் மனுமீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்திற்கு நேரில் வந்த மு.க.ஸ்டாலின், பொய் புகார் அளித்த ஆறுமுகம் மீதும், அந்த செய்தியை ஒளிபரப்பிய ஜெயா டிவி மீதும், அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு மீது வரும் 15-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இனி அம்மா போடும் ஒவ்வொரு அவதூறு வழக்குக்கும், இப்படியொரு எதிர் வழக்கு வந்து சேரும் என தாராளமாக எதிர்பார்க்கலாம். ஜெயா டி.வி. கோர்ட்டுக்கு அடிக்கடி செல்வதற்கு பிரதிநிதி ஒருவரை பணியில் அமர்த்துவது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக