வெள்ளி, 12 அக்டோபர், 2012

மாயாவதி கட்டிய நினைவிடங்களை வாடகைக்கு விட அகிலேஷ் முடிவு


உத்தர பிரதேசத்தில், முந்தைய மாயாவதி ஆட்சியின் போது, லக்னோ மற்றும் நொய்டா நகரங்களில் கட்டப்பட்ட, தலித் தலைவர்களுக்கான, பிரமாண்ட நினைவிடங்கள், பூங்காக்களில், காலியாக உள்ள இடங்களை, திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு, வாடகைக்கு விட, ஆளும் சமாஜ்வாதி அரசு முடிவு செய்துள்ளது.

உ.பி.,யில், கடந்த முறை, ஆட்சியிலிருந்த, முதல்வர் மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் அரசின் போது, 6,000 கோடி ரூபாய் செலவில், தலித் தலைவர்களுக்கு நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. தலைநகர் லக்னோ, முன்னணி வர்த்தக நகரம் நொய்டா போன்ற இடங்களில், அம்பேத்கார், கன்ஷிராம், மாயாவதி போன்றோருக்கு கட்டப்பட்ட, பிரமாண்ட நினைவிடங்கள் மற்றும் மாயாவதி பெயரில் நிறுவப்பட்ட இடங்களைப் பராமரிக்க, 5,634 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர், கன்ஷிராம் பிறந்த நாள், விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாறியதும், காட்சியும் மாறியது. முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்ததும், அதிரடி நடவடிக்கைகளைத் துவக்கினார். "தலித் தலைவர்களின் நினைவிடங்களில், காலியாக இருக்கும் பகுதியில், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் கட்டப்படும்' என்றார். இதற்கு, மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்தார். "நினைவிடங்களில் கை வைத்தால், நடப்பதே வேறு' என, எச்சரித்தார். எனினும், தன் முடிவில், அகிலேஷ் யாதவ் உறுதியாக உள்ளார். கன்ஷிராம் பிறந்த நாளில் அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறையை ரத்து செய்தார். லக்னோ மற்றும் நொய்டாவில் உள்ள நினைவிடங்களில், காலியாக உள்ள இடங்களில், பொருட்காட்சி, திருமணம், மத நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள அனுமதி வழங்குவது என, அகிலேஷ் அரசு இப்போது முடிவு செய்துள்ளது. "மிகவும் குறைந்த வாடகையில், இந்த இடங்களை, திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்க பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்' என, அகிலேஷ் அரசு, விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது. இதனால், கடும் கோபமடைந்துள்ள மாயாவதி, "தலித் மக்களின், புனித யாத்திரைத் தலங்களாக விளங்கும் இந்த இடங்களில், பொருட்காட்சி நடத்துவதா' என, கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமை, லக்னோவில் நடந்த, பகுஜன் சமாஜ் மாநாட்டில், அகிலேஷ் யாதவ் அரசை, "தலித் மக்களுக்கு எதிரான அரசு' என, வர்ணித்த மாயாவதி, அகிலேஷ் ஆட்சிக்கு வந்ததும், தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களைப் பட்டியலிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: