செவ்வாய், 8 நவம்பர், 2011

அப்துல் கலாம் கூடங்குளம் சென்று வந்துள்ளார்

அப்துல் கலாம் கூடங்குளம் சென்று வந்துள்ளார். அங்குள்ள அணு மின் உலை அபாயமற்றது; வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லியுள்ளார். இது கிட்டத்தட்ட எதிர்பார்த்ததுதான். அப்துல் கலாம் அணு மின்சாரத்தின்மீது நம்பிக்கை கொண்டவர். (நானும்தான்.) எனவே அவர் மாற்றாக எதையும் சொல்லியிருக்கப்போவதில்லை.
ஆனால் பிரச்னை, அப்துல் கலாம் ஒரு அணு விஞ்ஞானியா என்பதைப் பற்றியது. அவர் அணு விஞ்ஞானி அல்லர். அப்படி அவர் தன்னை ஒருபோதும் சொல்லிக்கொண்டதில்லை. அவர் ஒரு ஏரோனாட்டிகல் பொறியாளர். ஒரு கட்டத்தில் இந்தியாவின் அணு ஆயுதச் சோதனைத் திட்டத்துக்குத் தலைமை தாங்கியுள்ளார். அது மட்டுமே அவரை அணு விஞ்ஞானி ஆக்கிவிடாது.
அப்படியானால், அப்துல் கலாமால் அணு சக்தி பற்றிய விஷயங்களையும் அது தொடர்பான அபாயங்களையும் புரிந்துகொள்ள முடியாது என்றா சொல்வது? இல்லை! நல்ல அறிவியல் புரிதல் கொண்ட எவராலுமே அணு சக்தி, அதன் ஆற்றல், அதன் அபாயங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் போன்ற பலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். மேலும், அணு ஆயுதச் சோதனைத் திட்டத்துக்குத் தலைமை தாங்கிய ஒருவருக்குக் கட்டாயம் இதுபற்றி நல்ல புரிதல் இருந்தாகவேண்டும்.

அந்த மட்டத்தில், அவரை அணு விஞ்ஞானி என்று அழைக்காமல் போகலாமே தவிர, கூடங்குளத்தில் பிறர் சொல்வதுபோல ஆபத்து என்பதெல்லாம் இல்லை என்று அவர் சான்றிதழ் கொடுத்தால் கட்டாயம் ஏற்றுக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

கலாம் அல்லர் அரசியல்வாதி. அவர் குஜராத் கலவரம் பற்றி என்ன சொன்னார், இலங்கைப் படுகொலை பற்றி என்ன சொன்னார் என்றெல்லாம் கேட்பவர்கள்தான் அரசியல்வாதிகள்! அறிவியல், தொழில்நுட்பம் மூலம் உலகை நல்லபடியாக மாற்றமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கும் கலாம், அது தொடர்பான விவாதங்களில்தான் பங்கெடுக்க விரும்புகிறார் என்பது வெளிப்படை. பிற விஷயங்களில் கருத்து சொல்ல அவர் தயங்குகிறார். எனவே, அதில் அவர் கருத்து என்ன, இதில் அவர் கருத்து என்ன என்று தோண்டிப் பார்க்காமல், அணு சக்தி தொடர்பாக அவர் நியாயமான கருத்தை முன்வைக்கக்கூடியவரா என்பதை மட்டும்தான் பார்க்கவேண்டும்.

அவரை நம்பாதவர்கள், அவரை அரசவைக் கோமாளி என்று சாடுபவர்கள் சாடிவிட்டுப் போங்கள்.

கருத்துகள் இல்லை: