திங்கள், 7 நவம்பர், 2011

Renault இந்தியாவுக்கு புத்தம் புதிய சின்ன கார்: ரினால்ட்


Renault small car
புதிய பிளாட்பார்மில் இந்திய மார்க்கெட்டுக்காக புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரை வடிவமைக்க ரினால்ட் திட்டமிட்டுள்ளது.
மஹிந்திரா கூட்டணியிலிருந்து வெளியேறிய பின்னர் பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம் புளூயன்ஸ் பிரிமியம் செடான் காருடன் இந்திய மார்க்கெட்டில் களமிறங்கியது.
இதைத்தொடர்ந்து, கோலியோஸ் பிரிமியம் எஸ்யூவியையும் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த பார்முலா-1 கார் பந்தயத்தின்போது புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தப் போவதாக ரினால்ட் அறிவித்தது.
இதனால், ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் 29ந் தேதி பல்ஸ் என்ற பெயரில் புதிய ஹேட்ச்பேக் காரை நொய்டாவில் அறிமுகப்படுத்தியது.
ஆனால், ரினால்ட் அறிமுகப்படுத்திய புதிய பல்ஸ் ஹேட்ச்பேக் கார் அந்த நிறுவனத்தின் கூட்டாளியான நிசான் விற்பனை செய்து வரும் மைக்ராவின் அச்சு அசலாக இருப்பதால் மார்க்கெட்டில் எதிர்பார்த்த இடத்தை பிடிக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை தக்க வைத்துக்கொள்ளும் விதமாக ரினால்ட் நிறுவனம் புதிய பிளாட்பார்மில் இந்தியாவுக்காக புதிய ஹேட்ச்பேக் காரை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ரினால்ட் நிறுவனத்தின் சிஓஓ., கார்லோஸ் தவேராஸ் கூறியதாவது:

"பிரேசில், ரஷ்யாவுக்கு அடுத்து உலக அளவில் இந்திய மார்க்கெட்டை மிக முக்கியமான மார்க்கெட்டாக கருதுகிறோம். எனவே, புதிய பிளாட்பார்மில் புதிய ஹேட்ச்பேக் காரை வடிவமைக்கும் திட்டம் இருக்கிறது.

இதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் சாதகமாகவே இருக்கிறது," என்றார்.

இந்திய மார்க்கெட்டை கருத்தில்க்கொண்டு லிவா காரை டொயோட்டோவும், பிரியோ காரை ஹோண்டாவும், இயான் காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால், மார்க்கெட்டில் பெரும் போட்டி நிலவுவதால், ரினால்ட் நிறுவனமும் இந்திய மார்க்கெட்டுக்காக புதிய பிளாட்பார்மில் புதிய ஹேட்ச்பேக் காரை வடிவமைகக் திட்டமிட்டுள்ளதாக ஆட்டோ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: