அழிவிற் சிறந்தது – அப்துல் கலாம் கட்டுரைகளை முன்வைத்து
அப்துல் கலாம் கூடன்குளம் விவகாரத்தில் நுழைந்து புதுக் குமிழிகளை உருவாக்கியிருக்கிறார். அணு உலைக்கு எதிரான போராட்டத்தை சாதூர்யமாக சமாளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, அப்துல் கலாம் அரசால் இறக்கப் பட்டிருக்கிறார் என்பதில் ஐயம் கொள்ள எதுவும் இல்லை. சில வாரங்கள் முன்பு ‘கூடன்குளம் அணுமின் நிலையப் பிரச்சினையில் அப்துல் கலாமின் ஆலோசனை பெறப்படும்’ என்று மத்திய அமைச்சர் சொன்னார். அரசுக்கு கலாமின் ஆலோசனை எதுவும் (குறைந்த பட்சம் புதிதாக) இப்போது தேவையில்லை; இங்கே ஆலோசனை என்பதன் அர்த்தம், அவர் கருத்து சொல்லி, அது பரவாலான மக்கள் மற்றும் ஊடக கவனம் பெறுவது; அவர் என்ன கருத்து சொல்வார் என்பது அணு உலை ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி, கலாமிற்கு பிடித்த குழந்தைகளுக்கும்கூட தெரியும்.
ஆகையால் கலாம் கூடன்குளம் சென்று, ‘ஆய்வு செய்து’, கருத்து சொல்வது என்பது விவாதத்திற்காகவோ, நம் அறிவுப்பரிசீலனைக்காக உதிர்க்கப்படுவதோ அல்ல. ஒரு பிரபலமாக, முன்னாள் குடியரசு தலைவராக அவர் கருத்து சொல்கிறார்; அக்கருத்து அரசியல் காரணங்களால் முன்வைக்கப்பட்டது; இன்று ஒரு நிறுவப்பட்ட உண்மையாக மாறிவிட்டது. பொதுமக்கள் எல்லார் மனங்களிலும் படிந்துவிட்ட பிம்பமான, ‘இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி‘யின் கூற்றாக, அவர் கருத்து அரசாலும் ஊடகங்களாலும் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகிறது. அணு அறிவியல் மற்றும் அணுவியல் சார்ந்த தொழில்நுட்ப அறிவு கொண்ட, விண்கலப் பொறியியலாளரான கலாம் என்பவர், வேறு பல காரணங்களால் அடையும் அதிகாரத்தின் அங்கீகாரத்துடன், அணு உலைக்கு ஆதரவான பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்க கருத்து சொல்கிறார்.
கலாம் அணு விஞ்ஞானியா இல்லையா என்பது, அணு மின்சாரம் சார்ந்த ஒரு விவாதத்தில் ஒரு முக்கிய பிரச்சினை அல்ல; கூடன்குளம் அணு உலைக்கு அவர் அளிக்கும் சான்றிதழ், அவர் அணு விஞ்ஞானி என்று சொல்லப்பட்டு, அந்த அதிகாரத்தின் பாற்பட்டு முன்வைக்கப்படுகிறது. அவரின் கருத்துக்கள் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டதாகவும் ஆக்கப்படுகிறது. அவர் அளித்த உத்தரவாதத்தையும் மீறி, எதிர்ப்பாளர்கள் பிடிவாதம் பிடிப்பது அறிவுக்கும் நாட்டிற்கும் எதிரானதாகப் பரப்புரை செய்யப்படுகிறது.
அணு உலை, அணு மின்சாரம் குறித்து ஓரளவு அறிதல் உள்ள எவரும் கருத்து சொல்லி, அது விவாதப் பொருள் ஆகலாம். ஆனால் இங்கே எதிர் கருத்துக்களை விவாதமின்றி முறியடிக்க, அவரை தலை சிறந்த விஞ்ஞானியாக விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு முன்வைப்பதுதான் பிரச்சினை. அரசியல் நிலைப்பாடு சார்ந்த கோஷங்களால், கலாமை அவதூறு செய்து, அணு மின்சாரம் சார்ந்த அவரது வாதங்களை நிராகரிப்பது அபத்தம் என்றால், அதைவிட அபத்தம் அவரது செலிபிரிடி நிலையை முன்வைத்து, எல்லாம் அறிந்த விஞ்ஞானியின் கூற்றாக அவர் சொல்வதைப் பரப்புவது.
இந்த காரணங்களால், கலாம் ஓர் அணு விஞ்ஞானி என்கிற ‘உண்மையை’ மறுதலிக்க வேண்டியுள்ளது. ஒரு பொறியியலாளராக தொடங்கி, பல்வேறு அனுபவங்கள் மூலம் அவர் பெற்றிருக்கக் கூடிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிவை பற்றி சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால் கலாம் எந்த விதத்திலும் ஒரு அணு விஞ்ஞானி இல்லை என்பது மட்டுமின்றி, ஏதேனும் ஒரு வகையில் நேரடியான பங்களிப்பை அறிவியலுக்கு செய்வது என்ற வகையில், ஒரு விஞ்ஞானி என்று கூட அவரை அழைக்க முடியாது. நான் அறிந்தவரை, ஆக்கபூர்வம் அழிவுபூர்வம் என்கிற எந்த நோக்கில் பார்த்தாலும், எந்த ஒரு தனித்துவமான அறிவியல் பங்களிப்பையும் அவர் செய்யவில்லை. இதற்கு மாறான தகவலை யார் எங்கிருந்து தந்தாலும் பரிசீலித்து கருத்தை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறேன். கலாமை பற்றிய பொய்யான தகவலைச் சொல்லி, அதன் மூலம் குறிப்பிட்ட கருத்து தரப்பிற்கு பலம் சேர்க்க முயல்வதாலும், அவரை ஒரு அணு விஞ்ஞானியாக அணுமின்நிலைய ஆதரவாளர்கள் மட்டுமின்றி, எதிர்ப்பாளர்களும் பார்ப்பதாலும் மட்டுமே இதைச் சொல்ல வேண்டியுள்ளது.
தமிழ் மக்களை ஓர் அணு உலை விபத்திற்குப் பலிகடாவாக்குவதுதான் இந்திய மையஅரசின் அடிப்படை நோக்கம் என்று சொல்வது எவ்வளவு ஆதாரமற்ற அவதூறோ, அதைப் போலவே கூடன்குளம் உலையை எதிர்ப்பது அன்னிய நாட்டுச் சதி என்பதும், மதரீதியான உள்நோக்கங்கள் கற்பிப்பதும். அவை ஆதாரமற்ற அவதூறுகள். பிரச்சினையைத் தீர்க்காமல் இழுத்துக்கொண்டு போவதுதான் நோக்கம் என்றால், தாரளமாக இந்த இரு எதிர் எதிர்த் திசைகளில் கருத்துக்களை உதிர்த்துக் கொண்டிருக்கலாம். இருபது ஆண்டுகளாக இருக்கும் ஒரு எதிர்ப்பை பற்றிப் பேச தொடங்கும் ஒவ்வொரு முறையும், ஊடகங்கள் திடீரென கிளம்பிய எதிர்ப்பாக இதை வர்ணித்துவிட்டுத் துவங்குவதைக் காணலாம்.
அணு உலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வாதங்கள், பதில்கள் பல்லாண்டுகளாக ஏராளமாக எழுதிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. கலாமின் கட்டுரை புதிய வெளிச்சம் எதையும் தரவில்லை.
ஏற்கனவே ஒப்புக்கொண்டது போல், இந்திய அரசாங்கம் தமிழ் மக்களை பலியிடும் திட்டத்துடன் நிச்சயமாக கூடன்குளத் திட்டத்தைத் தொடங்கவில்லை. ஆகையால் அணு உலைக்கான பாதுகாப்பு என்கிற வகையில் என்னவெல்லாம் இன்றைய நிலையில் சாத்தியமாகுமோ, அவையனைத்தும் கொண்டதாக கூடன்குளம் அணு உலை இருக்கும் என்று அரசாங்கம் சொல்வதையே நேரடியாக நம்பலாம். அதை தாண்டி கலாம் ஆய்வு செய்து சொல்ல என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை. பொறுப்பில் உள்ளவர்களிடம் விளக்கம் கேட்டு பெறுவதைத் தவிர, ஒரு நாளில் கூடன்குள அணு உலையில் என்ன ஆய்வை அவர் செய்திருக்க முடியும் என்பதும் புரியவில்லை. கலாமின் ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டு கட்டுரைகளும் ஓர் ஆய்வுக் கட்டுரையின் எந்தப் பண்பையும் கொண்டது அல்ல; மாறாக முழுக்க பிரசார தொனியில் ஏற்கெனவே சொல்லப்பட்ட தகவல்களை அளிப்பது மட்டுமே. புதிது என்று தோன்றக்கூடிய, தோரியத்தை முன்வைத்து அவர் சொன்ன தகவல்களும் ஏற்கெனவே என்டிடிவி வரை வெளிவந்த செய்திகள்தான்.
கலாமின் கட்டுரையில் தரப்படும் உலையின் பாதுகாப்பு சார்ந்த தகவல்களை யாவும் உண்மை என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம். வேறு ஒரு அணு உலை தொழில் நுட்ப நிபுணர் அதில் கருத்து வேறுபாடும், ஐயங்களும், பிரச்சினைகளும் கொள்ள இயலலாம். ஆனால் அரசாங்கத்தின் கையாளாக கலாம் திட்டமிட்ட பொய்யை சொல்வதாக நினைப்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் இந்த ஏற்பாடுகள் எல்லாம், விபத்து நேரவே நேராது, விபத்திற்கான நிகழ்தகவு பூஜ்யம் என்ற உத்தரவாதத்தை அளிக்காது என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றுவரை மனித சமுதாயம் படைத்த எந்த தொழில்நுட்பமும், மனிதப் பிழை மற்றும் இயந்திரக் கோளாறு சார்ந்து, தவறு என்று எதுவுமே நடக்காமல் ஒரு விதிவிலக்காக இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்கிற அடிப்படை விதியை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். துல்லியம் என்பது கணித அறிவியல் விதிகளின்படியே முழுதும் கறாரான ஒரு சாத்தியமில்லை. எல்லா சோதனைகளும், கணித்தல்களும் பிழை அளவுகட்கு உட்பட்டவைதான். இந்தப் பிழையின் இடைவெளியை மேலும் மேலும் குறைத்துக் கொண்டே செல்ல இயலுமே ஒழிய, பிழையே இல்லாமல் சோதனைகளும், அறிவியல் செயல்பாடுகளும் சாத்தியமில்லை.
அந்த வகையில் அணு உலையிலும், மனிதர்கள் இழைக்கும் தவறுகளும், இயந்திரங்கள் குறித்த கணித்தல்களில் நிகழும் எதிர்பாராத தவறுகளும் முற்றிலுமாக தவிர்க்க கூடியது அல்ல; முன்னேறிய நாடுகளிலேயே இது சாத்தியமில்லை என்பதைத்தான் அமேரிக்க, ரஷ்ய, ஜப்பானிய விபத்துக்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. அணு உலையில் பலவேறு தளங்களில் நடக்கும் செயல்பாடுகள் சிக்கலானாவை. அதில் எதிரே பார்க்காத ஒரு கோணத்தில் பிரச்சினைகள் நிச்சயமாக ஏற்படலாம்; எந்த நிலையிலும், எந்தச் சிக்கலும், என்றுமே உருவாகாது என்று சொல்ல இங்கு யாரும் கடவுள் அல்ல.
இன்று பிரச்சினையுள்ளதாக கருதப்படும் ஃபுகுஷிமா உலையை, சென்ற வருட சுனாமிக்கு முன்பு யாரும் பிரச்சினை இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதவில்லை. அவர்கள் முற்றிலும் எதிர்பாராத வகையில், அவர்கள் செய்த மூன்று பாதுகாப்பு ஏற்பாடுகளும், உலையின் செயல்பாடு நின்றபின் குளிரூட்ட இயலாமல் வெடித்தது. நம்மூர் கூடன்குளத்தில் ஃபுக்குஷிமா விபத்தின் அதே சாத்தியம் இல்லை என்று உத்தரவாதம் அளிப்பதால், விபத்திற்கான எதிர்பாராத வேறு சாத்தியங்கள் இல்லை என்று நம்புவதற்கு அறிவியல்ரீதியான எந்த அடிப்படையும் இல்லை. அவ்வாறு நம்புவது அறிவியல் மனம் அல்ல; அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மமதை மட்டுமே.
ஒரே ஒரு உயிரை காக்க ஜப்பானிய அதிகார வர்க்கம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளும், பொதுவாகவே பாதுகாப்பு சார்ந்து, ஜப்பானியர்கள் அதீத obsessionடன் எடுக்கும் முன்னேற்பாடுகளையும் கணக்கில் கொண்டு, ஃபுகுஷிமா விஷயத்தில் நடந்த தவறைப் புரிந்து கொள்ளவேண்டும். எல்லாவித பிரச்சினைகளையும் எதிர்பார்த்து செய்திருந்த அதீத பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தாண்டி, கண்களைக் கட்டி விட்டிருக்கிறது இயற்கை. பொது மக்களின் உயிர்கள் குறித்து நம் அரசின், அதிகார வர்க்கத்தின் அதீத உதாசீனங்களுக்கு விளக்கமும் ஆதாரமும் காட்டத் தேவையில்லை. உதாசீனமும் ஊழலும், இன்னும் பல சீர்கேடுகளும், நெருக்கடியான தருணத்தில் நம் பொதுமக்களின் பொறுப்பற்றதன்மை எல்லாம் கலந்து, எந்த வித அழிவிற்கும் நம்மை இட்டுச் செல்லுக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
‘விபத்து நடந்த காரணத்தால் நாமெல்லாம் விமான பயணம் போவதில்லையா’ என்கிற அபத்த உதாரணத்தை கலாமும் கேட்பது எரிச்சலூட்டினாலும், அதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை. விமான விபத்துக்களையும், அணு உலை விபத்துக்களையும் இணையாக வைத்து ஒப்பிட்டு பேசுவது ஒரு அறிவுள்ளவாதமா என்கிற சுய சந்தேகம் கிஞ்சித்தும் இல்லாமல், ரொம்ப கூலாக எல்லா அறிவாளிகளும் இப்படித்தான் கேட்கிறார்கள். ஒரு அணு உலை விபத்திற்கும், விமான விபத்திற்கும் – விபத்தின் பாதிப்பு, அளவு (magnitude) சார்ந்த பரிமாணங்கள், தொடரப்போகும் பின் விளைவுகள் என்ற – வித்தியாசங்களை பற்றிய கேள்விகளையும் புரிதல்களையும், அவரவர் மனவிவாதத்திற்கு விட்டுவிட்டு, நேரெதிராக இந்த வாதத்தை எதிர்கொள்வோம்.
‘நூறு விழுக்காடு பாதுகாப்பு ஏற்பாடு’ என்று சொல்லப்படுவதுடன்தான், விபத்து நடந்த எல்லா விமானங்களும், விபத்து நடப்பதற்குமுன் பறக்கத் தொடங்கின; மீறி தவறுகள் நடக்கின்றன. விமானத்தில் போகிறவர்கள், விபத்து நடப்பதற்கான சிறிய சாத்தியம் இருப்பதை நன்றாக உணர்ந்து, தெளிவாக முன்னமே அறிந்து, தங்கள் தேர்வாகப் பயணம் செய்கிறார்கள். மாறாக கூடன்குளம் விவகாரத்தில் விபத்து நடக்கவே நடக்காது, அதற்கான சாத்தியம் பூஜ்யம், நூறு சதவிகித பாதுகாப்பு என்று பொய் சொல்லி அணு உலையை இயக்கப் போகிறார்கள்; கூடன்குள அணு மின் உற்பத்திக்கான தேர்வை அரசும், அதிகார வர்க்கமும் முடிவு செய்து, நம் எலீட் சமூகம் அதற்கு ஆதரவாக பேசி பிரசாரம் செய்து, அதே எலீட் சமூகம் அதன் பயனை மிகுதியாக துய்க்கப் போகிறது. அபாயம் அதை தேர்வு செய்யாத, அதை எதிர்க்கும் மக்களுக்கு மட்டும்.
கலாம் தனது கட்டுரையில் விசித்திரமான ஒரு பாயிண்டை சொல்கிறார். ‘Many accidents followed, and even today air accidents kill more than 1,500 people every year’ என்கிற தகவலை தந்துவிட்டு அதனால் பறப்பதை நாம் விட்டுவிட்டோமா என வினவுகிறார். நல்ல உதாரணம்; இன்றய நமது முன்னேறிய நிலையில் கூட நம்மால் ஆண்டிற்கு 1500பேர் விமான விபத்துக்களில் சாவதை தடுக்க முடியவில்லை. ஆனாலும் பறக்கிறோம். அதே போன்ற வாதத்தைதானே மக்களிடம் கூடன்குள விவகாரத்திலும் முன்வைக்க வேண்டும்?
‘நாங்கள் எங்களால் முடிந்த எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். அதையும் மீறி ஏதேனும் நடக்க சிறு வாய்ப்பு உண்டு; விபத்து நடக்க சில வாய்ப்புகள் உள்ளதால் மட்டும் மின்சார உற்பத்தியை எங்களால் நிறுத்த முடியாது’ என்று நேரடி யதார்த்தமான கூற்றை மக்கள் முன்வைத்திருக்க வேண்டும். பல லட்சம் தடவைகள் பயன்படுத்தி பயன்பாட்டில் நாம் மிகவும் முதிர்ந்த பின்னும் விமான விபத்துக்கள் இன்றும் நடக்க்கிறது; ஒப்பீட்டளவில் பயன்பாட்டில் இன்னமும் முதிரா நிலையில் இருக்கும் அணு மின்னுற்பத்தியின் போது என்னவகை விபத்து நடக்கக்கூடும் என்பதையும் மக்களுக்கு முன்னமே சொல்லி, நடந்தால் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்வதுதானே நியாயம். அதற்குப் பிறகும், கூடன்குளம் மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக, அந்த ஒருவேளை நடக்க சாத்தியக்குறைவுள்ள ஆனால் சாத்தியமுள்ள ஆபத்தை எதிர்கொள்ளத் தயராக இருக்கிறார்கள் என்றால் அது வேறு விஷயம். நூறு விழுக்காடு பாதுகாப்பு உள்ளதாக கூறி, விபத்து நடக்க சாத்தியம் இல்லவே இல்லை என்று மறுப்பது ஏமாற்று வேலையல்லவா?
அணு உலையின் பலனான மின்சாரத்தையும், முன்னேற்றத்தையும், வேறு ஒரு மேல்தட்டு சமூகம் நுகர, பாதிக்க சாத்தியமுள்ள மக்களை ‘நாமல்ல நாடுதான் நம்மைவிட முக்கியம்’ என்கிற அரிய கருத்தை சொல்லி ஏமாற்ற முனைவது என்னவகை நேர்மை? பேரணைகள் எழுப்பும்போதும், கனிமங்களுக்காக மக்கள் நிலத்தை பிடுங்கும்போது சொல்லப்படும் அதே நேர்மையற்ற ‘நாமல்ல நாடுதான் நம்மைவிட முக்கியம்’ வாதம்தானே இது.
ஃபுகுஷிமாவில் பொருட்சேதம் ஏற்பட்டாலும் உயிர்சேதம் ஏற்படவில்லை என்று ஒரு வாதத்தை கலாம் முன்வைக்கிறார். நியாயமாக அவர் செய்திருக்க வேண்டியது, ஜப்பானில் நடந்த அதே விபத்து அப்படியே இங்கே நடந்திருந்தால், என்னவகை பாதிப்பு நடந்திருக்கும் என்று நம் சூழலில் கற்பனையில் நிகழ்த்தி ஒப்பிட்டு பார்ப்பதுதான். குஜராத்தில் நடந்த பூகம்பத்தில் லட்சக்கணக்கில் உயிர்சேதம் நடந்தது. அதைவிட வலிமை வாய்ந்த பல பல ஜப்பானிய பூகம்பங்களில் வெறும் 25 பேர் கூட பலியாகவில்லை. ஒரு பேரழிவின் போதும் ஜப்பானியர் காட்டும் பொறுப்புணர்ச்சி, ஒழுக்கம், கட்டுப்பாடு, அரசாங்கத்தின் அதி தீவிர துரித நடவடிக்கை, இவை எல்லாவற்றையும் நாம் நம் சூழலுடன் ஒப்பிட்டே பார்க்கமுடியாது. பத்து லட்சம் மக்கள், கூடன்குள அணு உலையிலிருந்து, 30 கிமீ ஆரத்தில் வசிப்பதாக சொல்கிறார்கள்; இது சரியென்றால், நம் ஊரில் விபத்து நிகழ்ந்தால் ஏற்படும் உயிர் சேதத்தைக் கற்பனையே செய்து பார்க்கமுடியாது.
அணு உலை எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் இன்னொரு முக்கிய வாதம் – ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நிகழக்கூடிய சாத்தியத்தின் அச்சுறுத்தல். ஏனோ கலாம் இந்த பிரச்சினையை சுத்தமாகக் கண்டு கொள்ளவேயில்லை. ஒரு பயங்கரவாதத் தாக்குதல் மூலமோ, வேறு வகை சதிகளின் மூலமோ அணு உலைக்கு எந்தத் தீங்கும் யாராலும் நிகழ்த்த முடியாது என்று எந்த உத்தரவாதமும் அவர் தரவில்லை. (பயங்கரவாதத் தாக்குதல் நடக்கவே நடக்காது என்று உத்தரவாதம் தருவது நோய்க்கூறு கொண்ட நகைச்சுவையாக இருக்கும்.)
தொடர்ந்து அரசு மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு, எல்லாவகை தடுப்புகளையும் மீறி அணு உலையில் இருந்து வெளிப்படப்போகும் (ஆபத்தில்லை என்று கருதப்படும்) கதிர்வீச்சின் அளவு குறித்து அரசு உண்மை தகவல்களை முன்வைப்பதில்லை என்பது. கலாம், பொத்தாம் பொதுவாக இதுவரையான அரசு அறிக்கையைப் போலவே, பாதுக்காப்பான கதிர்வீச்சே ஊருக்குள் கலக்கிறது என்கிறாரே தவிர, குற்றச்சாட்டுகளுக்கு நேரடி பதிலாக எதுவும் சொல்லவில்லை.
நடைமுறையில் மக்களை அன்றாடம் பாதிக்கப் போவதாக சொல்லப்படும் பல பிரச்சினைகளை, மிகைப்படுத்தப்பட்ட பயம் என்று எளிதாக கலாம் புறம் தள்ளுகிறார். அணு நிலையத்தில் வேலை பார்ப்பவர்கள், அணு உலை உள்ள ஊரில் வசிப்பவர்கள் பலவிதப் புற்றுநோய்களால் பாதிக்கபடுவதாகப் பல புள்ளி விவரங்கள் வந்துள்ளன. நான் நேரடியாக இந்தப் புள்ளி விவரங்களைச் சேகரிப்பதிலும், சரிபார்ப்பதிலும் ஈடுபட்டவன் அல்லன். ஆனால் அவை அத்தனையும் மிகை என்று ஒரு வாக்கியமாக கலாம் சொல்வதைமட்டும் வைத்து நம்பவது சாத்தியமில்லை. இது குறித்து செய்திகளை முதலில் கேள்விப்பட்டு, சரி பார்த்து, பின் தகவல்ரீதியான எதிர் பதிலை கைவசம் வைத்து கொண்டுதான் சொல்கிறாரா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இது பற்றிய செய்திகள் பரப்பப்பட்ட பொய் என்றால், பொய் என்று நிறுவி, பொய்த் தகவல்களை தேசத்தின் முக்கியப் பிரச்சினைகளின்போது பரப்பியதற்கு, அதைப் பரப்பியவர்களின்மீது நடவடிக்கை எடுத்தால் நாமும் கலாமின் கட்டுரையை நம்புவது பற்றி யோசிக்கலாம். உதாரணமாக இங்கேயும், இங்கேயும் தரப்பட்டுள்ள தகவல்களுக்கு எதிரான ஆறுதல்களை கலாமின் கட்டுரையில் காண முடியவில்லை.
விபத்து என்பது சாத்தியக்கூறு மட்டும் உள்ள, தடுக்க எல்லா முயற்சிகளும் செய்யகூடிய ஒன்று. விஞ்ஞானத் தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு ஆதரவான எல்லா வாதங்களையும், விபத்து நிகழ்வதை முன்வைத்துச் சொல்லப்படும் வாதத்திற்கு எதிராக முன்வைக்கலாம். நிதர்சனமான பிரச்சினை அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவது; அதாவது பாதுகாப்பது.
கலாம் அது குறித்தும் புதிதாக எதுவும் சொல்லவில்லை. ஒரு கால்பந்து மைதானம் அளவிற்கான இடத்தில் வைத்து நூறு ஆண்டுகாலம் பாதுகாக்கலாம் என்கிறார். சரி, அதற்குப் பிறகு? சில லட்சம் வருடங்களை half-life காலமாகக் கொண்டவற்றை, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு என்ன செய்வதாக உத்தேசம்? அதனுடைய கதீர்விச்சு சில நூறு வருடங்களில் மங்கி, பாதுகாப்பான அளவிற்குள் வந்துவிடும் என்பது ஒரு வசதியான கணிப்பு மட்டுமே. நூறு வருடங்களுக்கு பிறகும் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கொண்டதாகவே எதிர்கால சந்ததியினருக்கு அது இருக்கும்.
இப்போதய நமது மின்தேவை, முன்னிலிருந்து பன்மடங்கு பெருகி, அணு மின்சாரம் இல்லாமல் ஆகாது என்கிற நிலையில் உள்ளது. அது exponentialஆக வளர்ந்து, இன்னும் பல பல பெருமடங்குளாகவே எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அப்துல் கலாம் வேறு நாம் 2030இல் நிச்சயம் வளர்ந்த நாடாகிவிடுவோம் என்கிறார். அதற்கு ஏற்ப இன்னும் மின் தேவை எத்தனை மடங்கு பெருகும் என்பதையும் அவரே சொல்கிறார். அதற்கு இன்னும் எவ்வளவு உலைகள் வேண்டுமோ? மேலும் மேலும் அப்புறப்படுத்த வழியில்லாத, தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில், சேர்மானம் ஆகிக்கொண்டே இருக்க போகும் அணுக் கழிவை பற்றி எந்த பொறுப்புமே இல்லாமல் சாதாரணமாக ஒரு இடத்தில் வைத்து சமாளிக்கலாம் என்கிறார். பத்ரியாவது, பிரச்சினைதான், ஆனால் எதிர்காலத்தில் சமாளித்துவிடலாம் என்று தன் அறிவியல் மனம் நம்புவதாக மட்டும் சொன்னார்.
நம் நுகர்வு கலாசாரம் உற்பத்தி செய்யும் ப்ளாஸ்டிக்கை சாமாளிப்பதற்கே, உருப்படியான எந்த நடைமுறை உத்தியும், உலகம் முழுக்க எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை. நாம் வாழும் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விடுவோம். காட்டையும், கடலையும் பிளாஸ்டிக் கழிவுகள் அழித்து வருகின்றன. கடலில் சேரும் கழிவுகளில் பெரும் விழுக்காடு ப்ளாஸ்டிக் கழிவுகள். பல கடல்வாழ் உயிரினங்களின் அழிவுகளுக்கு இந்த பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக உள்ளன. சில திமிங்கல இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. பிபிசி இது குறித்து வெளியிட்டுள்ள ஆவணப் படங்களைப் பார்த்தால் எவ்வளவு அற்புத உலகை நாம் அயோக்கியத்தனமாக அழித்து வருகிறோம் என்று அறியலாம்,
இந்த யதார்த்தத்தில் அணுக் கழிவுகளை பிரச்சினையின்றி சமாளிப்போம் என்று அறிஞர்கள் சொல்வது அத்தனையும், நம்மை ஏமாற்றும் வேலை மட்டுமின்றி அவர்களையே ஏமாற்றிக் கொள்ளும் வேலை. அவர்களில் பலருடைய அறிவியல் மனமே எதிர்காலத்தில் அணுக்கழிவுகளை சந்திர மண்டலத்தில் கொண்டுபோய் போடலாமா என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறது. மறு சுழற்சி என்பது ப்ளாஸ்டிக் விஷயத்தில் பயனாளிகளுக்கு மனச்சமாதானத்தை தந்து, குற்றவுணர்வு நீக்கும் ஒரு பொய் நாடகம்; ஏனெனில் செய்யப்படும் அற்ப மறு சுழற்சிகள், தொடர்ந்து பெருமளவில் ப்ளாஸ்டிக் உற்பத்தியாகும் சூழலைத் தடுக்கவில்லை. மாறாக இது மறுசுழற்சியாகிறது என்று, அதைப் பயன்படுத்துபவரின் குற்றவுணர்வை மட்டுமே நீக்குகிறது. அணுக்கழிவுகள் விஷயத்திலும் மறு சுழற்சி என்பது வாதத்திற்காகவும் மனச்சமாதானத்திற்காகவும் சொல்லப்படுவதே. கழிவுகள் மேலும் மேலும் சேர்வதையும், அதை பாதுகாக்கும் பிரச்சினையும் இதனால் தவிர்க்கப்பட போவதில்லை. இந்த அணுக்கழிவுகளை சமாளிப்பது, என்றென்றைக்கும் நம் எதிர்கால சந்ததியினருக்கு – ஒருவேளை அவர்கள் எல்லா வகை எதிர்கால அழிவுகளையும் தாண்டி பிழைத்திருந்தால்-அணு மின்சார உற்பத்தியை நிறுத்திய பின்பும்- பெரும் பிரச்சினையாக இருக்கும். அதாவது முந்தய தலைமுறை அனுபவித்துவிட்ட பயனின் பாவத்திற்காக, அடுத்த தலைமுறை பெரும் செலவுகளையும், பெரும் அர்பணிப்புகளையும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
இது தவிர ஒவ்வொரு நிலையிலும் அணு கழிவுகளை பாதுகாக்கும்போது கையாள்வதிலும், இடமாற்றம் செய்யும் போக்குவரத்திலும் எந்த பிரச்சினையும் நேரவே நேராது என்பதற்கும் உத்தரவாதமில்லை. கலாம் சொல்வதுபோல் அணு மின்சாரம்தான் நம் எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படை என்றானபின், பெருமளவில் சேர்ந்துகொண்டே இருக்கப்போகும் கழிவுகளைத் தொடர்ந்து கையாண்டுகொண்டே இருக்க வேண்டும். மருத்துக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், சுற்று சூழல் கேடு எதைப் பற்றியும் – தன் வீட்டிற்கு வெளியே – எந்த தளத்திலும் பிரக்ஞை இல்லாத நம் நடுத்தர வர்க்கமும், எலீட் மக்களும் இருக்கையில், பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் நிச்சயம் இல்லை.
அப்துல் கலாம் தொழில்நுட்பத்தின் மூலம் சமூகம் அடையக்கூடிய வளர்ச்சிப் பாதையில் அசையா நம்பிக்கை உடையவர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிரான மனம் என்று ஒன்று இருக்கமுடியாது. எல்லா வகை பழைமைவாதிகளும்கூட தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் தங்கள் சுதந்திரத்தை மேம்படுத்திக் கொள்வார்கள். எத்தனையோ விதங்களில் கடந்த ஒரு நூற்றாண்டு தொழில்நுட்பம் நம்மை விடுதலை செய்திதிருக்கிறது. ஆனால் சுயவிமர்சனம் இல்லாத எல்லா வகை பற்றுக்களைப் போலவே தொழில்நுட்ப வெறியும் புதிய நெருக்கடிகளுக்கே இட்டுச் செல்லும்.
ஒருமுறை கேள்விக்கு பதில் சொல்லும்போது, பிருத்வி ஏவுகணை வானில் எழுந்ததையே தன் வாழ்வின் மகத்தான தருணமாக அப்துல் கலாம் சொல்கிறார். எவுகணைக்கான தவிர்க்க முடியாத அவசியம் பற்றி நாட்டுப்பற்றுள்ள ஒருவர் வாதிட்டால் புரிந்துகொள்ளலம். ஆனால் ஏவுகணை வானில் எழுவதை வாழ்வின் மகத்தான தருணமாக நினைக்கும் மனதை விமர்சனம் செய்து கொள்வதில், தொழில்நுட்பம் தரும் நெருக்கடியையும் அழிவையும் எதிர்கொள்வதன் தொடக்கம் இருக்கலாம். இன்றைய அதீத தொழில்நுட்ப வளர்ச்சி உருவாக்கும் பேராசையும், பெருந்தேவைகளையும், பெரும் நெருக்கடிகளையும் பற்றிப் பலர் பேசும்போது, தொழில்நுட்பத்தின்மீது மதப்பற்று போன்ற தீவிர ஆதரவுடன், முழுக்க ஒரு பிரசாரத்திற்கான மொழியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கலாம் கட்டுரைகளை எழுதியுள்ளார். அதை அரசும் ஊடகங்களும் பரப்புரையாக மக்கள் மனதில் திணிக்கிறது.
என்னளவில் கலாமின் கட்டுரையில் எதிர்க்க மட்டும் செய்யாமல் எதிர்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உண்டு. கலாம் தனது கட்டுரையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சுத்தமான மின் உற்பத்தி முறையாக அணு மின்சாரத்தைக் குறிப்பிடுகிறார். இதைக் குறிப்பிடும்போது புவி சூடேற்றம் பற்றியும், அதன் ஆபத்துக்கள் பற்றியும் பேசுகிறார். இந்த வாதமும் ஏற்கெனவே வேறு சிலரால் அணு மின்சாரத்திற்கு ஆதரவாக முன்வைக்கப்பட்டதுதான்.
கலாம் புவி சூடேற்றம் பற்றி பேசுவதன் நேர்மையை நான் சந்தேகிக்க விரும்பவில்லை. ஆனால் சூழலியவாதிகள் புவி சூடேற்றத்தை முன்வைத்து பேசுவதை எல்லாம் எள்ளி நகையாடும் ஒரு எலீட் கூட்டம், அணு மின்சாரத்திற்கு ஆதரவாக வாதிடும்போது மட்டும் புவி சூடேற்றத்தை ஒரு வாதமாக முன்வைப்பது அப்பட்டமான நேர்மையின்மை.
அணுக்கழிவுகளைத் தொடர்ந்து சாமாளிப்பது என்ற வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அணு மின்சாரத்தை சொல்ல முடியுமா என்று கேள்வியை மண்டையிலிருந்து கழற்றி வைத்துவிட்டுப் பார்த்தால், அணு மின்சாரம் ஒரு விதத்தில் தூய்மையான பச்சை மின்சாரமாகத்தான் தெரிகிறது. ஆனால் கலாம் சொல்வதுபோல் மற்றவகை மின் உற்பத்திகளை நிறுத்தி, அணு மின்சார உற்பத்தியை மட்டும் மேற்கொண்டால் Green house வாயு உமிழ்வுகள் உண்மையில் குறையுமா? தன் வாதத்திற்கு ஆதரவாகப் பல புள்ளி விவரங்களைத் தருகிறார். உதாரணமாக 26% CO2 வெளியேற்றம் (அணு சாராத மற்ற) மின் உற்பத்தியால் மட்டும் ஏற்படுகிறது என்கிறார். அவற்றை நான் சரி பார்க்க முயலவில்லை. ஆனால் நான் காண விரும்பிய ஒரு குறிப்பிட்ட புள்ளி விவரத்தை அவர் தரவில்லை.
ஜப்பான் போன்ற நாடுகள் பெருமளவில் அணு உற்பத்தியை மட்டும் சார்ந்து நிற்கத் தொடங்கியபின், அந்நாட்டிலிருந்து வெளியேறும் கரிமில வாயுவின் அளவு கூடிக்கொண்டிருக்கிறதா, குறைந்து கொண்டிருக்கிறதா என்பதன் புள்ளி விவரம்தான் எனக்கு முக்கியமானதாகத் தெரிகிறது. கரிமில வாயு உமிழ்வுப் புள்ளிவிவரம், வரைபடத்தில் மேல் நோக்கிய வளைவாக, செங்குத்தாக தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகம் இல்லை. ஆகையால் அணு மின் உற்பத்தி புவி சூடேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டதாக நம்ப ஆதாரம் உண்மையில் இல்லை; மாறாக மின்பற்றாக்குறை நீங்கி, அபரிமிதமான மின்சாரம் கைவசம் இருக்கும்போது, பொறுப்பற்ற எல்லாவகைக் குளிரூட்டுதலாலும் புவி சூடேற்றம் அதிகமாகவே எல்லா சாத்தியங்களும் உள்ளது.
நிலக்கரி, தொல்லுயிர் எச்சங்களில் இருந்து கிடைக்கும் எரிபொருள்களின் இருப்பு வற்றும் நிலைமையில், நாம் அணு எரிபொருளைத் தேடவேண்டியுள்ளது என்கிறார் கலாம். மட்கிக் கிடக்கும் இயற்கை எரிபொருட்கள் வற்றப்போவது நிச்சயமான எதிர்காலப் பிரச்சினை. அதை அணு மின்சார உற்பத்திக்கு மாறுவதன் மூலமாக மட்டும் சமாளிக்க முடியுமா? எல்லாவித பெட்ரோல், டீசல் தேவைகளையும் நேரடி மின்சாரம் சார்ந்த பயன்பாடாக மாற்ற வேண்டும். இன்னும் நேரடியாக அணு சக்தியிலேயே ஓடக்கூடிய கார்களையும், விமானங்களையும் படைத்து விட்டால் மிகவும் உசிதம்; உண்மையிலேயே அதைத் தவிர வேறு வழியில்லை. இன்றைய வாகனங்களைப் போலப் புகை கக்க வேண்டிய தேவையும் இருக்காது. அணுக் கழிவுகளை மட்டும் எப்படி ஒவ்வொரு குடிமகன்களும் சமாளிப்பார்கள் என்பதை எதிர்கால அறிவியல் முன்னேற்றத்திடம் விட்டுவிடலாம்.
புவி சுடேற்றத்தை அணு மின்சாரம் குறைக்கும் என்கிற வாதம் சந்தேகக் கேஸாக இருந்தாலும், எதிர்காலத்தை பற்றிக் கவலை கொள்ளாமல், உடனடிச் சூழல் மாசை மட்டும் கணக்கில் கொண்டால், மற்ற அனல், புனல் மின்சாரங்களுக்கு அணு மின்சாரம் மேல்தான். உதாரணமாக கலாம் நிலக்கரிச் சுரங்கங்கள் நிகழ்த்தும் நாசத்தை முன்வைத்து அப்படி ஒரு வாதத்தை முன்வைக்கிறார். இந்த சந்தர்ப்பத்திற்கான ஒரு சாமர்த்தியமான வாதமாக இல்லாமல், அணு மின்சாரம் தொடங்கிய உடன், நிலக்கரிக்காகத் தோண்டுவதை நம் கார்ப்பரேட்டுகள் நிஜமாகவே முழுக்க விட்டுவிடுவார்கள் என்றால், அந்த வகையில் கலாம் சொல்வதை- சேரப்போகும் அணுக்கழிவு குறித்து யோசிக்காத நிலையில்- ஒப்புக் கொள்ளலாம்.
என்னை பொருத்த அளவில் எல்லா விதத்திலும் அழிவை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் கழிவுகள் நம்மை மட்டுமின்றி, கடலையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. புவி சூடேற்றம் பற்றிக் கறாரான புள்ளி விவரங்களுடன் புட்டு புட்டு வைத்த பின்பும், நன்றாய்ப் படித்த அறிவாளிகளே கிராக்குத்தனமான வாதங்களால் மறுக்கிறார்கள். இன்னும் பைத்தியக்காரத்தனமான தீர்வுகளையும் தருகிறார்கள். இதற்குமேல் வெடிக்க சாத்தியமுள்ள போர்கள், முதலீட்டியம் எதிர்காலத்தில் நிகழ்த்தப்போகும் தீவிர சுரண்டல், அளிக்கக்போகும் நெருக்கடிகள் என்றும் ஏராளமாக இருக்கின்றன. இதில் உடனடி ஆபத்து என்று பார்த்தால் அணுக்கழிவுகள் குறைந்த வீர்யத்துடனேயே இருப்பது போல் தெரிகிறது.
ஆற்றலுக்காக நவீனமான வாழ்க்கையில் எத்தனையோ விதத்தில் அழிவை தேடுகிறோம்; அணு மின்சாரம் உற்பத்தி மூலம் இன்னொன்றை இழுத்துக்கொண்டு அழிவைத் தேடுவதில் என்ன குடி முழுகப்போகிறது என்றால் – பதில் எதுவும் இல்லை. ஆகையால் நேர்மையாக அழிவிற் சிறந்தது எது என்பதைப் பற்றி விவாதிப்போம். அதில் அணு ஆற்றல்தான் நம் பார்வையில் இப்போதைக்கு சாதகமான அழிவு என்றால் அதை ஏற்றுக்கொள்வோம். சைனா இந்தப் பாதையில்தானே போகிறது, நாம் பின்தங்கி விட மாட்டோமா என்று கேட்கிறார்கள். உண்மைதான்; எல்லோரும் அழிவுப்பாதையில் போகும்போது நாமும் அதையே செய்வோம். தனிமைப்பட்டுத் தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை. தவிர்க்க முயன்றாலும் மற்றவர்கள் அனுமதிக்கப் போவதில்லை. புவி சூடேற்றப் பிரச்சினையிலும் மற்ற நாடுகள் யோக்கியமாக நடக்காதபோது, கரிமில வாயு உமிழ்வை நாம் மட்டும் ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள். உண்மைதான்; மற்றவர்கள் செய்யும் போது நாமும் நம் பங்களிப்பை அழிவிற்குச் செலுத்த வேண்டாமா?
எல்லாம் வாஸ்தவம்தான். ஆனால் ஐரோப்பிய அமேரிக்க நாடுகளைப் போல நவீனமாதலின் பயன் நம் அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்கப் போவதில்லை; நாம் சைனா போன்ற எதேச்சதிகார அரசமைப்பு கொண்ட நாடும் அல்ல. ஆகையால் ஒரு ஜனநாயக நாட்டில், நம் (அதாவது நானும் உறுப்பினராகியுள்ள மேல்தட்டின்) தேர்வுக்கு, வேறு ஒரு மக்களை விலை கொடுக்கச் சொல்லக் கூடாது. வேறு ஒரு மக்கள் என்று கூடன்குளத்தில் வசிக்கும் மக்களை போன்றவர்களைத்தான் சொல்கிறேன். (எதிர்கால சந்ததியினரை நம் பாவங்களை சுமக்கத்தான் உருவாக்குகிறோம் என்பதால் அவர்களை சொல்லவில்லை.) எத்தனையோ விஷயங்களில், எத்தனையோ விதங்களில் ஒரு தட்டினரின் தேர்விற்கு வேறு யாரோ விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; இதிலும் செய்தாலென்ன என்று நேரடியான ஒரு கேள்வியை எலீட் கூட்டம் கேட்பது ஒருவேளை அடுத்த கட்ட வாதமாக இருக்கலாம்.
இந்த புலம்பல்களை விட்டுவிட்டு இதற்கான மாற்றுத் தீர்வு என்னவென்று கேட்டால், நிறைவான பதில் எதுவும் எனக்கு தெரியவில்லை. அணு உலையை எதிர்ப்பவர்கள் காற்றாலை, சூரிய மின்சாரம் என்று பலவற்றை முன்வைக்கிறார்கள். விரிந்துகொண்டே போகும் தேவைகளை அது முழுவதும் தீர்த்து வைக்கும் என்று கலாமை போலவே எனக்கும் நம்பிக்கையில்லை. உருவாக்கி கொண்டே செல்லும் தேவைகளை குறைக்காமல், அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் எந்த தீர்வையும் எட்டமுடியாது. டெவலப்மெண்ட் என்கிற வளர்ச்சியின் வன்முறையையும், அழிவையும் உணராமல் அது குறித்து யோசிக்க வாய்ப்பில்லை. தொடர்ந்த மின் பற்றாக்குறையும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் ஒருவேளை நம்மை யோசிக்க வைக்கலாம். அந்த வகையில் கூடன்குளம் அணு மின்சாரம் வந்து நம் மின்பற்றாக்குறையை தீர்க்குமானால், நாம் யோசிக்கவே போவதில்லை.
ஃபுகுஷிமா விபத்திற்கு பிறகு, இயக்காமல் இருந்த பல அணு உலைகளின் காரணமாக, ஜப்பானியர்கள் மின் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது; மின்சிக்கனம் குறித்த பரப்புரை செய்யப்பட்டது. குளுரூட்டுதலை தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம், ஒட்டு மொத்த ஜப்பானே மின் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியது. இதன் விளைவாக கடந்த செப்டம்பர் மாதம் கடந்த பல வருடங்களைவிட குளிர்ந்து இருந்ததாக ஒரு செய்தி வாசித்தேன். இது போன்ற ஒரு செயல் இந்தியர்களாகிய நம்மாலும் முடியும் என்று கூறுவதற்கான முகாந்திரம் இல்லாததால்தான், கலாம் அணு மின்சாரத்தில் ஜப்பானை போல நாம் சாதித்து காட்ட முடியும்… முடியும்… முடியும்… என்று கோஷிக்கிறார் போலும்.
பி.கு. 1. கூடன்குளம் அணு உலையை எதிர்ப்பவர்கள் குறிப்பாக பல பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர். அது குறித்து எந்த அளவிற்கு நிறைவான, நியாயமான பதில்களை கலாம் கூறியிருக்கிறார் என்று அலச நான் முயலவில்லை. வேறு யாராவதுதான் அந்த வேலையைச் செய்யவேண்டும்.
பி.கு. 2. ஹிந்து பத்திரிகையில் ஆங்கிலத்திலும், பின் கலாமின் வலைத்தளத்தில் முதலில் வெளியாகி பின் விகடனில் தமிழிலும் இரண்டு கட்டுரைகள் கலாமின் கட்டுரைகளாக வெளியாகியுள்ளன. இரண்டுமே இணை ஆசிரியர்களாக வேறு ஒருவரையும் கொண்டது. ஶ்ரீ ஜன்பால் சிங் ஆங்கிலக் கட்டுரையிலும், பொன்ராஜ் தமிழ்க் கட்டுரையிலும் இணை ஆசிரியர்கள். ஆய்வுக் கட்டுரையாக அல்லாமல், வெகுஜன வாசிப்பிற்கான ஒரு பரப்புரை கட்டுரையில், இவர்கள் பங்கு என்னவென்று தெரியாவிட்டாலும், பலரும் இதைக் கலாமின் கட்டுரையாகவே வாசிக்கின்றனர். என் கருத்தில், கலாமின் மேற்பார்வையில், இந்த இரண்டு கட்டுரைகளுமே முழுமையாகவே மற்றவர்களால் எழுதப்பட்டிருக்க வாய்ப்பு நிறைய உள்ளதாகவே கருதுகிறேன். ஆனால் இங்கே கலாமின் கட்டுரை என்று விளித்துள்ளதன் பொருள், அவர் எழுதியது என்பதல்ல. அவரின் பெயரால் முன்வைக்கப்பட்டதை எதிர்கொள்வதுதான்.
- ரோஸா வசந்த்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக