சனி, 3 செப்டம்பர், 2011

ஆசிரியை 14 வயது மாணவனை நிர்வாணமாக்கி அடித்ததால் மாணவன் தற்கொலை

ஆசிரியை   மாணவனை நிர்வாணமாக்கி அடித்து உதைத்ததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை சென்னை : ஆசிரியை அவமானப்படுத்தியதால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, பொதுமக்கள் மறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை டி.பி.சத்திரம் டி.பிளாக்கை சேர்ந்தவர் மோகன் (40), ஆட்டோ டிரைவர். கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் 14ம் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:

என்னுடைய மகன் ராகுல் (14), புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள இஎல்எம் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தான். கடந்த மாதம் 12ம் தேதி, ஆசிரியை நித்யாவின் செல்போன் தொலைந்து விட்டதால் என் மகன் உள்பட 9 மாணவர்களை ஆசிரியை விசாரித்தார். ஒரு மாணவன், ராகுல் மெமரி கார்டு வைத்திருந்ததாக ஆசிரியையிடம் கூறியிருக்கிறான். ஆத்திரம் அடைந்த ஆசிரியை, ராகுலை தனி அறையில் அடைத்து வைத்து நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து மிரட்டியிருக்கிறார்.

உடலில் காயத்துடன் ராகுல் அழுதபடியே வீட்டுக்கு வந்தான். நாங்கள் விசாரித்த போது, ராகுல் விஷயத்தை கூறினான். மேலும் நாங்கள் வீட்டில் இல்லாதபோது எலி மருந்தை குடித்து விட்டான்.  அவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். கடந்த 14ம் தேதி ராகுல் இறந்துவிட்டான்.  உடனே பள்ளி நிர்வாகம் என்னை அழைத்து ரூ.5 லட்சம் தருகிறோம். நீங்கள் போலீசில் புகார் செய்ய வேண்டாம் என்றனர்.

எனது மகனின் சாவுக்கு காரணமான ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மோகன் புகார் செய்தார். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் ராகுலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்தவர்கள் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் பவானீஸ்வரி, உதவி கமிஷனர் லாயிட் சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியம், முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரின் சமரச முயற்சிக்கு பின் மக்கள் மறியல் கைவிடப்பட்டது. இஎல்எம் மேல்நிலைப் பள்ளி தாளாளர் விபி சார்லஸ், ஏற்கெனவே நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: