வெள்ளி, 11 நவம்பர், 2011

தி.நகர் கடைகளுக்கு சீல் வைத்தது செல்லும்- புதிதாக சீல் வைக்க, நவ. 30 வரை இடிக்க சுப்ரீம் கோர்ட் தடை



T Nagar Shops
டெல்லி: சென்னை தி.நகரில் உள்ள விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
அதேசமயம், புதிதாக கடைகளுக்கு சீல் வைக்கவும், நவம்பர் 30ம் தேதி வரை கடைகளை இடிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தையே மீண்டும் அணுகுமாறும் வர்த்தகர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
தி.நகர், வடக்கு உஸ்மான் ரோடு, பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வந்த விதிமுறைகளுக்குப் புறம்பான முறையில் கட்டப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சிறிய நிறுவனங்களை சமீபத்தில் சி்எம்டிஏ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இழுத்து மூடி சீல் வைத்தனர். இதனால் தி.நகர் வர்த்தகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.

அதேசமயம், மக்கள் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக ரங்கநாதன் தெரு கடைகளுக்கு சீல் வைத்ததை அவர்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் வரவேற்றுள்ளனர்.

தற்போது லலிதா ஜூவல்லரி உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்களுக்கு சீல் வைக்க பட்டியல் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் வர்த்தக அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த சீல் வைப்பு நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

சமீபத்தில் சீல் வைப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை வர்த்தகர்கள் நாடினர். ஆனால் சீல் வைக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து வணிகர்கள் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், சீல் வைப்பு நடவடிக்கை தொடர்பான அதிகாரிகளின் நடவடிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. எனவே அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. சீல் வைப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தையே வர்த்தகர்கள் நாட வேண்டும்.

வணிகர்களின் கருத்ததறிந்து இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடைகள் சீல் வைக்கப்படுவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலேயே வணிகர்கள் வழக்கு தொடரலாம்.

புதிதாக எந்த கடைகளுக்கும் சீல் வைக்கக் கூடாது. இதுவரை சீல் வைக்கப்பட்டுள்ள கடைகளையும் நவம்பர் 30-ம் தேதிவரை இடிக்கக் கூடாது.

கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை வர்த்தகர்கள் நாடினர். ஆனால் சீல் வைக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து வணிகர்கள் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: