சென்னை: சட்டமன்ற உறுப்பினர்கள் மனம் போன போக்கில் பேசி, திட்டமிட்டு
சட்டசபையில் அமளியை உருவாக்கும்போது கண்டிப்புடன் செயல்பட வேண்டிய கடமை
சபாநாயகருக்கு உண்டு என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தமிழக
சட்டசபையின் புதிய சபாநாயகராக தனபால் இன்று தேர்வு செய்யப்பட்டார். இதற்காக
நடந்த சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா, தனபாலை
வாழ்த்துப் பேசினார். அவர் கூறுகையில்,ஜனநாயகம் என்பது பண்பட்டதும், பயனுடையதும், ஆற்றல் மிகுந்ததும், அருமை வாய்ந்ததுமான ஆட்சி முறை. ஆள்பவர், ஆளப்படுபவர் என்ற பேதம் இல்லாமல், நாட்டில் உள்ள அனைவரின் நன்மையையும், முன்னேற்றத்தையும் குறிக்கோளாகக் கொண்டது தான் ஜனநாயகம் ஆகும்.
ஜனநாயகத்தில் மக்கள்தான் அரசின் கொள்கைகளை தீர்மானிக்கின்றனர். இப்படிப்பட்ட உயரிய ஜனநாயக ஆட்சியில் சுதந்திரமாக கருத்துகளை பிரதிபலிக்கும் இடமாக இந்தச் சட்டமன்றம் திகழ்கின்றது.
வரலாற்றுச் சிறப்பும், பெருமையும் கொண்டு விளங்குகிற இந்தப் பேரவையின் தலைவராகத் தாங்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு எனது பாராட்டினை நான் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் உள்ள பல அரசியல் தலைவர்களும் பாராட்டும் அளவிற்கு சிறந்து விளங்கும் இந்த பேரவையில் தாங்கள் பேரவைத் தலைவராக வீற்றிருப்பது கண்டு நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் பேரவை வேற்றுமையில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே தாங்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள்.
அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், இந்த நிமிடம் முதல் அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்சி வேறுபாடின்றி நியாயமான தீர்ப்பினை வழங்கக் கூடிய பொறுப்பினை தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.
பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தாங்கள் இங்குள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பொதுவானவர். இங்குள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பாதுகாவலராக தாங்கள் விளங்குகின்றீர்கள்.
சட்டமன்ற வரலாற்றிலேயே சட்டமன்ற விதிகளையும், மரபுகளையும் கரைத்துக் குடித்தவர் ஜே. சிவசண்முகம் பிள்ளை என்று சொல்வார்கள். ‘மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது' என்ற பழமொழிக்கேற்ப, தோற்றத்திலே சிறியவராக இருந்தாலும், அவையை நடத்துவதிலும், ஆங்கிலத்தில் உரையாடுவதிலும் கைதேர்ந்தவர். மிகச்சிறந்த பேரவைத் தலைவர் என அனைத்துக் கட்சியினராலும் பாராட்டப் பெற்றவர்.
இவரைப் போன்றே, டாக்டர் யு.கிருஷ்ணா ராவும் நடுநிலையோடு செயல்பட்டார். 1957 முதல் 1962 வரை பேரவைத் தலைவராக இருந்தார். அப்போது பேரறிஞர் அண்ணா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தார்.
பேரறிஞர் அண்ணா 1967ம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவரை பாராட்டுகையில், "நான் அந்த ஐந்து வருடங்களில்- பெருமையோடு சொல்லிக் கொள்வேன்- எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தாலும், அப்பொழுது சட்டமன்றத் தலைவராக இருந்த, மறைந்த டாக்டர் யு.கிருஷ்ணா ராவ் எதிர்க்கட்சியில் இருந்த நாங்கள் யாரும் வருத்தப்படத்தக்க விதத்தில் ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை" என்று கூறினார். அந்த அளவுக்கு நடுநிலைமையுடன் செயல்பட்டவர் டாக்டர் யு. கிருஷ்ணா ராவ்.
இதைப்போன்றே, எஸ்.செல்லபாண்டியன், என்.கோபால மேனன் என பல முன்னாள் பேரவைத் தலைவர்கள் இந்தப் பேரவையை நடுநிலைமையுடன் நடத்தி, பேரவையின் கண்ணியத்தையும், புகழையும் நிலைநாட்டியுள்ளார்கள்.
சட்டமன்ற ஜனநாயகம் என்பது, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றை முழு அளவில் உறுதிப்படுத்தும் ஒரு சீரிய அமைப்பாகும். எனவே, சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
உண்மையை உரைப்பவர்களாகவும்; உரிமைக்கு குரல் கொடுப்பவர்களாகவும்; மாற்றாரை மதிக்கும் தன்மை கொண்டவர்களாகவும்; நியாயத்திற்கு தலை வணங்குகிறவர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
சட்டமன்ற ஜனநாயகம் வெற்றி பெற வேண்டுமானால், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகப் பண்புகளை எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்த ஒரு நெருக்கடியிலும் செம்மையாகக் கட்டிக்காக்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
ஜனநாயகம் தழைத்தோங்கும் வகையில் உறுப்பினர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஒரு வாதத்தை முன்னிறுத்தும் போதும்; குற்றச்சாட்டை எழுப்பும் போதும்; அதற்கு ஆளும் கட்சி சார்பிலே மறுப்பு தெரிவிக்கும் போதும்; விவாதத்தில் அனல் பறக்கும். அந்த சமயத்தில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சரும்; எதிர்க்கட்சிகளின் சார்பில் அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினர்களும் பதற்றத்தை தணிப்பதில் ஈடுபடுவார்கள். இது தேவைதான்.
அதே சமயத்தில், ஒரு செய்தியை, ஒரு நிகழ்வை வைத்துக் கொண்டு, மனம் போன போக்கில் பேசி, திட்டமிட்டு அவையில் அமளியை உருவாக்க நினைப்பது என்பதை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இதுபோன்ற தருணங்களில், உறுப்பினர்கள் உண்மையிலேயே தங்களுடைய கருத்தை எடுத்துரைத்து வாதாடுகிறார்களா; அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, குறை கூறி அமளியை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்களா என்பதை அறிந்து அதற்கேற்ப கண்டிப்புடன் செயல்பட வேண்டிய நிலையும் பேரவைத் தலைவராகிய உங்களுக்கு ஏற்படும்.
பேரவையின் விதிகளையும், மரபுகளையும், முன்னாள் பேரவைத் தலைவர்களின் நல்ல தீர்ப்புகளையும் கருத்தில் கொண்டு, இந்தப் பேரவையினை சட்டத்தின் அடிப்படையில் நடத்திச் செல்வதில் தாங்கள் அக்கறையும், ஆர்வத்தையும் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்லாமல் இங்குள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் இருக்கிறது. இந்தப் பேரவை உறுப்பினர்கள் அனைவரின் உரிமையையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உங்களிடத்திலே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
பேரவைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய தாங்கள் சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில், பின்தங்கிய பகுதியில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, முதுகலைப் பட்டம் பெற்றவர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த முதல் பேரவைத் தலைவர் தாங்கள்தான் என்பதிலும், முதன் முறையாக அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த தாங்கள் இந்தப் பேரவையின் தலைவராக பொறுப்பேற்றுள்ளீர்கள் என்பதிலும்; எனக்கு மிக்க மகிழ்ச்சி. வரலாற்று சிறப்புமிக்க இந்தச் சட்டமன்றத்தில் தாங்கள் வரலாறு படைத்திருக்கிறீர்கள்.
மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு எம்.ஜி.ஆரால் 1972-ல் துவக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1972ம் ஆண்டு முதலே தங்களை இணைத்துக் கொண்டு, அந்த இயக்கத்தின் கொள்கைகளுக்காக தாங்கள் சிறந்த முறையில் பாடுபட்டு இருக்கிறீர்கள். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை தாங்கள் வகித்து இருக்கிறீர்கள். பொதுமக்களோடு, குறிப்பாக ஏழை, எளிய மக்களோடு நெருக்கமான தொடர்பும், உறவும் கொண்டவராக தாங்கள் விளங்கியிருக்கிறீர்கள்.
1977 ஆம் ஆண்டிலிருந்து 1988ம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று முறை சங்ககிரி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாங்கள் அனைவரும் பாராட்டும் வண்ணம் திறம்பட பணியாற்றி இருக்கிறீர்கள். 2001ம் ஆண்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாங்கள், அமைச்சராகப் பொறுப்பேற்று ஆதி திராவிடர் நலன், உணவு மற்றும் கூட்டுறவு இலாகாக்களை திறம்பட நிர்வகித்து இருக்கிறீர்கள். தற்போது ஐந்தாவது முறையாக ராசிபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாங்கள் கடந்த 16 மாத காலமாக பேரவைத் துணைத் தலைவராக பணியாற்றி இருக்கிறீர்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், பேரவைத் துணைத் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் தங்களுக்கு உண்டு. அனைவரிடத்திலும் அன்புடன் பழகும் தன்மை; பொதுமக்களோடு நெருங்கிப் பழகும் விதம்; நீண்ட நாட்களாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அனுபவம்; அமைச்சராகவும், பேரவைத் துணைத் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் ஆகியவற்றின் காரணமாக தற்போது ஏற்றுள்ள பொறுப்பினை தாங்கள் திறம்பட வகிப்பீர்கள்; அதன் மூலம் அனைவரது பாராட்டினையும் பெறுவீர்கள் என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை.
மாட்சிமை மிகுந்த இந்தச் சட்டப் பேரவையின் பெருமையையும், புகழையும் நிலை நிறுத்துவதிலே தங்களுடைய அறிவும், அனுபவமும், ஆற்றலும் நிச்சயம் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கேற்ற அத்தனைத் திறனையும் தாங்கள் பெற்றிருக்கிறீர்கள்.
வீணையிலிருந்து சரியான இசை வரவேண்டும் என்றால், அதனுடைய தந்திகள், அதாவது வீணையின் நரம்புகள் இறுக்கமாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் நடுநிலைமையில் இருக்க வேண்டும். அதுபோல், இந்த அவை சீரோடும், சிறப்போடும் நடைபெற வேண்டுமென்றால் அதற்கு இன்றியமையாததாக விளங்குவது நடுநிலைமை.
அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த நடுநிலைமை தங்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ளதால், இந்த அவையை சீரோடும், சிறப்போடும் தாங்கள் நிச்சயம் நடத்துவீர்கள் என்ற எனது நம்பிக்கையினைத் தெரிவித்துக் கொண்டு, தங்களுடைய தலைமையின் கீழ் இந்தப் பேரவையின் கண்ணியம் மேலும் சிறப்புறும் என்று சொல்லி, அனைவரின் பாராட்டுதல்களுக்கும் உரியவரான தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக