புதன், 10 அக்டோபர், 2012

சென்னையும் பிரிட்டன் போல மாறலாம்

உண்மை நிலை சென்னை வாசிகளுக்கு நன்கு தெரியும் .. திமுக ஆட்சியை விட ஆதிமுக ஆட்சியில் சென்னையின் நிலைமை படு மோசம் .. நானே நேற்று முன்தினம் மட்டும் 6 முறை கார்பரேசனுக்கு தொலை பேசியில் அழைத்து வெட்டுவான்கினியில் உள்ள குப்பைகளை அள்ளுமாறு கேட்டு கொண்டேன் , இன்றும் அந்த குப்பைகள் நடு ரோட்டில் நாறி கொண்டு தான் உள்ளன ... இதில் லண்டனுடன் வேற போட்டியா ?? அடேயப்பா தாங்காதுடா உங்க பில்டப்பு .. சைதை துரைசாமி, அம்மாக்கு பாத பூஜை செய்யவே நேரம் போதவில்லை போலும் .. மக்களின் தலைவிதி .

சென்னை: ""குறைந்த அளவு, கரியமில வாயு வெளியிடும், தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தால், சென்னையும், பிரிட்டன் போல் மாறும்,'' என, லண்டன் மேயர், டேவிட் வூட்டன் கூறினார்.

பிரிட்டன் நிறுவனங்களுடன் இணைந்து, தமிழக தொழிற்சாலைகளில், குறைந்த அளவு கரியமில வாயு வெளியிடும் வகையிலான, தொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்கும், வரைவுத்திட்ட அறிக்கை வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், லண்டன் மேயர் டேவிட் வூட்டன் பேசியதாவது: உலக வெப்பமயத்தை குறைக்கும் வகையில், பல்வேறு நாடுகள் செயல்பட்டு வருகின்றன. பிரிட்டன், காமன்வெல்த் நாடுகளுடன் இணைந்து, குறைந்த அளவு, கரியமில வாயு வெளியிடும், தொழில் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது இந்தியாவுடன் கை கோர்த்துள்ளது. வரும், 2050 ஆம் ஆண்டுக்குள், இன்றைய பொருளாதார வளர்ச்சியில், மூன்று பங்கு அதிக வளர்ச்சி அடைய, அனைத்து நாடுகளும் உழைத்துக் கொண்டிருக்கின்றன. அதில், அதிக அளவு மாசு ஏற்படாத வண்ணம், பொருளாதார இலக்கை எட்டுவதற்கு, நாம் முயற்சி செய்ய வேண்டும். இயற்கை சார்ந்த உற்பத்தியை பெருக்க வேண்டும். இல்லையெனில், மிகப்பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும். அதற்காக, மேற்கு வங்காளம், ஒடிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுடன் இணைந்து, குறைந்த அளவு கரியமில வாயு வெளியிடும், தொழில் வாய்ப்புகளை ஊக்குவித்து வருகிறோம். தற்போது, தமிழக அரசின், "2023 - ஒரு தொலைநோக்குப் பார்வை' என்ற திட்டத்தில், பிரிட்டன் நிறுவனங்கள், எந்த வகையில் இணைந்து செயலாற்ற முடியும் என்பது குறித்து, தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அதற்கான வழிமுறைகளை அமைத்துள்ளோம். இந்தியாவின் மாசுபாடு இல்லாத வளர்ச்சிக்கு, இங்கிலாந்து நிறுவனங்கள் உதவும் என நம்புகிறேன். ஏனெனில், உலகில் மாசுபாடு இல்லாத நாடுகளில், இங்கிலாந்துக்கு மூன்றாவது இடம் உள்ளது. உலக அளவில், குறைந்த அளவு கார்பன் வெளியிடும் தொழில்நிறுவனங்கள் அமைந்த நகரங்களில், லண்டனுக்கு ஆறாவது இடம் உள்ளது. சுற்றுச்சூழலில், தொலைநோக்கு சிந்தனையாக, இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத தொழில்கள் செய்யும் திட்டத்தை, 1999ம் ஆண்டில், 20 சதவீதம் நிறைவேற்றி விட்டோம். தற்போது, முழுமையாக, இயற்கையோடு இணைந்த தொழில்கள் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். தமிழகத்தின், "தொலை நோக்குத் திட்டம் 2023' நிறைவேற்றுவதற்கு, பிரிட்டன், உறுதுணையாக இருக்கும். குறைந்த அளவு, கரியமில வாயு வெளியிடும் தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தால், சென்னையும், பிரிட்டன் போல் மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: