சுகுமாரன்
I have always imagined that Paradise will be a kind of library.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, சரியாகச் சொன்னால் 1964 முதல் திருவனந்தபுரத்தில் இயங்கி வந்த பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடினார்கள். இந்தியாவில் மிகச் சிறப்பாக மேலாண்மை செய்யப்பட்ட நூலகங்களில் ஒன்று என்ற புகழும் அந்த நூலகத்துக்கு இருந்தது. நகரத்தின் மிகப் பிரபலமான கல்வியாளர்களையும் அறிவியலாளர்களையும் சிந்தனையாளர்களையும் எழுத்தாளர்களையும் உருவாக்கியதில் பி.சி.எல். நூலகத்தின் பங்கு கணிசமானது. எனினும் பிரித்தானிய அரசு நூலகத்தைக் கைவிடத் தீர்மானம் செய்தது. இந்தியாவில் தனது பௌதிக இருப்பைக் (physical presence) குறைக்கும் நடவடிக்கையின் பாகமாக இந்த முடிவு என்றும் நூலக வடிவில் தங்களுடைய சேவையை நிறுத்திவிட்டு அந்த நிதியை வேறு கல்வி, கலாச்சாரப் பணிகளுக்குச் செலவிட இருப்பதாகவும் தூதரகம் அறிவித்தது. நூலகத்தில் இருந்த சுமார் 27,000 புத்தகங்கள் சென்னை உட்படப் பிற நகரங்களில் செயல்பட்டுவரும் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகங்களுக்கு மாற்றப்படும் என்றும் அறிவித்தது.
பிரித்தானிய அரசின் இந்த அறிவிப்பு கேரளத் தலைநகரக் கல்விப் புலங்களிலும் பொது வாசகர்கள் நடுவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நூலகத்தை மூடுவது என்பது வெளிநாட்டு அரசின் கொள்கை முடிவு. அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் புத்தகங்களை அவை இத்தனை காலமும் வசித்த மாநிலத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது என்பதில் வாசக சமூகம் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தது. நூலக நிர்வாகமும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டது. நூல்களையும் சேவையையும் திருவனந்தபுரத்திலேயே விட்டுச் செல்ல ஒப்புக் கொண்டது. அதன்படி மாநில அரசே பிரிட்டிஷ் கவுன்சில் நூலகக் கட்டுமானத்தைப் பெற்றுக் கொண்டது. மாநிலத் தலைமை நூலகத்தின் ஒரு பகுதியாக அதைத் தொடர்ந்து பராமரிக்க முன்வந்தது. திருவனந்தபுரத்திலுள்ள மாநிலத்தின் மைய தலைமை நூலகத்தில் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் அதே பெயரில் இன்றும் செயல்பட்டு வருகிறது.
தனது சொந்த நிதியில் ஆண்டுக்கு சில கோடிரூபாய் ‘தண்டச் செலவு’ செய்து நடத்தி வந்த நூலகத்தை பிரித்தானிய அரசு இடம் மாற்றுவதோ அல்லது அழிப்பதோ அந்த அரசின் உரிமை. ஏனெனில் அதை நடத்துவதற்கான செலவில் ஒரு தம்பிடிக் காசு கூட இந்தியக் குடிமக்களிடமிருந்து பெற்றது அல்ல. எனினும் வாசிப்பு வேட்கை கொண்ட ஒரு சமூகம் கேட்டுக் கொண்டதன் பேரில் அந்த நூலக அமைப்பை விட்டுச் சென்றிருக்கிறது. அது பிரித்தானிய அரசின் வள்ளல்தன்மையல்ல; ஒரு சமூகத்தின் அறிவுத் தேவையைப் புரிந்து கொண்ட பரிவுணர்வு.
பத்தாண்டு காலத்துக்கும் மேலாக இந்த நகரத்தில் வசித்து வருகிறேன். கடந்த மூன்றாண்டுகளாக தலைமை நூலகத்தைத் தாண்டிச் செல்லும் ஒவ்வொரு வேளையும் இந்த அறிவுச் சூழலின் நறுமணம் மனதுக்குள் பரவும். ஓர் அரசு மக்களில் ஒருசாராரின் கருத்துக்கு மதிப்பளித்த செயலின் மகிழ்ச்சி படரும்.
மாறாக, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றம் செய்யவிருப்பதாக வந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட நூலகத்தை பொக்கான காரணங்கள் சொல்லி அல்லது காரணங்களே சொல்லாமல் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு இடம் மாற்றுவது மக்கள் மீதுள்ள அலட்சியமனப்பான்மையால் மட்டுமே . குழந்தைகளுக்கான பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் மக்களை உதாசீனப்படுத்தும் தந்திரத்தின் அடையாளம்தான். சென்னை எழும்பூரிலிருக்கும் சிசுக்களுக்கான மருத்துவமனையை ஒருமுறையாவது சென்று பார்த்திருப்பவர்களுக்கு முன்னாள் இந்நாள் ஆட்சியாளர்களின் பிள்ளைப் பாசம் எந்த விதமானது என்பது புரியும்.
ஒரு நூலகத்தை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு மாற்றுவதில் ஒன்றும் குடிமுழுகிப் போகாதுதான். ஆனால் அதற்குச் சரியான காரணங்கள் சொல்லப்பட வேண்டும் என்பது ஜனநாயகத் தேவை. இங்கே ஏற்றுக் கொள்ளும்படியான காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படவே இல்லை. தன்னிச்சையான முடிவுகள்தாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அமைச்சரவையின் தீர்மானமாக அறிவிக்கப்படுகிறது. இது ஜனநாயக அமைப்புக்கு எதிரானது.
புதுப் புது நோய்கள் உருவாகிப் பரவும் நிகழ்காலத்தில் வரும் தலைமுறையை ஆரோக்கியமான ஒன்றாக வளர்க்கவும் பராமரிக்கவும் சிறந்த மருத்துவமனை வேண்டும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். அதே சமயம் அது இப்போது நூலகமாகச் செயல்பட வடிவமைக்கப்பட்ட கட்டடத்தில்தான் அமைய வேண்டும் என்பதை யாரும் ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள். ஒரு மருத்துவமனையாக அதைச் சீரமைக்க கட்டுமானத்தில் மாற்றங்கள் செய்யப்படும். அதற்கான செலவு மக்கள் வரிப் பணத்திலிருந்து இறைக்கப்படும். இந்தச் செலவு கிட்டத்தட்ட புதிய கட்டுமானச் செலவுக்குச் சமமானது. எனவே இது கோமாளித்தனமானது. மேல்துண்டுக்காக வேட்டியைக் கிழித்துத் துண்டாக்குகிற அதி புத்திசாலித்தனமான செய்கை.
ஓர் ஆண்டுக்கு முன்னர்தான் அண்ணா நினைவு நூலகம் செயல்படத் தொடங்கியிருக்கிறது. பயனாளிகள் அதைப் பற்றி அறிந்து பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். ஹிந்து நாளிதழின் கணக்குப்படி நாளொன்றுக்கு 1200 பேர் இந்த நூலகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது வார நாட்களில். இதுவே வார இறுதி நாட்களில் 2000க்கும் அதிகம். ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம். இன்றைக்குக் கிடைக்கும் அதி நவீன வசதிகளைக் கொண்டிருக்கும் நூலகம் என்றெல்லாம் பாராட்டப்படும் இந்த நூலகம் வெறும் ஓர் கட்டடத் தொகுதியோ புத்தகக் கிடங்கோ அல்ல; ஒரு மாநிலத்தின் பண்பாட்டு அடையாளம் கூட. தனக்கு அரசியல் எதிரியான ஓர் அரசு உருவாக்கியது என்பதனாலேயே இப்போதைய அரசு அதை இடம் மாற்றுவது பண்பாட்டு அத்துமீறல்.
நூலகத்தை இடம் மாற்றும் முடிவுக்கு வந்திருப்பதன் காரணமாக அரசு தரப்பில் சொல்வது அல்லது சொல்வதாக ஊகிக்கப்படுவதில் தெளிவின்மை தான் நிலவுகிறது. நிர்வாகரீதியானவை, பண்பாட்டு ரீதியானவை, மக்களுக்கு உதவக் கூடியவை ஆகிய எந்தக் காரணமும் சொல்லப்படவேயில்லை. அரசியல் பகை மட்டுமே காரணம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. புதிய சட்டமன்ற வளாகத்தை முடக்கியதில் தென்பட்ட பகைமையே நூலக மாற்ற அறிவிப்பிலும் தெரிகிறது. கருணாநிதி கட்டிய கட்டடத்துக்குள் ஜெயலலிதா நுழைய மறுப்பதற்குக் காரணங்கள் இருக்கலாம். அது தனிப்பட்ட விவகாரம். ஆனால் அண்ணா நினைவு நூலகம் கருணாநிதியின் குடும்பச் சேமிப்பிலிருந்து செலவழித்துக் கட்டப்பட்டதல்ல. ஐந்தாண்டுகளுக்கு முன்பு இதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வர் மக்கள் பணத்திலிருந்து கட்டியது. அதை அதே போலத் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்னொரு முதல்வர் ரத்துச் செய்வது அரசியலல்ல; அகங்காரம். வன்மம்.
நூலகத்தைக் கட்டியதிலும் அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்கியதிலும் நூல்கள் வாங்கியதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதற்குப் பரிகாரம் நூலகத்தையே இடம் மாற்றுவதல்ல, மூடுவதல்ல. அப்படி ஊழல் நடந்திருக்கிறதா என்பதை அந்தத் திட்டச் செலவின் கோப்புகளிலிருந்து கண்டுபிடிக்க முடியும். அதையொட்டி மேல் நடவடிக்கைகள் எடுக்க முடியும். அதுவே சரியான நிர்வாக முறையும் அரசியல் செயல்பாடுமாக இருக்கும். கவனித்துப் பார்த்தால் நாம் வியந்து பாராட்டுகிற எந்த நினைவுச் சின்னத்திலும் பண்பாட்டு அடையாளத்திலும் முறைகேட்டின் பதிவைப் பார்க்க முடியும். புனிதமாகப் போற்றுகிற வழிபாட்டுத்தலங்களின் அஸ்திவாரத்தில் யாருடையதோ ரத்தமும் எவரெவரோ செய்த முறைகேடுகளும் புதைந்தே இருக்கின்றன. அவற்றின் பேரால் அந்த ஆலயங்களை இடித்து விடுவதோ, இடமாற்றம் செய்வதோ, நினைவுச் சின்னங்களைத் தகர்ப்பதோ நியாயமானதாகி விடுமா? அப்படிச் செய்யத் தூண்டுவது ஒரு நிலவுடைமை மனப்பான்மை; முடியாட்சித் திமிர். இந்த மனப்போக்குக் கொண்டவர்களைத் தான் நாம் மக்களாட்சியின் பெயரால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது எவ்வளவு வெட்கக் கேடு!
ஆனால் இதன் மூலம் பழிவாங்கப்படுவது கருணாநிதியல்ல, நாம்தான். நமக்குப் பின் வரவிருக்கும் தலைமுறைதான்.
நூலகங்கள் மருத்துவமனையைப் போன்ற உடனடிப் பயன் தரும் அமைப்பு அல்ல; அதன் விளைவுகள் நிதானமானவை. அதற்கு மிகச் சிறந்த உதாரணமும் திராவிட இயக்கம்தான். நூலகங்களும் படிப்பகங்களும் பத்திரிகைகளும் கலைச் செயல்பாடுகளும்தாம் இந்த இயக்கத்தை வளர்ந்து பரவ உதவியவை. அவை உருவாக்கிய பண்பாட்டுப் பின்புலத்தில் தான் இந்த இயக்கம் வேரூன்றியது. அரசியலில் கிளை பரப்பியது. அதன் பலன்களைத் தான் நூலகக் காவலரான கருணாநிதியும் நூலகப் பகைவரான ஜெயலலிதாவும் இன்று அனுபவிக்கிறார்கள். அத்தகைய பின்புலம் இல்லாததுதான் ‘விழுந்து கும்பிட்டான் சாமி’களாலும் நிலப் பறிக் கொள்ளையர்களாலும் இந்த இயக்கங்கள் இன்று நிரம்பியிருப்பதன் காரணமும்.
ஒரு மக்கள் சமூகம் சிந்திக்கவும் செயலில் ஈடுபடவும் அறிவுப் பின்புலம் (intellectual ambiance) தேவைப்படுகிறது. அதை உருவாக்குவதில் நூலகங்களில் பங்கு கணிசமானது. அந்தப் பின்புலத்திலிருந்துதான் தமக்கான அரசைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பற்றிய மக்கள் சிந்தனை எழுகிறது. வாசிப்பும் சிந்தனையும் அறிஞர்களின் வேலை என்று ஒதுக்கும் இயல்பு கொண்ட தமிழ் மக்களிடையே இந்தத் தலைமுறையில்தான் அறிவுக்கான தேடலின் அடையாளங்கள் முன்னை விட அதிகம் தென்படுகின்றன.
அது அவர்களுக்குக் கேள்வியே கேட்காத ஒரு மக்கள் மந்தையைத் தரும். அதிகார ஆட்டத்தைத் தொடர்ந்து நடத்த வசதியாக இருக்கும்.
.
அண்ணா நூற்றாண்டு நூலகம் அதே இடத்தில் இருக்க வேண்டியதும் தொடர்ந்து செயல்பட வேண்டியதும் மக்களின் விருப்பம். அதைத்தான் ஓர் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்த அரசு தேர்ந்தெடுக்கப்பட்டது. தனி நபர் காழ்ப்பின் பேரில் ஓர் அரசு அமைப்பை அல்லது மக்கள் அமைப்பைக் குளறுபடி செய்ய அனுமதிப்பது நம்மை நாமே விற்றுக் கொள்வதற்குச் சமம். நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பதன் மூலம் இடமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது நல்ல தருணம். நாம் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க விரும்புகிறோமா? அடிபணியும் மந்தையாக இருக்கபோகிறோமா? என்று முடிவெடுக்க.
0

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக