மகாராஷ்டிராவின் புனே பகுதியில் அமைந்திருக்கும் மாவல் வட்டம் மழை வளமும் நீர் ஆதாரங்களும் நிறைந்த வளமான பூமி. விவசாயம்தான் இந்தப் பகுதி மக்களின் ஒரே வாழ்வாதாரம். இப்பகுதியில் அமைந்துள்ள பாவ்னா அணைக்கட்டைதான் விவசாயிகள் பாசனத்திற்கு பெரிதும் நம்பியுள்ளனர். இந்த அணைக்கட்டிலுள்ள நீரை, பிம்ப்ரி சிஞ்ச்வாட் தொழிற்பேட்டை நகருக்கு எடுத்துச் செல்லவும், அதற்குத் தேவையான குழாய்களைப் பதிப்பதற்காக மாவல் பகுதியைச் சேர்ந்த விவசாய நிலங்களைக் கையகப்படுத்தவும் மகாராஷ்டிரா அரசு முனைந்து வருகிறது.
மைய அமைச்சரான சரத் பவார் குடும்பத்தின் அரசியல் நலனுக்காகவே தீட்டப்பட்டுள்ள இத்திட்டத்தை எதிர்த்து, கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அம்மாநில அரசு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மண் தோண்டும் இயந்திரங்களைக் கொண்டு வந்து குழாய்களைப் பதிப்பதற்கான வேலைகளைத் தொடங்கியது. “நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி குழாய்களைப் பதிப்பதற்கு விவசாயிகளின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை” என இந்த அடாவடித்தனமான நிலப்பறிப்பை நியாயப்படுத்தினார், புனே மாவட்ட ஆணையாளர்.
அப்பகுதி விவசாயிகள் கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதியன்று இந்த நிலப்பறிப்பை எதிர்த்து மாவல் வட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தியதோடு, மும்பய் புனே அதிவிரைவுச் சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இச்சமயத்தில் எப்படியாவது ஒரு கலவரச் சூழலை ஏற்படுத்திவிட வேண்டும் எனத் திட்டம் போட்டுக் காத்திருந்த போலீசு, விவசாயிகள் மறியல் போராட்டத்தை முடித்துவிட்டுக் கலைந்து செல்லவிருந்த சமயத்தில், ஏக்நாத் திலே, தியானேஷ்வர் தால்வி ஆகிய இரு உள்ளூர் விவசாய சங்கத் தலைவர்களைக் கைது செய்ய முனைந்தது. அவர்கள் கைது செய்யப்படுவதை விவசாயிகள் தடுக்க முனைந்தபொழுது, அதனையே காரணமாக வைத்து இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியது.
போலீசு துப்பாக்கிச் சூட்டை நடத்தத் தொடங்கியவுடனேயே விவசாயிகள் மும்பய் புனே விரைவுச் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வேலியைத் தாண்டி ஓடத் தொடங்கினர். ஆனால், போலீசாரோ தப்பியோடும் விவசாயிகளைக்கூட விட்டுவிடாமல், தமது கைத்துப்பாக்கியைக் கொண்டு கண்மூடித்தனமாகச் சுட்டனர்.
தப்பியோடிக் கொண்டிருந்த காந்தாபாய் தாகர் என்ற தாய், தனது மகனும் ஓடிவந்து கொண்டிருக்கிறனா எனத் திரும்பிப் பார்த்தபொழுது, அவர் மார்பில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். ஆறடி தூரத்திற்குள்தான் அவர் சுட்டு வீழ்த்தப்பட்டார். இவரைப் போலவே, ஷாம்ராவ் துபே என்ற விவசாயியும் மிகவும் அருகாமையிலிருந்து நேருக்கு நேராகக் கழுத்தில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
மற்றொரு விவசாயியான மோரேஷ்வர் சாதே சுட்டுக் கொல்லப்பட்ட விதமோ மிகவும் கொடூரமானது. போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்க முயன்ற சாதேயையும் மற்ற சில விவசாயிகளையும் பிடித்துக் கொண்ட போலீசார், சாதேயை போலீசு வேனுக்குள் குண்டுகட்டாகத் தூக்கியெறிய முயன்றனர். எனினும், ஆறடி உயரமும், வலிமையான உடற்கட்டும் கொண்ட மோரேஷ்வர் சாதே போலீசின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மல்லுக்கட்டவே, அவரை போலீசார் விட்டுவிட்டனர். அதேசமயம் அவர் வேனிலிருந்து வெளியே வந்து நடக்கத் தொடங்கியவுடனேயே, அவரின் கழுத்தைக் குறிவைத்துச் சுட்டுக் கொன்றனர்.
விவசாயிகளைக் குருவிகளைப் போலச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற திட்டத்தோடுதான் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்பதை இம்மூன்று விவசாயிகள் கொல்லப்பட்ட விதமும், 18 விவசாயிகளின் காயங்களும் எடுத்துக் காட்டிவிட்டன. இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியதோடு மட்டும் நின்றுவிடாமல், இத்துப்பாக்கிச் சூடு காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டு நின்றுகொண்டிருந்த கார்களை அடித்தும் நொறுக்கியது, காக்கிச் சட்டை கிரிமினல் கும்பல்.
தாங்கள் நடத்திய இந்த வன்முறை வெறியாட்டத்தை விவசாயிகள் நடத்தியதாகப் பிரச்சாரம் செய்து இத்துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முயன்ற மகாராஷ்டிரா போலீசின் கிரிமினல்தனம் மகாராஷ்டிரா மக்கள் மத்தியில் எடுபடவில்லை. குறிப்பாக, மோரேஷ்வர் சாதே கார்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தபொழுதுதான் சுட்டுக் கொல்லப்பட்டதைப் போல ஒரு வீடியோ படத்தைத் தயாரித்து வெளியிட்டது, போலீசு. அந்த வீடியோ படத்தில் இருந்தவன் தாடி வைத்திருந்தான். ஆனால், மோரேஷ்வர் சாதேவோ இச்சம்பவம் நடந்துபொழுது சவரம் செய்யப்பட்ட முகத்துடன் இருந்ததை அத்துப்பாக்கிச் சூட்டைப் படமெடுத்த பத்திரிகையாளர்களின் புகைப்படங்கள் எடுத்துக் காட்டி, போலீசின் மோசடியை அம்பலப்படுத்திவிட்டன.
மாவல் மட்டுமின்றி, புனேக்கு அருகே உருவாகிவரும் லாவாசா தனியார் நகரம், ஜெய்தாய்பூர் அணு உலைத் திட்டம், அமராவதியில் தனியார் அமைக்கும் சோபியா மின்சார உற்பத்தித் திட்டம் எனப் பல்வேறு கார்ப்பரேட் திட்டங்களுக்கான நில அபகரிப்புகளும் அதற்கு எதிரான போராட்டங்களும் நிறைந்த மாநிலமாக இன்று மகாராஷ்ரா உள்ளது. சோபியா மின் திட்டத்திற்குத் தேவைப்படும் தண்ணீர், மேல் வார்தா அணைக்கட்டிலிருந்து திறந்துவிடப்படும்பொழுது 23,219 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன நீரின்றித் தரிசாகிவிடும் என அம்மாநில அரசே குறிப்பிடுகிறது. குறிப்பாக, இத்தகைய தனியார் திட்டங்களுக்குத் தேவைப்படும் தண்ணீரை உத்திரவாதப்படுத்துவதற்கு ஏற்றபடிதான் மகாராஷ்டிரா நீர் ஆதார ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்திட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளின் மனதில் அச்சத்தை உருவாக்கி, அவர்களைப் போராட்டங்களிலிருந்து பின்வாங்க வைத்துவிட வேண்டும் என்ற பின்னணியோடுதான் இத்துப்பாக்கிச் சூட்டையும், அதனைத் தொடர்ந்து மாவல் பகுதியில் தேடுதல் வேட்டை, கைது, பொய்வழக்கு என அரசு பயங்கரவாதத்தையும் மகாராஷ்டிர மாநில அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
விவசாயிகளின் நலனைக் கருத்திற்கொண்டு புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக காங்கிரசு கும்பல் பீற்றிக் கொண்டிருக்கும் நிலையில்தான், உ.பி.யில் நொய்டா; மகாராஷ்டிராவில் ஜெய்தாபூர், மாவல்; ஆந்திராவில் காகரபள்ளி என விவசாயிகள் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூடுகளின் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. போராடும் விவசாயிகளை ஏய்ப்பதற்காகவே இப்புதுச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை மட்டுமல்ல, நிலவுகின்ற அரசியல் அமைப்பு போராடும் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச நியாயத்தைக்கூட வழங்காது என்பதையும் இத்துப்பாக்கிச் சூடுகள் நமக்கு எடுத்துக் காட்டவில்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக