ஞாயிறு, 7 அக்டோபர், 2012

மகள் இறந்ததை அறியாத தாய்...:கத்தியால் கொல்லப்பட்ட ஸ்ருதி,

பேரூர்:கோவை அருகே, வீடு புகுந்து, கல்லூரி மாணவியை கத்தியால் குத்திக்கொன்று உடலுக்கு தீ வைத்த காதலன், தானும் தற்கொலை செய்து கொண்டான். இச்சம்பவம் குறித்த மேலும் பல அதிர்ச்சித் தகவல்களை, மாணவியின் தாயார், போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.கொல்லப்பட்ட
கோவை, காளப்பட்டி, பள்ளிவீதியைச்சேர்ந்தவர் அசீம், 22. கோவை நகரிலுள்ள ஜி.ஆர்.டி., கல்லூரியில் எம்.ஐ.பி., முதலாமாண்டு படித்து வந்தார். இவருடன், வடவள்ளி, வீரமாத்தியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த, சஜீவ்மேனன் மகள் ஸ்ருதி, 22, என்பவரும் படித்தார். இருவரும், இளங்கலை பட்டப்படிப்பில் படித்த போதிருந்தே காதலித்துள்ளனர். முதுகலையில் சேர்ந்தது முதலே, இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. ஸ்ருதி விலகிச்சென்றாலும், அசீம் தொடர்ந்து காதலித்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி மாலை, வடவள்ளியிலுள்ள ஸ்ருதியின் வீட்டுக்குச் சென்ற அசீம், அவரது தாயார் லதாவையும், ஸ்ருதியையும் கத்தியால் குத்திவிட்டு, தானும் தீ வைத்துக்கொண்டார்.

இக்கொடூர சம்பவத்தில் அசீம், ஸ்ருதி ஆகியோர் உயிரிழந்தனர். ஸ்ருதியின் தாயார் லதா, பலத்த கத்திக்குத்து காயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில், வடவள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து 12 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சொந்த ஊரான கேரளாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாக அவரிடம்,வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, லதா கூறியதாவது:
கடந்த மாதம் 22ம் தேதி, மாலை 4.15 < மணியளவில், எனது மொபைல் போனுக்கு "மிஸ்டுகால்' வந்தது. அது, அசீமின் மொபைல் போன் நம்பராக இருந்ததால், அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் அதே நம்பரில் அழைப்பு வந்தது; நான் பேசினேன். "நான்தான் ஆன்ட்டி அசீம் பேசுகிறேன்' என்றான். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே, கல்லூரியில் இருந்து எனது மகள், ஸ்கூட்டியில் வீட்டுக்கு வந்தாள். வண்டியில் "ஹார்ன்' அடித்தவாறே, வீட்டின் நுழைவாயில் கதவை திறந்தபடி நுழைந்தாள். அதுவரையும், அசீம் போன் இணைப்பில் இருந்தான். அசீம் பேசுவதாக ஸ்ருதியிடம் கூறினேன். அதற்கு ஸ்ருதி, ஏதோ சைகை செய்து, பின்னால் பார்க்குமாறு உணர்த்தினாள். அவளது பின்னால் பார்த்தபோது, வீட்டுக்குள் அசீமும் நுழைந்தான். எங்களுக்கு சற்றுதொலைவில், "போர்டிகோ' அருகே நின்ற அவன், "எனக்கு வேலை கிடைத்துவிட்டது; பெங்களூருவுக்குச் செல்கிறேன்' என்றான். "போய்வா' என்றேன். அப்போது அவன், கைப்பையில் வைத்திருந்த ஏதே பொருளை எடுத்து, என் முகத்தில் "ஸ்பிரே' செய்தான். நான் கண்மூடி திறப்பதற்குள்ளாக, கத்தியால், எனது வயிற்றில் குத்தினான். திடுக்கிட்ட நான், வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டேன். அப்படியும் அவன் விடவில்லை. மூர்க்கத்தனமாக எனது மார்பு, கழுத்து, இடுப்பு என மாறி, மாறி குத்தினான்.எனது அபயக்குரல்கேட்டு, வீட்டுக்குள் இருந்த ஸ்ருதி, அலறியபடியே வெளியே ஓடிவந்தாள். அவளையும், அந்த பாவி சரமாரியாக குத்தினான். அப்போது நான், கொஞ்சம், கொஞ்சமாக சுயநினைவை இழந்தபடி, "போர்டிகோ'வில் சரிந்தேன். கத்திக்குத்தால் உயிருக்கு போராடிய ஸ்ருதியை அவன், தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்றான். அதன்பிறகு, எல்லாம் முடிந்துவிட்டது. இவ்வாறு, லதா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

"மகள் இறந்ததை அறியாத தாய்...':கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட ஸ்ருதி, இறந்துவிட்டதை உறுதிப்படுத்திய பிறகே, உடலுக்கு காதலன் தீ வைத்தான் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைசெய்யப்பட்ட ஸ்ருதியின் உடலில் வயிறு, இடுப்பு, கழுத்து, மார்பு உள்ளிட்ட பல இடங்களில் கத்திக்குத்து காயம் இருந்துள்ளது. அவள் உயிரிழந்த பிறகு, உடலுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுஎன, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. காதலனின் உடலில், தீக்காயங்கள் தவிர வேறு எந்த காயமும் இல்லை. ஒருவேளை, உயிருக்குப்போராடும் நிலையில், ஸ்ருதியை யாரும் காப்பாற்றிவிடக்கூடாது என்ற கொடூர எண்ணத்தில்தான், உடலுக்கும் காதலன் தீவைத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். லதாவின் உடலில் 10க்கும் மேற்பட்ட கத்திக்குத்து இருந்தாலும், இதயப்பகுதி அருகே ஆழமாக கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சிகர தகவல் எதையும் அவருக்கு தெரிவிக்கக்கூடாதென டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால், மருத்துவரின் ஆலோசனைப்படி, வேறு ஒரு மருத்துவமனையில், மகள் ஸ்ருதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக லதாவிடம் தெரிவித்துள்ளோம். மீண்டும் அவரை, வடவள்ளி வீட்டுக்கு அழைத்துச்சென்றால், பழைய கொடூர நிகழ்வுகள் மீண்டும் நினைவுக்கு வரும் என்பதால், கேரளாவிலுள்ள அவரது சொந்த ஊரான கொல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: