வெள்ளி, 2 செப்டம்பர், 2011

அதியுயர் பாதுகாப்பு வலயமும் ரத்து-கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்!

அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் அமுலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு அமைய அதியுயர் பாதுகாப்பு வலயமும் ரத்து-கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்!


அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் அமுலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு அமைய அதியுயர் பாதுகாப்பு வலயமும் ரத்தாவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சிங்கள நாளேடு ஒன்றுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதியுயர் பாதுகாப்பு வலயத்தை நடைமுறைப்படுத்தும் அவசியம் இல்லையென்று தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, ஆகையால் அதற்கான புதிய கட்டளை அமுலுக்குக் கொண்டு வருவதற்கான அவசியம் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 புதிய கட்டளைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச'வினால் விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்பு மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகளைத் தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்கவும் தடுப்புக் காவலில் இருக்கும் புலி உறுப்பினர்கள் மற்றும் சந்தேக நபர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைத்துக் கொள்ளவும் ஜனாதிபதியினால் இந்தக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச'வுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 27 ஆவது சரத்தின் கீழ் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் புதிய கட்டளைகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.

அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் நேற்று வியாழக்கிழமை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளமையால் இந்த புதிய கட்டளைகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாக மொஹான் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் அமைப்பு மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இரண்டும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பெயரிடப்பட்டிருப்பதும் புலி சந்தேக நபர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதும் அதேபோல் முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்படுவதும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தான் என்பதால் அந்த ஒழுங்கு விதிகள் ரத்தாகும் அதேநேரம், அதற்குப் பதிலாக புதிய சட்டம் தேவைப்பட்டதாகவும் சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: