செவ்வாய், 8 நவம்பர், 2011

பா.ம.க.-வின் பெரிய-சின்ன ஐயாக்களும் ‘திகார்’ பக்கம் ஒதுங்க வேண்டுமோ!


Viruvirupu
சென்னை, இந்தியா: பா.ம.க. சார்பில் மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி, பெட்டி படுக்கைகளுடன் திண்டிவனத்தில் வந்து இறங்கியபின், பா.ம.க.வுககு டில்லியில் பெரிதாக அலுவல் ஏதும் இல்லாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக டில்லியில், பா.ம.க. குரல்கள் சில ‘கிசுகிசுப்பாக’ ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
‘கிசுகிசுப்பாக’ என்று எழுதியதால் அதெல்லாம் அரசியல் விவகாரம் அல்ல என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இது ஒரு கிரிமினல் கேஸ் தொடர்பான விவகாரம். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ஆகியோரின் பெயர்களும் சார்ஜ்-ஷீட்டில் உள்ள கொலை வழக்கு இது.

இதற்காக ஏன் டில்லிவரை பா.ம.க.வின் குரல் ஒலிக்க வேண்டும்? காரணம் சென்னை உயர் நீதிமன்றம், இந்த கொலை வழக்கை மத்திய அரசின் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த வாரம் உத்தரவிட்டது. அதுவே பா.ம.க. தலைமைககு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய உத்தரவு.அது போதாது ஒன்று உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் மேலதிக வாக்கியம் ஒன்றையும் சேர்த்திருந்தது!
“இந்த வழக்கில் ஏற்கெனவே 5 ஆண்டுகள் காலதாமதம் ஆகியுள்ளதால், சி.பி.ஐ கேஸ் பதிவு செய்ததில் இருந்து, 4 மாதங்களுக்குள் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. இயக்குநருக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது” என்பதுதான் அந்த வாக்கியம்!
இதற்குப் பின்பும் பெரிய-சின்ன ஐயாக்கள் டில்லிக்கு ஆள் அனுப்பாமல், திண்டிவனத்தில் சும்மா உட்கார்ந்து இருக்கவா முடியும்?
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், நீண்ட காலத்துக்கு முன் தொடர்ந்த வழக்கு இது. கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சி.வி. சண்முகம் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டார். ராமதாசின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட அந்தத் தொகுதியில் பா.ம.க.வும் போட்டியிட்டது.
சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்கள் சிலருடன் மே 8-ம் தேதி இரவு தனது வீட்டிற்கு எதிரில் நின்று பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஆயுதம் தாங்கிய கும்பல் அவர்களின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் முருகானந்தம் என்பவர் உயிரிழந்தார். சி.வி. சண்முகம் அருகே பார்க் பண்ணப்பட்டிருந்த கார் ஒன்றின் கீழ் மறைந்து படுத்ததால் உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் பற்றி சி.வி. சண்முகம் கொடுத்த புகாரில், ராமதாஸ், அன்புமணி உட்பட சிலர் தன்னைக் கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும், இதற்காக ரகு என்பவரின் தலைமையில் கூலிப்படை நபர்களை ஏவியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். காவல்துறை பதிவு செய்த் எஃப்.ஐ.ஆரில், ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
ஆனால், பைனல் கிரைம் ரிப்போர்ட்டில், இரு ஐயாக்களின் பெயர்களும் மாயமாகி விட்டிருந்தன!
சி.வி. சண்முகம் இதை சும்மா விடாமல், அவர்கள் இருவரது பெயர்களையும் மீண்டும் சேர்க்கச் சொல்லி மனு செய்தார். அந்த மனுவுக்கு ரெஸ்பான்ஸ் ஏதுமில்லை. அதன்பிறகு பல்வேறு மனுக்கள் அவரது தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டன. எதற்கும் எந்த ஆக்ஷனும் கிடையாது. காரணம், அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தது தி.மு.க. ஆட்சி.
பா.ம.க., தி.மு.க.-வின் கூட்டணிக் கட்சியாக இருந்தது. கூட்டணிக் கட்சித் தலைவரை வழக்கில் சேர்ப்பார்களா?
இறுதியில், “இந்த வழக்கை மாநில அரசு சரியாக கையாள்வதாக தெரியவில்லை. எனவே வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்ற மனு சி.வி. சண்முகத்தால் கொடுக்கப்பட்டது. அந்த மனுதான், இப்போது அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவில் உள்ள விபரங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி, அதை தனது தீர்ப்பிலும் குறிப்பிட்டார். “குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு (ராமதாஸ், அன்புமணி) உதவும் வகையில்தான் இதுவரை விசாரணை நடைபெற்றுள்ளது என்ற மனுதாரரின் வாதத்துக்கு ஆதாரங்கள் உள்ளன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர்களில் ஒருவரான ரகு என்பவர் இறந்து விட்டார். அதன்பின், அவர் மட்டுமே இந்தத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தினார் என்ற வகையில் விசாரணை நடந்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் கைது செய்தபோது, அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. அவற்றைப் பறிமுதல் செய்திருந்தால் கொலைச் சதி குறித்து தெரியவந்திருக்கும்.
எனவே, இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை என்ற வாதத்தை ஒதுக்க முடியவில்லை. இந்த வழக்கில் போலீஸார் நடுநிலையாக விசாரிக்கத் தவறிவிட்டனர். எனவே, இந்த வழக்கை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வசம் ஒப்படைக்க விரும்பவில்லை. வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் ஏற்கெனவே 5 ஆண்டுகள் காலதாமதம் ஆகியுள்ளதால், சி.பி.ஐ கேஸ் பதிவு செய்ததில் இருந்து, 4 மாதங்களுக்குள் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. இயக்குனருக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது” என்பது அவரது தீர்ப்பு.
இந்த விவகாரம், நீண்ட காலமாக பா.ம.க.வின் பெரிய, சிறிய ஐயாக்களின் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தி! தி.மு.க. ஆட்சி நடைபெற்ற 5 ஆண்டுகளும், மாநில அரசின் உதவியுடன் இவர்கள் தப்பித்து வந்தனர்.
இப்போது வழக்கு டில்லியில் உள்ள சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ராமதாசின் போதாத காலம், டில்லியில் பேரம்பேச இவர்கள் கைவசம் எம்.பி.க்களும் கிடையாது. அட்லீஸ்ட் 2 எம்.பி.க்கள் இருந்தாலாவது, ஆட்சிக்கு ஆதரவு தருகிறோம் என்று போய், இந்த கேஸை அமுக்கலாம்.
இப்படியான நிலையில்தான், இந்த விஷயத்தில் ‘ஏதாவது’ செய்ய முடியுமா என்று பார்ப்பதற்காக பெரிய ஐயாவின் ஆட்கள் டில்லி வந்து இறங்கியிருக்கிறார்கள். சின்ன ஐயாவின் பழைய டில்லி தொடர்புகளை தேடித்தேடி சந்தித்து வருகிறார்கள். இதுவரை ஏதாவது அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடிந்ததாகத் தெரியவில்லை.
சி.பி.ஐ. கேஸ் என்று வரும்போது, கலைஞரே டில்லி விசிட் அடிக்க வேண்டியுள்ளது. கைவசம் கணிசமான எம்.பி.க்களை வைத்திருக்கும் அவருக்கே டில்லி விசிட் அடிக்க வேண்டிய நிலை என்றால், ஜீரோ-பேலன்ஸில் உள்ள இவர்கள் என்னவெல்லாம் அடிக்க வேண்டியிருக்குமோ!
-டில்லியிலிருந்து நர்மதா பானர்ஜியின் குறிப்புகளுடன், ரிஷி.

கருத்துகள் இல்லை: