திங்கள், 8 அக்டோபர், 2012

DMK யும் TMDK யும் கூட்டணி பேச்சுவார்த்தையா?

கலைஞரும், புரட்சிக் கலைஞரும்' இணைவார்களா.. 'கை'யை உதறுமா திமுக?

சென்னை: மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிரடியான நடவடிக்கைகளால் அனைத்துத் தரப்பு மக்களும் கொந்தளிப்பில் இருக்கும் சூழலில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவில் திமுக உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸை வெளியேற்றும் திமுக அந்த இடத்தில் தேமுதிகவை கொண்டுவருவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை கட்சிகள் முனைப்புடன் தொடங்கி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக தொகுதிகள் தோறும் ஆலோசனைக் கூட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. திமுகவும் தமது தேர்தல் வியூகத்தை விரிவாக விவாதித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியுடனான திமுக கூட்டணிதான் அந்தக் கட்சிக்கு மிகப் பெரும் பலவீனமாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
திமுகவினரைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை ஒரு சுமையாகவே கருதுகின்றனர். இந்த சுமையை திமுக இறக்கி வைத்துவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் கருத்தாக இருக்கிறது. எதிர்முகாமில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக ஏற்கெனவே கழன்று கொண்டிருக்கிறது.
தனித்து நிற்கும் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு கொண்டுவந்தால் மக்களவைத் தேர்தலில் எளிதில் வெற்றி பெற முடியும் என்பதும் திமுகவினர் கணக்கு. இதனால் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட வேண்டும் என்றே திமுகவினர் விரும்புகின்றனர். இதில் மிகவும் மெனக்கெடுவது தயாநிதிமாறன்தான் என்று கூறப்படுகிறது. அதாவது மத்திய சென்னை தொகுதியில் தாம் மீண்டும் வெற்றி பெறுவதற்கு தேமுதிகவினர் உதவுவார்கள் என்று அவர் கருதுவதால் எப்படியாவது திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைத்துவிட காய்களை நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் திமுக தலைவர் கருணாநிதி இது தொடர்பாக எந்த சிக்னலும் கொடுக்காமல் இருந்தாலும் காங்கிரஸ் அணியிலிருந்து வெளியேறுவது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்றே சொல்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
தேமுதிகவைப் பொறுத்தவரையில் இனி மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்பது உறுதியாக்விட்டது. அதனால் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் என்ன என்ற யோசனையில் இருக்கிறது தேமுதிக. இது தொடர்பாக கடந்த மாதம் 28-ந் தேதியன்று தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. திமுக, காங்கிரஸை கழற்றிவிட்டால் அந்த இடத்தில் நாம் போய் உட்கார்ந்தால் மக்களவைத் தேர்தலில் கணிசமான தொகுதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுதான் தேமுதிகவின் கணக்கு. இதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிராகரிக்கவில்லையாம்.
தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணியை முடிவு செய்து கொள்ளலாம். அதற்கு முந்தைய கட்ட பணிகளை விரைந்து செய்யுங்கள் என்று மட்டும் விஜயகாந்த் கட்சியின் மாவட்ட செயலர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
காலம் மாற.. காட்சிகளும் மாறும்.... இருப்பினும் கலைஞரும் புரட்சிக் கலைஞரும் இணைந்து உருவாகும் கூட்டணி தேறுமா?தேறாதா? என்பது மக்களின் கையில்தான்!

கருத்துகள் இல்லை: