வேலூர்: "வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல் நிலையை, சிறை வாசம் முற்றிலும்
மாற்றி விட்டது'
வேலூர்: "வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல் நிலையை, சிறை வாசம் முற்றிலும்
மாற்றி விட்டது' என, தி.மு.க.,வினர் கூறுகின்றனர். அவருக்கு உள்ள,
"எக்ஸிமா' - தோல் ஒவ்வாமை நோய், சிறையில் அவரை எட்டிக் கூட
பார்க்கவில்லையாம்.
சேலம், அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில், 2012 ஜூன், 4ம்
தேதி, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சென்னையில் கைது
செய்த போலீசார், வேலூர் சிறையில் அடைத்தனர். ஜூன், 18ம் தேதி, சேலம் மாநகர
போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை, சிறை
அதிகாரிகளிடம் வழங்கினர்.
129வது நாள்:
இன்றுடன், 129வது நாள் சிறை வாசத்தை அனுபவித்து வரும், வீரபாண்டி
ஆறுமுகம், முன்பை விட இப்போது ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும், உடல்
நிலையில், நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக சிறைத்துறையினர் கூறுகின்றனர்.
வீரபாண்டி ஆறுமுகத்துக்கு, சில ஆண்டுகளுக்கு முன், எக்ஸிமா எனும் தோல்
ஒவ்வாமை நோயின் தாக்கம் ஏற்பட்டது. இந்நோயின் தாக்குதலால், கடந்த
காலங்களில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு
சர்க்கரை நோய், பி.பி., இதய பிரச்னை இருந்தது. தனக்கு உள்ள நோய்கள்
குணமாகாத நிலையில், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், மருத்துவத்துறையில்
இருந்த போதும், எக்ஸிமா நோயில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை. அவர்
தங்கி இருக்கும் இடத்தில் சிறிய மாற்றம் செய்தாலும், இந்நோயின் தாக்கம்
அதிகரிப்பது தான் வழக்கம். ஆனால், இந்நோயின் தாக்கம் இருந்த நிலையில்,
வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட, அவரின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையை
எட்டி விடும் என, குடும்ப டாக்டர்கள் மத்தியிலேயே பயம் இருந்தது. ஆனால்,
இந்த பயம் எல்லாம் சிறையில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்துக்கு இல்லை. காரணம்,
வேலூர் சிறையில் அவருக்கு தேவையான சகல வசதிகளும் கிடைத்து வருகிறது.
சிறைவாசத்துக்கு முன், எதற்கெடுத்தாலும் எரிந்து விழுபவராகவும், எப்போதும்
டென்ஷனாக இருக்கும், வீரபாண்டி ஆறுமுகம், தற்போது உற்சாகத்துடனும், புன்
சிரிப்புடனும் காணப்படுகிறார்.
"வாக்கிங்':
போலீசார் அவரை பல்வேறு வழக்குகளில் கைது செய்த போதெல்லாம், யாராவது ஒருவர் உதவியுடன் தான் நடந்து செல்லும் நிலை இருந்தது. தற்போது, யார் தயவுமின்றி தினம் நடக்கிறார். வாக்கிங் செல்கிறார். கலகலப்பாக, சிரித்த முகத்துடன் உள்ளார். யார் மீதும் எரிந்து விழுவதில்லை. சர்க்கரை வியாதி கட்டுக்குள் உள்ளது. இதற்கு காரணம் என்ன? சிறை வாசம் அவரை மாற்றியதாக கூறினாலும், அங்கு அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும், சிறைத்துறை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது:
சிறைக்குள் வீரபாண்டி ஆறுமுகம் தினமும், 2 கி.மீ., வாக்கிங் போகிறார். பின் பேப்பர் படிக்கின்றார். காலை உணவு இட்லி; சிறிது நேரம் ஓய்வு. புத்தகங்கள் படிப்பது. மதியம் சாதம் சாப்பாடு; சிறிது நேரம் தூக்கம். மாலையில் மீண்டும் வாக்கிங். கொஞ்சம் கொண் டை கடலை சாப்பிடுகிறார்.
ஓய்வு:
இரவு சப்பாத்தி, சீக்கிரம் படுத்து தூங்குகிறார். சிறையில் உள்ள சூழ்நிலை, இயற்கை காற்று வேறு எங்கும் கிடைக்காது. முக்கிய, வி.வி.ஐ.பி.,க்கள், குடும்பத்தினரை தவிர வேறு யாரும் பார்க்க செல்வதில்லை என்பதால், நிம்மதியாக ஓய்வு எடுக்கிறார். எங்களை போன்ற அரசியல்வாதிகள் ஆண்டுக்கு ஒரு முறை ரிலாக்ஸ் செய்து கொள்ள, ஊட்டி, காஷ்மீர் என, சுற்றுலாத் தலங்களுக்கு, லட்சக்கணக்கில் பணம் செலவழித்து போவர். ஆனால், வீரபாண்டி ஆறுமுகம், பைசா செலவில்லாமல், அரசு செலவில் சிறையில் இருந்து ஓய்வெடுத்து, தன்னை ரீசார்ஜ் செய்து கொண்டு விட்டார். சிறையில், இயற்கையான காற்றை சுவாசிக்கின்றார். சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரியான நேரத்துக்கு தூக்கம். சிறைச்சாலை அவரது உடல் நிலையை முற்றிலும் மாற்றி விட்டது. இந்த மாற்றத்தின் எதிரொலியாக, இம்மாதம், 5ம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம், முன்பை விட இளமை வாய்ந்தவர் போல், தலையில் டை அடித்து, கரு கரு முடியுடன், கவலை இன்றி சந்தோஷமான நிலையில் காணப்பட்டார். அவருக்கு உள்ள தோல் ஒவ்வாமை நோய், சிறையில் அவரை எட்டிக் கூட பார்க்கவில்லை.
தலைமுடிக்கு "டை':
சிறைக்கு செல்பவர்கள் பொதுவாக, கவலை தோய்ந்த முகத்துடனும், தாடி, மீசை கூட எடுக்காத நிலையில் தான் இருப்பர். ஆனால், வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சிறையில் முகச் சவரம் செய்து கொள்ளவும், தலை முடிக்கு டை அடித்துக் கொள்வதற்கான வசதி அனைத்தையும் சிறைத்துறையினர் செய்து கொடுத்ததால், சிறையில் இருந்து மருத்துவமனைக்கு வந்த அவர், கரு கரு முடியுடன் காட்சி அளித்தார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அனைத்தும், "நார்மல்' என்ற நிலையில், அவர் முழு ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். கடந்த, 129 நாளில் அவரின் உடலில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறையில் வீரபாண்டி ஆறுமுகம் ஆரோக்கியமாக இருப்பதை, அவரது குடும்பத்தினர் நேரில் அவ்வப்போது பார்த்து வருகின்றனர். அவருக்கு எப்படியாவது ஜாமின் வாங்கி விட வேண்டும் என்பதற்காக, அவர் ஆரோக்கியம் இன்றி சிறையில் வாடுவதாக கூறுகின்றனர். இவ்வாறு தி.மு.க.,வினர் கூறினர்.
குண்டாஸ் தீர்ப்பு ஒத்திவைப்பு:
வீரபாண்டி ஆறுமுகத்தின் குண்டர் தடுப்பு சட்ட கைதை எதிர்த்து, இரண்டாவது மனைவி லீலாவதி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு, நேற்று முன்தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. மூன்று நாட்களுக்கும் மேல், போலீஸ் வழக்கறிஞர் ரஞ்சித்குமார் மேற்கொண்ட வாதத்துக்கு, நேற்று முன்தினம், "மாஜி'யின் வழக்கறிஞர்கள் பதில் அளித்து வாதிட்டனர். அதைத் தொடர்ந்து வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் பாட்ஷா, பால்வசந்தகுமார் ஆகியோர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக