செவ்வாய், 8 நவம்பர், 2011

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை 27இல் திறப்பு


எதிர்வரும் 27ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டதன் பின் அதில் பயணிக்க ஆகக்குறைந்த கட்டணமாக 100 ரூபாவும் முழு தூரமும் செல்ல கார் ஒன்றுக்கு 400 ரூபாவும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.130.9 கிலோமீற்றர் வீதி அமைக்கும் இத்திட்டத்தின் ஒரு கட்டமாக 126 கிலோ மீற்றர் நீளமான அதிவேக வீதி அமைக்கப்படுகின்றது. இவ்வீதியானது கொழும்பிலிருந்து மாத்தறை வரை நீண்டு செல்கின்றது. பல பாதுகாப்பு வசதிகளைக் கொண்டு அமைக்கப்படும் இதன் நிர்மாணப்பணிகள் 2003 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது பூரத்தியடைந்துள்ளன.
இந்த வீதியினூடாக ஆகக் குறைந்த வேகமாக 60 கி.மீ வேகத்திலும், ஆகக் கூடியதாக 120 கி.மீ வேகத்திலும் பயணிக்கலாம் எனவும் முச்சக்கர வண்டிகளும், மோட்டார் சைக்கிள்களும் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியின் நிர்மாணத்திற்கான நிதி உதவிகளை சர்வதேச ஜப்பான் வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன வழங்கியுள்ளன.
நான்கு கட்டமாக அமைந்து காணப்படும் இவ்வீதியில் கொழும்பிலிருந்து மாத்தறைக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லக் கூடியதாக இருப்பதோடு, ஒன்றரை மணித்தியாலங்களில் பயணத்தை முடித்துக் கொள்ளலாமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வீதியில் 22 பாலங்கள் காணப்படுகின்றன.
திறக்கப்படவுள்ள தெற்கு அதிவேக வீதியின் வாகன போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நியமிக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபைத் தலைவரும் பொது பணிப்பாளருமான ரஞ்சித் பிரேமசிறி தெரிவித்தார்.
கொட்டாவ தொடக்கம் காலி, பின்னதுவ வரையுள்ள வீதியில் எட்டு பொலிஸ் நிலையங்களை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் மேலும், வாகனங்களுக்கான கட்டண அறவீடானது, கார், வேன், பஸ், லொரி மற்றும் கொள்கலன் என்ற நான்கு வாகன பிரிவின் அடிப்படையிலும், பயணிக்கும் தூரத்தின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வீதியின் உட்பிரவேசிக்கும் இடத்தில் வழங்கப்படும் பற்றுச்சீட்டானது வெளியேறும் இடத்தில் பரீட்சிக்கப்பட்டு, பின்னர் பணம் அறவிடப்படும் எனவும் இவ்வாறான அறவீடுகள் தொடர்பான விடயங்களை வர்த்தமானி ஒன்றின் மூலம் வெளிப்படுத்தவுள்ளதாகவும் ரஞ்சித் பிரேமசிறி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: