இந்தியஅத்துமீறிய மீன்பிடி தொடர்பில் இந்திய கடற்றொழிலாளர்களது பிரதிநிதிகளுக்கும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்றுக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி வழங்கியுள்ளார்.
அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சீரானதொரு சிறந்த நிர்வாகத்தை கட்டியெழுப்புவதனூடாகவே தொழிற்துறையை மட்டுமல்லாது அதுசார்ந்த சமூகத்தையும் வளர்த்தெடுக்க முடியும் என்பதுடன், கடற்றொழில் மேம்படுத்துவதற்காகவே எமது அமைச்சின் கீழான வடகடல் நிறுவனத்துடன் வீரவில மற்றும் நுணுவில மீன்வலை உற்பத்தி தொழிற்சாலைகளும் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் படகுகட்டும் நிறுவனத்தையும் எமது அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு எண்ணியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதற்கு கடற்றொழில் தொழிற்துறை சார்ந்த அனைவரினதும் ஒத்துழைப்பும் ஒத்தாசையும் முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் வடகடல் நிறுவனம் என தற்போது அழைக்கப்படும் இந்நிறுவனத்தை எதிர்காலத்தில் சீநோர் என அழைக்கப்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இந்திய உயர்மட்டக் குழுவினரைச் சந்திக்கும் பட்சத்தில் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள், மற்றும் நலன்கள் தொடர்பாக கலந்துரையாடுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள் எமது கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் கலந்துரையாடும் விதமாக விரைவில் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்வதாகவும் இதன் பிரகாரம் 15 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
கடற்றொழிலாளர்கள் அனைவரும் நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்படவேண்டுமெனவும் கேட்டுக் கொண்ட அமைச்சர் அவர்கள் நிர்வாகத் தெரிவுகளின் போது புதிய யாப்புத் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் சீரானதொரு நிர்வாகத்தின் மூலமே கடற்றொழில் துறை சார்ந்த சமூகத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் குறிப்பாக இலகுகடன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்க முடியும் எனவும் அத்துடன் எதிர்வரும் 09 ம் திகதியன்று ஜனாதிபதியுடன் சந்திக்கும் போது குறிப்பிட்ட பிரச்சினையையும் கவனத்தில் கொள்ளப்படுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக