ஞாயிறு, 6 நவம்பர், 2011

கலைஞர் டி.வி.இயக்குனர் சரத்குமார்: ரூ.200 கோடி கடன் பெற்றதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை

வங்கி மூலம் பணபரிமாற்றம் நடந்தது: ரூ.200 கோடி கடன் பெற்றதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; கலைஞர் டி.வி.இயக்குனர் சரத்குமார் ஜாமீன் மனுவில் தகவல்!

புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை விடுவிக்க சி.பி.ஐ. கோர்ட்டு மறுத்துவிட்டது. கனிமொழி எம்.பி. உள்பட யாருக்கும் சலுகை காட்ட இயலாது என்று சி.பி.ஐ. கோர்ட்டு உறுதிபட அறிவித்தது.
இதையடுத்து கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், மற்றும் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகிய 4 பேரும் மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் மனுவில் ஜாமீனில் விடுவிப்பதற்கு அவசியமான காரணத்தை கூறியுள்ளனர்.
சரத்குமார் தன் அப்பீல் மனுவில் கூறி இருப்பதாவது:-
கலைஞர் தொலைக்காட்சியில் நான் இயக்குனராக மட்டுமே இருக்கிறேன். நான் தலைமை செயல் அதிகாரியோ அல்லது நிர்வாக இயக்குனரோ கிடையாது.கலைஞர் தொலைக்காட்சியில் எனக்கு 20 சதவீத பங்குகளே உள்ளது. நான் கம்பெனி விவகார சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளதோ, அதன்படிதான் நடந்தேன். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இயக்குனர்கள் குழு நிறைவேற்றி தரும் தீர்மானங்களின் அடிப்படையில்தான் செயல்பட்டேன். மேலும் நிறுவன தணிக்கை அதிகாரி, தலைமை நிதி அதிகாரி ஆகியோரது ஆலோசனை பெற்றே செயல்பட்டேன். சட்டத்தை மீறி எதுவும் செய்யவில்லை.

கலைஞர் தொலைக்காட்சிக்காக பெறப்பட்ட 200 கோடி ரூபாய் கடன், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்துக்கும், கலைஞர் தொலைக்காட்சிக்காகவும் மிக நேர்மையாக நடந்த பண பரிமாற்றமாகும். அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இந்த கடன் பணபரிமாற்றம் வங்கி மூலம் தான் நடந்தது. இதில் நாங்கள் எதையும் மறைக்க முயற்சி செய்யவில்லை. அந்த கடன், வட்டியுடன் சேர்த்து திருப்பி கொடுக்கப்பட்டு விட்டது. இதற்கு உரிய ஆவணங்கள் உள்ளன. சி.பி.ஐ. விசாரணை செய்த போதே இந்த ஆவணங்கள் சேகரித்து வழங்கப்பட்டன. ஆதாரங்களை நாங்கள் அழித்து விட்டதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.

இந்த ரூ.200 கோடி கடன் பரிமாற்றத்தால் நான் எந்த லாபமும் அடையவில்லை. இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஆ.ராசாவுக்கும், எனக்கும் பலமான தொடர்பு இருப்பதாக கூறுவது தவறு. அப்படி ஒரு கருத்து தவறாக கூறப்பட்டுள்ளது. இது திசை திருப்பும் செயல்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, நான் ஒரு அப்பாவி, கூட்டுச் சதியில் எனக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. தொலைக்காட்சிகளின் பாரபட்சமான தகவல்கள் காரணமாக என்னையும் இந்த வழக்கில் தவறுதலாக சேர்த்து விட்டனர். எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த அப்பீல் மனுவில் சரத்குமார் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: