புதன், 31 ஆகஸ்ட், 2011

அப்பாவி மக்களை அச்சுறுத்தும் செயல்களை அனுமதிக்க முடியாது!...

மர்ம மனிதன் என்ற போர்வையில் அப்பாவி மக்களை அச்சுறுத்தும் ஈனச்செயல்களை எவராலும் அனுமதிக்க முடியாது!...
டக்ளஸ் தேவானந்தா
மர்ம மனிதன் என்ற போர்வையில் எமது மக்களின் அமைதியான வாழ்வின் மீது அச்சுறுத்தல் விடுத்து, அப்பாவி மக்களை பதற்றம் நிறைந்ததொரு இருண்ட வாழ்விற்குள் மறுபடியும் தள்ளிவிட எத்தனிக்கும் ஈனச்செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், எமது மக்களின் கடந்த கால வரலாறு என்பது அழிவுகளையும் அவலங்களையும், அச்சம் தரும் கொடியதொரு சூழலையும் கொண்டதேயாகும்.
அழிவு யுத்தம் ஒழிந்து அமைதி தரும் சூழலுக்குள் எமது மக்கள் வாழ்ந்து வரும் இவ்வேளையில், தவறான தலைமைகளினால் எமது மக்கள் அதிக விலை கொடுத்தே இந்த அமைதி தரும் சூழலை அடைந்திருப்பினும், அந்த இழப்புக்களின் துயரங்களில் இருந்து மீண்டெழ எத்தனித்து வரும் நிலையில், கௌரவமானதொரு அரசியல் தீர்வு பெற்று எமது மக்கள் முகமுயர்த்தி வாழும் ஒரு காலச்சூழலை உருவாக்க நாம் தொடர்ந்தும் உழைத்து வரும் இத்தருணத்தில் மறுபடியும் இங்கு எமது மக்களின் இயல்பு வாழ்வை சிதைக்கும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கிறீஸ் மனிதன் என்றும், மர்ம மனிதன் என்றும் எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களில் திட்டமிட்டு சில இடங்களை தெரிவு செய்து அங்கெல்லாம் அச்சம் தரும் சில நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

இது தவிர, இவைகள் குறித்த பொய்யான வதந்திகளும் திட்டமிடப்பட்ட வகையில் பரப்பப்பட்டு பதற்றம் நிறைந்த ஒரு சூழலை உருவாக்கும் கபட நாடகங்களும் அரங்கேறி வருகின்றன. 

அச்சம் தரும் சூழல் ஒழிந்து, அமைதி எங்கும் நிலவ வேண்டும் என்று கருதி எமது மக்களின் இயல்பு வாழ்க்கை சுதந்திரத்தின் மீது அக்கறை கொண்டு உழைத்து வரும் நாம் எமது மக்கள் இன்று புதிதாக முகம் கொடுத்து வரும் மர்ம மனிதன் பீதி குறித்து மனத்துயரம் அடைகின்றோம்.

கொடிய வன்முறைக் கலாசாரம் என்பது மறுபடியும் இங்கு உருவாகி விடாமல் தடுப்பது,  அரசாங்கம், மற்றும் பாதுகாப்பு படையினருக்கும், எமது மக்களுக்கும் இடையிலான நல்லுறவை வளர்ப்பது, அதன் ஊடாக அமைதி வழி நின்று இணக்கமான அரசியல் மூலம் எமது மக்களுக்கான சகல உரிமைகளையும் பெறுவது அழிந்து போன எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவது. இவைகளுக்காகவே நாம் இன்று நடை முறைச்சாத்தியமான வழிமுறையில் உழைத்து வருகின்றோம்.

இந்நிலையில், எமதும், எமது மக்களினதும், இந்த விருப்பங்களுக்கு மாறாக, நடத்தப்பட்டு வரும் மர்ம மனிதன் குறித்த பீதிகள் சிலருக்கு இனிப்பான செய்திகளாக இருப்பதையே காண முடிகின்றது.

ஆகவே இந்நிலையில் இருந்து எமது மக்களை மீட்டெடுப்பதற்காக, சட்டம் நீதி ஒழுங்குகளை எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் நிலை நிறுத்துவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாப ராஜபக்ச ஆகியோருடன் நாம் இவைகள் குறித்து விரிவாக எடுத்து விளக்கியிருக்கின்றோம்.

மர்ம மனிதன் குறித்த பீதி எமது மக்களை விட்டு விரைவாக அகற்றப்பட வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு மற்றும் தனிமனித பாதுகாப்பு போன்றவை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், திட்டமிட்டமிட்ட வதந்திகள் பரப்பப்படுவதற்கான சூழல் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும் நாம் அரசாங்க உயர்மட்ட பிரதிநிதிகளோடு தொடர்பு கொண்டு வலியுறுத்தி வருகின்றோம்.

இதே வேளை எதிர்காலத்திலும் இது போன்ற சம்பவங்கள் மட்டுமன்றி களவு கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் நடவாது தடுப்பதற்காக கிராமங்கள் தோறும் விழிப்புக்குழுக்களை அமைக்கும் நடவடிக்கையிலும் துரிதமாக செயலாற்றி வருகின்றோம்.

இவ்வாறு தெரிவித்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த கால பேரழிவு என்ற பெரும்புயலில் இருந்து மீட்டு வரப்பட்ட எமது மக்கள் இன்று புதிதாக நிலவும் நெருக்கடிகளில் இருந்தும் விரைவாக மீட்கப்படுவார்கள் என்பது உறுதி என்றும் இது குறித்த நம்பிக்கையோடு அனைவரும் சேர்ந்துழைப்போம் என்றும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: