வியாழன், 11 அக்டோபர், 2012

8.75 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும்-காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு


காவிரிநதிநீர்ஆணைய கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கடந்த மாதம் 19-ஆம்  தேதி நடைபெற்றது. அப்போது, தமிழகத்திற்கு செப்டம்பர் 20-ஆம்  தேதி முதல் அக்டோபர் 15-ஆம்  தேதி வரை தினமும் வினாடிக்கு 9000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் அதனை கருநாடக அரசு ஏற்க மறுத்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தின்  கண்டனத்தையடுத்து தண்ணீர் திறந்துவிட்டது. ஆனால் அதையும் 8-ஆம் தேதியுடன் நிறுத்திவிட்டது. இதனையடுத்து கர்நாடக அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.


இதற்கிடையே காவிரி பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மத்திய நீர்வளத்துறை செயலாளர் டி.வி.சிங் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு குழுவினர் கடந்த 4-ஆம்  தேதி முதல் 7-ஆம்  தேதி வரை தமிழகம் மற்றும் கருநாடக பகுதிகளில் ஆய்வு செய்தது. தண்ணீர் தேவை, பாசன பகுதிகள் மற்றும் அணைகளில் உள்ள நீர் இருப்பு ஆகியவற்றை கணக்கெடுத்த இக்குழுவினர் டெல்லி சென்றனர்.

இதையடுத்து டெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் டி.வி.சிங் தலைமையில் காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு, கருநாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், தமிழ் நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளின் நிலை கருநாடக அணைகளில் இருக்கும் தண்ணீர் ஆகியவை பற்றி நேரில் சேகரிக்கப்பட்ட ஆய்வறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டிய அவசியம் குறித்து தமிழக அதிகாரிகள் எடுத்துக் கூறினார்கள். ஆனால் தமிழகத்திற்கு  திறந்து விட வாய்ப்பில்லை என்று கருநாடக அதிகாரிகள் வாதிட்டனர்.

முடிவில், கருநாடக அரசு அக்டோபர் 15-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 8.75 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று குழுவின் தலைவர் டி.வி.சிங் அறிவித்தார். இதனை ஏற்க மறுத்து கருநாடக தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.

கருத்துகள் இல்லை: