சனி, 12 நவம்பர், 2011

கூடங்குளம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?- மத்திய அரசு விசாரணை


Koodankulam Protest
தூத்துக்குடி: கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவோருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் அணு உலை பிரச்சனை தொடர்பாக மத்திய- மாநிலக் குழுக்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் சுமுகத் தீர்வை எட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்துவோருக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக் குழுவின் தலைவர் உதயகுமார் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். அணுமின் நிலைய வளாகத்தில் 1,500 விஞ்ஞானிகளின் குடும்பங்கள் தங்கியுள்ளன. ஆபத்து இருக்குமேயானால் அந்த இடத்தில் 1500 குடும்பங்கள் தங்குவார்களா?.

எனவே வீண் வதந்திகளைப் பரப்புவதை அவர்கள் கைவிட வேண்டும் என்றார்.

கடலில் மாயமாகும் மீனவர்களைத் தேட ஹெலிகாப்டர்:

முன்னதாக காரைக்காலில் நிருபர்களிடம் பேசிய அவர், கடலில் காணாமல் போன மீனவர்களைத் தேட காரைக்கால், நாகை பகுதிகளில் ஹெலிகாப்டர் தளம் அமைத்து ஹெலிகாப்டர் வழங்க பிரதமர் மற்றும் உள்துறையுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

காரைக்கால்- நாகூர் ரயில் பாதைப் பணிகளை ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் வருகின்றனர். டிசம்பர் 2ம் வாரத்தில் மத்திய அமைச்சர் முனியப்பா முன்னிலையில் காரைக்காலில் இருந்து சென்னைக்கு ரயில் சேவை துவக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

காரைக்கால் மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. அங்கு சிறப்பு டாக்டர்கள் இல்லை. இதனால் பொது மக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவம் வழங்கப்படவில்லை. ஒரு மாதத்திற்குள் டாக்டர்கள் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போன்று வாரம் ஒரு முறை வரும் ஜிப்மர் டாக்டர்கள் தினமும் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

கருத்துகள் இல்லை: