சனி, 12 நவம்பர், 2011

பாரதிராஜா பட விவகாரம் .பார்த்திபனுக்கு பதிலாக அமீர் நடிக்கிறார்


Parthiban and Bharathiraja

"பாரதிராஜாவின் 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனாலும் என் 20 வருட சினிமா வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு அனுபவம் நேர்ந்ததில்லை,'' என்று வருத்தப்பட்டுள்ளார் பார்த்திபன்.
சாதனை இயக்குநர் பாரதிராஜா தனது லட்சிய படைப்பாக, 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' என்ற படத்தை உருவாக்குகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக பார்த்திபன் நடிப்பார் என்றும், படப்பிடிப்பு 17-ந் தேதி தேனியில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. பட பூஜையும் தேனியிலேயே நடக்கிறது.
இந்த நிலையில், திடீரென்று 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' படத்தில் இருந்து பார்த்திபன் நீக்கப்பட்டுள்ளார். இதனை பார்த்திபனும் உறுதிப்படுத்தி, ட்விட்டரில் எழுதியிருந்தார்
'அவ்வளவு சம்பளம் கொடுக்க மாட்டார் பாரதிராஜா'
இதுபற்றி பார்த்திபன் அளித்துள்ள விளக்கத்தில், " நான் இயக்கி வரும் வித்தகன் படத்தை தயாரிக்கும் மாணிக்கம் நாராயணன் ஒருநாள் என்னிடம், "ஒரு பெரிய இயக்குநரின் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும். எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார். நான் ஒரு தொகையை சொன்னேன்.

"அவர் அவ்வளவு சம்பளம் கொடுக்க மாட்டார்'' என்று சொன்ன மாணிக்கம் நாராயணனிடம், "யார் அந்த டைரக்டர்?'' என்று கேட்டேன். "பாரதிராஜா'' என்றார்.

"அவர் படம் என்றால், சம்பளம் இல்லாமலே கூட நடிக்க தயார். அவர் பக்கத்தில் இருந்தாலே போதும்'' என்றேன். குறைவான சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். பாரதிராஜா படத்தில் நடிக்க வேண்டும் என்று நான் வாய்ப்பு கேட்டு போகவில்லை. அவர்தான் என்னை அழைத்தார். இரண்டு மூன்று முறை என்னை அழைத்து, நான் நடிக்க வேண்டிய 'கட்டுவிரியன்' என்ற கதாபாத்திரம் பற்றி விளக்கினார். ஒரு தொகையை 'அட்வான்ஸ்' ஆக கொடுத்தார். பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார்.

நான் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பேனா? என்று 'டெஸ்ட்' எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் திடீரென்று, "போட்டோ எடுக்க வேண்டும்'' என்றார்கள். நான் போட்டோ எடுத்துக்கொடுத்து அனுப்பினேன். போட்டோவை பார்த்துவிட்டு, "சட்டை தைத்து போட்ட மாதிரி, அந்த கதாபாத்திரத்துக்கு பார்த்திபன் பொருத்தமாக இருக்கிறார்'' என்று பாரதிராஜா கூறியிருக்கிறார்.

மேலும் ஒரு போட்டோ ஷூட்டுக்காக கடந்த 9-ந் தேதி நான் தேனி போய் இருக்க வேண்டும். பாரதிராஜா அலுவலகத்தில் இருந்து தகவல் எதுவும் வரவில்லை. 10-ந் தேதி, அமீரை வைத்து போட்டோ சூட் எடுப்பதாக தகவல் அறிந்தேன். ஆனால், இந்த நிமிடம் வரை எனக்கு பாரதிராஜாவிடம் இருந்து தகவல் சொல்லப்படவில்லை.

என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியாது. சீமந்தமா நடக்கிறது, 'செண்டிமெண்ட்' பார்க்க? சினிமாதானே பண்ணுகிறோம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு, 'வித்தகன்' படத்தின் ரிலீஸ் வேலைகளில் ஈடுபட்டேன்.

20 ஆண்டுகளில் கிடைக்காத அனுபவம்

பாரதிராஜா படத்தில் நடித்தால் புது அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். இப்படி ஒரு அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

பாரதிராஜா படத்தில் நீங்கள் நடிக்கவில்லையா? என்று என்னிடம் சேரன் உள்பட நிறைய பேர் விசாரித்தார்கள். அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வது, எனக்கு சங்கடமாக இருக்கிறது.

எது எப்படியோ... பாரதிராஜாவின் லட்சிய படம் வெற்றி பெற வாழ்த்துகள்,'' என்றார்.

கருத்துகள் இல்லை: