கடந்த மே மாதம் 22 அன்று தன் வீட்டில் ‘பர்த்டே பார்ட்டி’ வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். ம்ஹும். இது அவர் ‘பிறந்த’ நாள் அல்ல. அவர் தலைமையேற்றுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா அல்லது நான்காம் ஆண்டு தொடக்க விழா.
இந்த விருந்தில் கலந்து கொள்ளும்படி மெத்தப் படித்த அதிகாரிகள் மூலமாக 603 பேருக்கு அழைப்பு அனுப்பியிருந்தார், மன்மோகன் சிங். ஆனால், 375 பேர் மட்டுமே கலந்துக் கொண்டனர்.
மற்றவர்கள் ஒருவேளை பன்னாட்டு நிறுவனங்களுடன் ‘புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட சென்றிருக்கலாம். எனவே வராதவர்கள் குறித்து பிரதமர் கவலைப்படவில்லை.
ஆனால், 603 பேருக்கு சமைத்த உணவை என்ன செய்வது? கொட்டி விட வேண்டியதுதான். இந்தியாவே ஏகாதிபத்திய நாடுகளின் குப்பைக் கூடமாகத்தானே இருக்கிறது? அந்த ஜோதியில் இதுவும் ஐக்கியமாகட்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள்.
இப்படி கடலில் கரைந்த பெருங்காயமாக கொட்டப்பட்ட உணவின் விவரங்களை அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஒருபோதும் இந்த உணவு வகைகளை சாமான்ய மக்கள் தங்கள் கண்களால் காணப் போவதில்லை. தரிசிக்கும் பாக்கியத்தை பிரதமரும் அருளப் போவதில்லை. எனவே பெயர்களையாவது தெரிந்துக் கொள்வோம்.
இறால் கசுடி, மலபாரி மீன், செட்டிநாடு சிக்கன், கோஸ்ட் பர்ரா கபாப், டம் ஆலூ, அச்சாரி பைங்கன், பீஸ் மஜார் மட்டர், பிரியாணி, பேபி நான், மட்டர் பராத்தா, மிஸ்ஸி ரொட்டி, பழரசம், நெய்யில் வறுக்கப்பட்ட பாதாம் பருப்பு… ஆகியவை சில சாம்பிள்கள் மட்டுமே.உடனே திட்டக்குழு உச்சநீதி மன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரம் ஒன்றில், ஒரு கிராமப்புற ‘ஆம் ஆத்மி’ (நம்ம மனுசங்க) ஒருவர் ரூபாய்.28ஐ கொண்டும், நகர்ப்புற ‘ஆம் ஆத்மி’ ஒருவர் ரூ.32ஐ கொண்டும் ஒருநாள் பொழுதை கழிக்க முடியும் என்று கூறியிருக்கிறதே -
வந்த 375 பேரும் வயதானவர்கள் ஆயிற்றே… கொழுப்பு, சர்க்கரை, பிபி… என வயதுக்குரிய நோய்கள் இருக்காதா… எப்படி இவை அனைத்தையும் சாப்பிட முடியும் என்றெல்லாம் கேட்கக் கூடாது. (உடல்) கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே. சரியா?
மேலே குறிப்பிட்ட உணவுகள் அனைத்தும் அடங்கிய ஒரு ‘ப்ளேட்’டின் விலை வெறும் 7 ஆயிரத்து 721 ரூபாய்தான். ஜுஜூபி காசு.
அப்படிப் பார்த்தால், பிரதமர் அளித்த பர்த்டே பார்ட்டியில் ஒரு நபருக்கு அளிக்கப்பட்ட உணவின் விலையைக் கொண்டு, திட்டக்குழுவின் கணக்கின்படி 275 ‘ஆம் ஆத்மி’களுக்கு ஒரு நாளைக்கு உணவு அளித்திருக்க முடியும். எனில் 603ஐ 275 ஆல் பெருக்கினால் என்ன வருமோ அத்தனை ‘ஆம் ஆத்மி’களுக்கு ஒரு நாளைக்கு உணவு வழங்கியிருக்கலாமே…
என்றெல்லாம் குதர்க்கமாக கேள்வி கேட்கக் கூடாது. பிறகு அமெரிக்க சாமி கண்ணைக் குத்தும்.
இந்தக் கணக்கு எல்லாம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ரமேஷ் வர்மா என்பவர் பெற்றுள்ள தகவல்கள். இரவு உணவுக்காக செலவழிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.11 லட்சத்து 34 ஆயிரத்து 296. உணவுக் கூடாரம் உள்ளிட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.14 லட்சத்து 42 ஆயிரத்து 678ம், பூக்களுக்காக ரூ.26 ஆயிரத்து 444ம், செலவிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூபாய் 28 லட்சத்து 95 ஆயிரத்து 503 செலவாகியுள்ளது.இதெல்லாம் அரசு கருவூலத்தில் இருந்து செலவழிக்கப்பட்ட தொகை… மக்களின் வரிப்பணம் என்றெல்லாம் சொன்னால் அடி விழும்.
இவை பிரதமர் வீட்டு மரத்தில் காய்த்தவை. ஏனெனில், டீசல் விலை உயர்வு, எரிவாயு உருளைக் கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை ஆகியவற்றை நியாயப்படுத்தி பேசும் போது, ‘பணம் மரத்தில் காய்க்கவில்லை’ என்று பிரதமர்தான் கூறியிருக்கிறார்.
அதாவது கோடிக்கணக்கான கோடிகளை காய்க்கும் மரம், என் வளர்ப்புத் தந்தையின் மாளிகையில்தான் இருக்கிறது. என் வீட்டில் வெறும் லட்சங்களில் காய்க்கும் மரம் மட்டுமே வளர்கிறது. அதை வைத்துக் கொண்டு ஏழை, எளியவர்களான – திட்டக்குழு பரிந்துரைக்கும் ஒரு நாள் உணவை வாங்கக் கூட வழியற்ற – ‘வறுமைக் கோட்டுக்கு கீழே’ வாழும் 603 பேருக்கு இரவு உணவை மட்டுமே வழங்க முடியும் என்று உணர்த்தியிருக்கிறார்.
வாழ்க பிரதமர். வளர்க அவர்தம் பர்த்டே பார்ட்டி. ஜெய் ஹிந்த்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக