கனடிய “சுப்பர் விசா” திட்டமானது தேங்கியுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கே! குடிவரவு அமைச்சர் ஜெய்சன் கென்னி‘
கடந்த வாரம் கனடிய அரசு அறிவித்துள்ள “சுப்பர் விசா” திட்டமானது ஏற்கெனவே தேங்கிக் கிடக்கும் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கே ஆகும். இவ்வாறு கடந்த சனிக்கிழமையன்று கனடிய தமிழ் பத்திரிகைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் ஜெய்சன் கென்னி தெரிவித்தார்.இந்த புதிய முறையை நாம் அறிமுகம் செய்யாவிட்டால் இன்னும் சில வருடங்களில் பெற்றோர் மற்றும் உறவினர்களை “ஸ்பொன்சர்” செய்யும் விண்ணப்பங்கள் மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக தேங்கிக் கிடக்கும் நிலை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒட்டாவா மாநகரிலிருந்து தொலைபேசி மூலமாக குடிவரவு அமைச்சர் திரு ஜெய்சன் கென்னி கனடிய தமிழ் பத்திரிகையின் பிரதான அலுவலகத்திலிருந்த அதன் பிரதம ஆசிரியரோடு பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.பிரதம ஆசிரியர் இடையில் கேட்ட சில கேள்விகளுக்கு அவர் பதில்களைத் தந்தார். ஆனாலும் அவரது பேட்டியின் நோக்கம் தனது அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள “சுப்பர் விசா” திட்டம் பற்றி நமது தமிழ் மக்களுக்கு உள்ள சந்தேகங்களை தீர்த்து வைப்பதே என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் ஜெய்சன் கென்னி தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள “சுப்பர் விசா” முறையானது கனடாவில் வசிப்பவர்களின் பெற்றோர் அல்லது பெற்றோரின் பெற்றோர் ஆகியோரை இங்கு அழைப்பதில் எவ்விதமான தடையையும் ஏற்படுத்தாது.
ஆனாலும் ஆரம்பத்தில் தமது தாய்- தந்தை அல்லது பாட்டா – பாட்டி ஆகியோரை கனடாவிற்கு அழைக்க எண்ணுபவர்கள் சாதாரண “ஸ்பொன்சர்” செய்கின்றபோது காத்திருக்கின்ற கால அளவு மிக நீண்டதாக உள்ளது.
எனவே அதனைக் குறைப்பதற்கே இந்த புதிய முறை. தாங்கள் அழைக்கும் தாய் தந்தை அல்லது பாட்டா பாட்டி ஆகியோரை பராமரிக்கும் வகையில் அவர்களுக்கு வருமானம் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் அவர்களின் மருத்துவம் தொடர்பான செலவுகளைச் சமாளிக்க தேவையான காப்புறுதி செய்திருக்க வேண்டும்.
இந்த இரண்டு தகுதிகளையும் கொண்டவர்கள் மிக விரைவாக தங்கள் தாய், தந்தை அல்லது பாட்டா பாட்டி ஆகியோரை கனடாவிற்கு அழைக்கலாம். அவர்கள் பத்துவருட காலத்தில் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் இங்கு தங்கியிருக்கலாம். அவர்களுக்கு “மல்டிபிள் விசா” வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் தங்கள் உறவுகளை கனடாவில் வாழ்பவர்கள் மிக விரைவாக சந்திக்கவோ அன்றி சேர்ந்து வாழவோ இங்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.
இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க எமது அரசாங்கமும் குடிவரவுத் திணைக்களமும் சேர்ந்து முன்னைய நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
“சுப்பர் விசா மூலம் பல நன்மைகள் உள்ளன. உதாரணமாக தற்போது அவுஸ்த்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் 6 அல்லது 7 மாதங்களில் “ஸ்பொன்சர்” செய்யப்பட்டவர்களுக்கு தகுதியானவர்கள் என்று காணப்படுகின்றவர்களுக்கு விசா வழங்கப்படுகின்றது.
ஆனால் கனடிய தூதரங்களில் சுமார் 6 அல்லது 7 வருடங்கள் எடுக்கின்றன. இந்த காத்திருத்தல் அல்லது தேங்கிக் கிடத்தல் முறையை நமது புதிய “சுப்பர் விசா” திட்டம் அகற்றி விடுகின்றது.
இந்த சுப்பர் விசா முறை அமுலில் இருக்கின்றபோது நாம் நமது முன்னைய திட்டத்தை புதிப்பித்தோ அன்றி மறுசீரமைத்தோ பல மாற்றங்களைக் கொண்டு வரலாம்.” என்றார் அமைச்சர் ஜெய்சன் கென்னி.
பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கனடாவிற்கு அழைக்கப்படுகின்ற பெற்றோர் அல்லது பாட்டா பாட்டி ஆகியோரின் வருகை எவ்வாறு அதிகரிக்கும் என்று கேட்டபோது அமைச்சர் கூறியது:
“தற்போது வருடக்கணக்கில் தமது விசாவிற்காக காத்திருக்கும் அவர்கள் “சுப்பர் விசா” திட்டத்தின் மூலம் விருந்தினர் விசா பெற்று மிகவும் விரைவாக இங்கு வந்து சேர்ந்து தமது உறவுகளோடு வாழலாம்.
அத்துடன் இந்த தமது சாதாரண விசா தொடர்பான மாற்றங்கள் அமுலுக்கு வந்த பின்னர் அவர்கள் கனடிய நிரந்தர வதிவிடம் சார்ந்த விசாவிற்கு விண்ணப்பித்து கனடாவிற்கு மீண்டும் வரலாம். முன்னர் கனடாவில் வாழ்ந்த அனுபவத்தோடு அவர்கள் மீண்டும் நிரந்தர விசா பெற்று கனடாவிற்கு வரலாம் எனவும் கூறினார்.
கனடாவிற்கு ஆட்களைக் கடத்தி வருபவர்கள் தொடர்பாக கேட்ட கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதில் தருகையில்,
கனடாவிற்கு பல்வேறு வழிகளில் ஆட்களைக் கடத்திவரும் சட்டவிரோத செயலுக்கு நமது அரசாங்கம் பலத்த அடி கொடுத்துள்ளது.
தாய்வான் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அமைச்சர் என்ற வகையில் நானும் மற்றும் ஆர்சிஎம்பி பொலிஸ் அதிகாரிகளும் கனடா போர்டர் ஏஜென்சி நிறுவனத்தின் அதிகாரிகளும் செய்த விஜயமும் அங்கு நாம் சந்தித்த அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளும் நல்ல பலனைத் தந்துள்ளன.
எனவே பொய்யான விபரங்களைக் கூறி அதிகளவு பணம பெற்று முன்னர் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் இனிமேல் அவ்வாறு செய்ய முடியாமல் பல தடைகள் போடப்பட்டுள்ளன.
தற்போது தென்னாசிய நாடுகளில் உள்ள தடைகள் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக ஆட்கடத்தல் காரர்கள் அட்லான்டிக் நாடுகளுக்கு நகர்ந்துள்ளனர்.
இந்து நாடுகளிலும் நமது பார்வை சென்றுள்ளது. அங்கு நமது பொலிஸ் அதிகாரிகளும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளும் விஜயம் செய்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார்கள்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக