சனி, 12 நவம்பர், 2011

அங்காடி தெருவில் கண்ணீர்!தொழிலாளர் நலத்துறை என்ன செய்கிறது???

ம.மோகன்என்ன செய்கிறது?
படங்கள்: ப.சரவணகுமார்
அடைமழை கொட்டித் தீர்த்தாலும்... சில துளிகளே மண்ணை எட்டும். அந்த அளவுக்கு மக்கள் நெரிசல் கொண்டது சென்னை, தி.நகரின் ரங்கநாதன் தெரு மற்றும் வடக்கு உஸ்மான் சாலை! அப்படி மக்கள் கூட்டத்தால் தினம் தினம் திருவிழாவாக இருக்கும் அந்த இடங்கள், சமீபகாலமாக வெறிச்சோடிக் கிடக்கின்றன!

''விதிமுறைகளை மீறி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றால் பொதுமக்களுக்கு எந்தத் தருணத்திலும் பேராபத்து காத்திருக்கிறது'' என்று சொல்லி, கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களுக்கு 'சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும'த்தின் அதிகாரிகள் சீல் வைத்திருக்கின்றனர்! சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர், ரத்னா ஸ்டோர், ஜெயச்சந்திரன் ஸ்டோர் என்று பிரபல கடைகள் பலவும் இதில் அடக்கம்!

நியாயமான காரணத்துக்காக, நீதிமன்றத்தின் அழுத்தமான உத்தரவுகளுக்கு இணங்க... அந்தக் கட்டடங்களை நிரந்தரமாக அப்புறப்படுத்தும் வேலை விரைவிலேயே தொடங்க இருக்கிறது! ஆனால், எதிர்விளைவாக, தமிழகம் தழுவிய அளவில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் அடுத்தவேளை உணவில் மண் விழுந்திருப்பதுதான் சோகம்!
ஆம்... மூடப்பட்ட ஷாப்பிங் கடைகளில் வேலை பார்த்த ஊழியர்கள், ஒவ்வொருவராக பேக்குகளை தூக்கிக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருப்பது... பெருந்துயரக் காட்சி! திருநெல்வேலி, தூத்துக்குடி, காங்கேயம், விருத்தாசலம்... இப்படித் தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் பிழைப்புக்காக வந்தவர்கள். அவர்களில் 70 சதவிகிதத் துக்கும் மேலானவர்கள், இளம்பெண்கள் என்பது கூடுதல் சோகம்!
''பெற்றோரின் முதுமை, திருமணச் சேமிப்பு, சகோதர, சகோதரிகளின் படிப்புனு குடும்ப வறுமையில் சிக்கிக்கிடக்குற இந்தப் பெண்களோட எதிர்காலத்துக்கு ஒரே பிடிப்பு, இப்படி பெருநகரங்களுக்கு வேலைக்கு வர்றதுதான். இங்க வந்து, 'அங்காடி தெரு' சினிமா கணக்கா ஆயிரத்தெட்டு பிக்கல் பிடுங்கல் இருந்தாலும், எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு, கிடைச்ச சம்பளத்துக்கு வேலை பார்த்துட்டு இருந்தாங்க. ஆனா, இப்போ அதுக்கும் வழி அறுந்துடுச்சு. மனம் நொந்து கண்ணீர் விடுறதைத் தவிர, அவங்களால வேற என்ன செய்ய முடியும்!'' என்று வருந்தினார், ரங்கநாதன் தெருவில் பிளாட்பாரக் கடை வைத்திருக்கும் கிருபாகரன்.
டிராவல் பேக்குகளை கையில் எடுத்துக்கொண்டு, பேருந்து நிலையம் நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்த பெண்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தபோது, ''எங்களோட வேதனைகளை வேணும்னா எழுதிக்கோங்கண்ணா. பெயர், போட்டோ எல்லாம் வேணாம்!'' என்றவர்கள்,

''பல மாசங்களுக்குப் பிறகு சந்தோஷமா ஊருக்கு போயி தீபாவளியைப் பெத்தவங்களோட கொண்டாடிட்டு, இப்பதான் திரும்பி வந்தோம். ஆனா, வேலை போய், மொத்தமா ஊருக்கே திரும்பிடுவோம்னு நெனச்சுக்கூடப் பார்க்கல. மேனேஜர்கிட்ட கேட்டப்ப, 'ஹாஸ்டலுக்கு போங்க... எதுவானாலும் அப்புறம் பேசிக்கலாம்'னு சொன்னார். ஒரு வாரம் ஆயிடுச்சு... எந்த பதிலும் இல்லை. வேலை இல்லாம தினம் சென்னையில சாப்பிட்டு, தூங்கிட்டுனு இருக்க, கட்டுப்படி ஆகுமா? ஒவ்வொரு மாசமும் ஒண்ணாந் தேதிதான் கம்பெனியில சம்பளம் போடுவாங்க. 31-ம் தேதி கடைகளுக்கு சீல் வெச்சதால... போன மாசத்துக்கான சம்பளம்கூட இன்னும் வாங்கல. யாரைக் கேட்டாலும் சரியா பதில் கிடைக்கல. பேப்பர், நியூஸ்ல எல்லாம் கட்டடங்களை இடிக்கப் போறாங்க, பிரச்னை முடிய பல மாசம் ஆகும்னு சொல்றாங்க.

இந்த மாசப் பாடே இப்படி இருக்கு. இனி அடுத்த மாசம் என்னாகும்னு நினைச்சாலே, கண்ணுல தண்ணி வருது. எங்களோட தங்கியிருந்த எழுநூறுக்கும் மேலான பெண்கள் ஒவ்வொருத்தரா ஊருக்குப் போயிட்டாங்க. நாங்க இப்ப கிளம்பிட்டே இருக்கோம்... என்ன பண்ணப் போறோம்ங்கிற கேள்விக்கு விடை தெரியாம!''

- அத்தனை பெண்களின் கண்களிலும் அப்பியிருந்தது சோகம்.

எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை நியாய மானது. என்றாலும், அதன் எதிர்விளைவாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்தப் பெண்களின் கண்ணீர் மழைக்கு யார் விடை சொல்வது?!

இதைப் பற்றி பேசும் ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் உ.வாசுகி ''வேலை இழந்த இந்தப் பெண்களோட எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாகி இருப்பது வேதனைக்குரிய விஷயமே! கடைகளுக்கு சீல் வைத்தால், அங்கே பணியாற்றுபவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்னைகள் வரும் என்பதை, அதற்கெனவே இருக்கும் தொழிலாளர் நலத்துறை ஆராய்ந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற நிறுவனங்களைப் பொறுத்தவரை தொழிலாளர் நலத்துறை என்பது எப்போதுமே சரியாக செயல்படுவது இல்லை. அங்கே பணியாற்றுபவர்களுக்கு விதிமுறைகளின்படி சேரவேண்டிய சம்பளம், பி.எஃப்., மருத்துவபடி, பணி நேரம் உள்ளிட்டவை சரிவர வழங்கப்படுகின்றனவா என்று இந்த அமைப்பு கண்காணிப்பதே இல்லை. அதையெல்லாம் சரிவர செய்திருந்தால், இப்போது வேலை இழந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு அவை எல்லாம் ஓரளவுக்காவது கைகொடுத் திருக்கும்.

சரி, இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பேசி, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீட்டை பெற்றுத்தர தொழிலாளர் நலத்துறைக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் அந்த அமைப்பு தீவிர கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவேண்டும். எல்லோருக்கும் உடனடியாக உரிய வேலை வாய்ப்பை அரசாங்கம் உருவாக்கித் தருவது சாத்தியமில்லாத நிலையில், இந்த இழப்பீடாவது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். அதை வைத்துக் கொண்டு, தங்களின் எதிர்காலத்தை ஓரளவுக்காவது அவர்களால் தீர்மானித்துக் கொள்ள முடியும்'' என்று சொன்னார்.

செய்யுமா தொழிலாளர் நலத்துறை?

கருத்துகள் இல்லை: