‌டந்த சனிக்கிழமை அதிகாலையில் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மேடக் நகரத்தின் இந்திரா நகரில் உள்ள மூத்த சிவில் நீதிபதி சந்திரசேகர பிரசாத் தனது வீட்டுக் குளியலறையில் ஏதோ சத்தம் கேட்கவே  என்னவென்று அறிய எட்டிப் பார்க்கிறார். ஒரு 12 வயதுச் சிறுவன் கால்களில் இரும்புச் சங்கிலியால் விலங்கிடப்பட்டு கீழே விழுந்து கிடக்கிறான். அதிர்ச்சியடைந்த நீதிபதி அவனை எழுப்பி யார் என்ன என்று விசாரிக்கிறார்.
அவ‌னது பெயர் மகபூப் என்றும், நீதிபதியின் வீட்டு மதிலை ஒட்டி அமைந்துள்ள காஸி உலூம் மதரசா பள்ளியில் அரபி படிக்க அவனது பெற்றோர்கள் அவனை அனுப்பி வைத்தார்கள் என்பதும் தெரிய வருகிறது. அரபி படிக்க பிடிக்காமல் வீட்டுக்கு தப்பி ஓட இருமுறை முயன்றானாம். அப்படி தப்பி விடாமல் இருக்க அவனை இரும்புச் சங்கிலியால் கடந்த 15 நாட்களாக பூட்டி வைத்துள்ளனர் மதரசா நிர்வாகத்தினர். அங்கிருந்து தப்பி நீதிபதியின் குளியலறைக்குள் வந்து கிடந்தவன் தனது ஆசிரியரான கலீல் அகமது, தலைமையாசிரியர் மவுலானா பர்கத் ஆகியோர் தான் இவ்வாறு செய்தனர் என நீதிபதியிடம்  கூறியுள்ளான்.

இதனைக் கேட்டு அதிர்ந்த‌ நீதிபதி உடனடியாகக் காவல் துறையினர், வருவாய்த் துறையினர், மருத்துவர்களை அழைத்திருக்கிறார்.  சங்கிலி அகற்றப்பட்டது. நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா? ஒரு சிறுவனை எப்படி சங்கிலியால் கட்டிப் போட்டு கல்வியைப் போதிக்க முடியும்? என்று கேள்விகளை எழுப்பினார் நீதிபதி.
ம‌தரசாவின் பொறுப்பாளர்கள் கலீல் அகமது மற்றும் மவுலானா பர்கத் ஆகியோரை கைது செய்யப் போவதாக போலீசார் கூறியுள்ளனர். அடிக்கடி பள்ளியை விட்டு மகபூப் ஓடியதால் அவனது பெற்றோர் சொன்னதால் தான் சங்கிலியால் பிணைத்தோம் என்று அவர்களிருவரும் கூறியுள்ளனர். சிறுவனுடன் பேசிய‌ உதவி ஆட்சியர் அவனை ஜகீராபாத்திலுள்ள உருது உறைவிடப் பள்ளியில் சேர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்திலும் கடந்த பிப்ரவரி மாதம் கொப்பல் பகுதியில் இவ்வாறு ஒரு சிறுவனை காலில் சங்கிலியுடன் யுனிசெப் அமைப்பினர் மீட்டனர். அப்போதும் பெற்றோர்கள் கூறியதால் தான் சங்கிலியால் பிணைத்தோம் என்றனர் மதரசா நிர்வாகத்தினர். சிறுவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி விட்டு மதரசாவின் பாதுகாவலர் மீது வழக்கு தொடுத்தார்கள். இந்த‌ இரு சிறுவ‌ர்க‌ளின் கால்க‌ளிலும் இரும்புச் ச‌ங்கிலியால் காய‌ம் ஏற்ப‌ட்டு இருந்த‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.
இசுலாமிய‌ க‌ல்வி நிறுவ‌ன‌மான‌ ம‌த‌ர‌சாவில் அர‌பியை க‌ற்க‌  க‌ட்டாய‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு எந்த சமூக அடிப்ப‌டையும் இல்லை. இந்தியாவில் கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கியிருக்கும் இசுலாமிய மக்களில் அதுவும் ஏழைகளாக இருப்போரை இப்படி மதவாதக் கல்வி பக்கம் தள்ளிவிடுவதால் எந்த நன்மையும் இல்லை. வாழ்க்கைப் பிரச்சினைகைள எதிர்கொண்டு வாழ்வதற்கு இசுலாம் உள்ளிட்ட எந்த மதமும் தீர்வு அளிக்கப் போவதில்லை. இந்நிலையில் இந்த ஏழைச் சிறுவர்களை இப்படி கட்டிப் போட்டு கட்டாயப்படுத்துவது அநீதியாகும்.
இன்னொரு புற‌ம் க‌ட‌ந்த‌ ஆண்டு ம‌ட்டும் இந்தியாவில் குழ‌ந்தைக‌ளுக்கெதிரான‌ குற்ற‌ச் செய‌ல்க‌ள் 24 ச‌த‌வீத‌ம் உய‌ர்ந்துள்ள‌தாக‌ தெரிவிக்கிற‌து ஒரு ஆய்வு. இதன் கீழ் 33,100 வ‌ழ‌க்குக‌ள் ப‌திவுசெய்ய‌ப்ப‌ட்டுள்ளன‌. உபி ம‌ற்றும் டெல்லியில் தான்  குழ‌ந்தைக‌ளுக்கெதிரான‌ குற்ற‌த்தின் அள‌வு அதிக‌மாக‌ இருக்கிற‌து. ஆந்திர‌மும்  5 வ‌து இட‌த்தில் இருக்கிற‌து.  குழந்தைகளுக்கெதிரான வன்முறையில் சாதி, வர்க்கம் மட்டுமல்ல மதமும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது என்பதை மேற்படிச் சம்பவம் காட்டுகிறது.
படிக்க