வெள்ளி, 11 நவம்பர், 2011

தமிழ் ஒன்றும் செம்மொழி அல்ல. அது சாதா மொழிதான்!’ என்று சொல்லாமல் விட்டதுதான் பாக்கி!

சுழற்றி அடித்த மழையின் விளைவால் தமிழகம் தத்தளித்துக்கிடக்கிறது. வீடுகள், விளைநிலங்கள், அலுவலகங்கள் என்று எதுவுமே வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பவில்லை. நிரம்பித் தளும்பும் ஏரி-குளங்கள் எப்போது உடைப்பு எடுக்குமோ என்ற அச்சம் வாட்டி எடுக்கிறது. குவிந்துவிட்ட குப்பைக்கூளங்களும் தேங்கி நிற்கும் சகதி நீரும் சேர்ந்து என்னென்ன வியாதிகளை உற்பத்திசெய்யுமோ என்ற பீதியும் மக்களை ஆட்டிப்படைக்கிறது.
மொத்தத்தில், தமிழகத்தைப் பொறுத்தவரை மழைக் காலம் என்பது, அரசாங்கத்தின் போர்க்கால நடவடிக்கைக்கு உரியதாகவே இருக்கிறது. 'மாற்றம்’ வேண்டி வாக்களித்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதில் தன் கவனத்தைச் செலுத்த வேண்டிய முதல்வர் என்ன செய்கிறார்? கடந்த ஆட்சியாளர்கள் தங்கள் சாதனைகளாகக் கருதியவற்றின் சுவடுகளை அழிப்பதே தன் தலையாய கடமை என்பதுபோல் செயல்படுகிறார்!

தலைமைச் செயலகம், சமச்சீர்க் கல்வி என்ற தொடர் மாற்ற வரிசையில் இப்போது, 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுகிறேன்',.. 'மந்திரியை எந்திரியாக மாற்றுகிறேன்...
ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ். அதிகாரிகளை அடுத்தடுத்துத் தூக்கி அடிக்கிறேன்' என்று பந்தாட்டம் நடத்துவதில் கழிக்கிறார், தன் பொன்னான காலத்தை. கருணாநிதி மீது இருக்கும் கோபத்தில், 'தமிழ் ஒன்றும் செம்மொழி அல்ல. அது சாதா மொழிதான்!’ என்று சொல்லாமல் விட்டதுதான் பாக்கி!

கூட்டணிகளின் மிரட்டல் இல்லாமல் உடனுக்குடன் நல்லவற்றைத் தங்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்கும் நிலையான அரசு வேண்டும் என்றுதானே கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மையை மக்கள் வழங்கினார்கள். அப்படி இருக்க... திட்டங்கள், கட்டடங்கள், மந்திரிகள், அதிகாரிகள் என்று எதிலுமே நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதில் பெரும்பான்மை நேரத்தைக் கழித்தால் எப்படி?

பெரும்பான்மை அரசாக மட்டுமல்ல... மாநிலத்தின் துயர்களைக் களைவதற்கு முன்னுரிமை தரும் பெருந்தன்மை மிக்க அரசாகவும் இது இருக்க வேண்டும். அதுதான் மக்கள் கொடுத்த பெருவெற்றிக்கு முதல்வர் செய்யும் சரியான கைம்மாறு!

கருத்துகள் இல்லை: